• Latest News

    February 09, 2014

    பிச்சைக்காரனுக்கு புண்ணைப்போல முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தேவைப்படுகின்றன

    சஹாப்தீன் -
    முஸ்லிம்களின் பிரச்சினைகள் தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பேசப்படுகின்ற கருப் பொருளாகவே அரசியல் கட்சிகளுக்கு இருந்து கொண்டிருக்கின்றன. தாங்கள் எதிர் கொள்ளுகின்ற பிரச்சினைகளை முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும், ஏனைய கட்சிகளும் தேர்தல் காலங்களில் பேசி தங்களின் உணர்வுகளைத் தூண்டி, வாக்குகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள். பின்னர், முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி தெரியாதவர்களைப் போன்று இருந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற சிந்தனை முஸ்லிம் வாக்காளர்கள் மற்றும் புத்திஜீவிகள் என எல்லா மட்டத்தினரிடமும் இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கது.
    தற்போது, மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இத்தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை ஏதோ ஒரு வகையில் குறிவைத்துக் கொண்டு அரசியல் கட்சிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
    ஐ.தே.க முஸ்லிம்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளையும், அதற்கு தீர்வு கிடைக்காதிருக்கின்றதனையும் முன் வைத்து, முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு மத்திய மாகாண சபையின் உறுப்பினர் அஸாத்சாலியின் அரச எதிர்ப்புப் பிரச்சாரம் கூடிய பயனைத் தருமென்று அக்கட்சி எண்ணிக் கொண்டிருக்கின்றது.
    சிங்கள வாக்காளர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்த வாக்குகள் மூலமாக மேல் மாகாண சபையின் வெற்றிக் கம்பத்தை அடைந்து கொள்ளலாமென்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கருதுகின்றது. இந்த வெற்றியை உறுதி செய்து கொள்ள வேண்டுமாக இருந்தால், சிறுபான்மை மக்களின் வாக்குகள் ஐ.தே.கவுக்கு சென்றடைந்து விடக்கூடாதென்பதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதிக கரிசனையுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்காககவே அரசாங்கத்தில் பங்காளிகளாக இருந்து கொண்டிருக்கின்ற கட்சிகள் தனித்து தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவும். ஆசீர்வாதமும் அளிக்கப்பட்டுள்ளது.
    இவ்வாறு பெரிய தேசிய கட்சிகள் முஸ்லிம்களின் வாக்குகளை பற்றி கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் இன்றைய தேர்தல் கால சூழலில், மேல் மாகாணத்தில் போட்டியிடுகின்ற முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் வேட்பாளர்களும் முஸ்லிம்களின் வாக்குகளில் அதிக பட்சமான வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்ற குறிக்கோளைக் கொண்டவர்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
    முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக முஸ்லிம்கள் எதிர் கொண்டிருக்கும் பிரச்சினைகளைப் பற்றி மேடை போட்டுப் பேசிக் கொண்டிருப்பதனையும், அதற்கான தீர்வுகளை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் முஸ்லிம் அமைச்சர்களும், கட்சிகளின் தலைவர்களும் மேல் மாகாணத்தில் கதை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
    பிச்சைக்காரன் காலில் உள்ள புண்ணைப் போன்று, முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும், கட்சிகளுக்கும் முஸ்லிம்களிடையே பிரச்சினைகள் தேவைப்படுகின்றன. அப்பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு முடியாதவர்காக உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தலைமைகளும் அப்பிரச்சினைகளை தங்களின் அரசியல் முகவரிக்கு வித்துக்களாகவே கருதிக் கொண்டிருக்கின்றார்கள்.
    இன்று முஸ்லிம்களுக்கு காணிப் பிரச்சினைகள், மத விழுமியங்களைப் பின்பற்றி நடப்பதில் பிரச்சினைகள், ஹலாலான உணவுகளை உற்பத்தி செய்வதில் பிரச்சினைகள் என பல பிரச்சினைகளை எதிர் கொண்டிருக்கின்றார்கள். தொடர்ச்சியாக முகங் கொடுத்துக் கொண்டிருக்கும் இப்பிரச்சினைகளுக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
    இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் அரசியல் தலைமைகள் இன்று மேல் மாகாணத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கு முஸ்லிம்கள் வாழ்கின்ற தோட்டங்களுக்கு சென்று, ஒவ்வொரு வீடுவீடாக வாசல்படி ஏறி வாக்குகளை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
    தங்களுக்கான சுகபோகங்களை பெற்றுக் கொடுக்கின்ற முகவர்களாகவே முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் வாக்காளர்களை நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மக்களின் காலடிக்கு வருகின்ற அரசியல்வாதிகளின் வீட்டுக் கதவுகள் 24 மணித்தியாலங்களும் திறந்ததாகவே இருந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் முடிந்ததும், அவர்களின் வீட்டுக் கதவுதகள் நிரந்தரமாக பூட்டப்பட்டுவிடும். வாக்களித்தவர்கள் தங்களின் பிரச்சினைகளை சொல்லுவதற்கு பல தடவைகள் முஸ்லிம் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும், அலுவலகங்களுக்கும் சென்று, அவர்களை சந்திக்க முடியாது திரும்பிய பல சோகக் கதைகள் இருந்து கொண்டிருக்கின்றன.
    இத்தகையவர்கள், தங்கள் கட்சிகளில் பழைய முகங்களுடன் சில புதிய முகங்களையும் வேட்பாளர்களாக போட்டியிடச் செய்துள்ளார்கள். இவர்கள் தேர்தல் பிரச்சார மேடைகளில் வீரர்களாக அரசாங்கத்தையும், அதன் செயற்பாடுகளையும் விமர்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். மாற்றுக் கட்சிகளையும், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அமைப்புக்கள் பற்றியும் காரசாரமாக எள்ளி நகையாடிக் கொண்டிருக்கின்றார்கள். மக்களும் கைககளை தட்டி வாக்குகளை வழங்குவார்கள். கடைசியில் நடப்பது எதுவுமில்லை.
    மேல் மாகாண சபைக்கான தேர்தல் அறிவிப்பு செய்யப்பட்டவுடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றி அதிகம் பேசிக்  கொண்டிருக்கின்றார்கள். பயங்கவாத நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட, மரணமடைந்த முஸ்லிம்களை பற்றியும் விசாரணைகள் நடைபெற வேண்டுமென்று எல்லா முஸ்லிம் கட்சகளும் கோரிக்ககைகளை முன் வைத்துக் கொண்டிருக்கின்றன.
    இதே வேளை, முஸ்லிம் விரோதப் போக்கை பின்பற்றிக் கொண்டிருக்கும் பௌத்த இனவாத அமைப்புகளின் நடவடிக்கைகள் மேல் மாகாண சபைக்கான தேர்தல் அறிவித்தவடன் ஒரு அமைதி நிலைiயில் இருந்து கொண்டிருப்பதனையும் காண்கின்றோம். இந்த அமைதி நிலையை நடைபெற்று முடிந்துள்ள ஒவ்வொரு தேர்தலிலும் அவதானிக்க முடிகின்றது.
    தேர்தல் காலங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களை எடுத்துக் கூறுவதும். பௌத்த கடும்போக்கு அமைப்புக்களின் நடவடிக்கைகள் அமைதி அடைந்து விடுவதும், தேர்தல் முடிந்து சில நாட்களில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதும், முஸ்லிம் அரசியல் தலைமைகள் மௌனமாக இருப்பது. சில வேளைகளில் வெறும் அறிக்கைகளை ஊடகங்களில் விடுப்பதும் வழக்கமாகி விட்ட நிகழ்வுகளாகவே இருந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலை முஸ்லிம் அரசியல்வாதிகளின் மீது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.
    தேர்தல் காலங்களுக்கு முன்னதாகவே வராத சமூகப்பற்றும், முஸ்லிம்களின் பிரச்சினைகளின் மீதான அக்கரையும் தேர்தல் காலங்களில் மாத்திரம் ஏன் வருகின்றது என்று ஒவ்வொரு முஸ்லிம் வாக்காளரும் சிந்திக்க வேண்டும். சிந்திக்காத சமூகம் முன்னேற்றமடைந்து கொள்ளாது. முஸ்லிம் வாக்காளர்கள் தங்களின் பிரதிநிதிகளாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை பற்றி சிந்திக்க வேண்டும். அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதனைச் செய்துள்ளார்கள் என்று பார்க்க வேண்டும்.
    முஸ்லிம் வேட்பாளர் என்பதற்காக வாக்களிக்க முடியாது. அவர் வெற்றி பெற்றதன் பின்னரும் முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதியாகவும், செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படாது இருக்கின்றவர்களுக்கு முஸ்லிம் என்பதற்காக வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளாக முகவரி பெற்றுக் கொடுப்பதில் எந்தப் இலாபமும் முஸ்லிம் சமூகத்திற்கு கிடையாது. மாறாக, முஸ்லிம்களுக்கு நஸ்டங்களே ஏற்படும். இதனை கடந்த காலங்களில் மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
    சிறுபான்மையினருக்கு எதிரான சட்ட மூலங்களுக்கும். முஸ்லிம் சமூகத்தை பாதிக்கின்ற சட்ட மூலங்களுக்கும் முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதிகள் கண்களை மூடிக் கொண்டு கைகளை உயர்த்தி ஆதரவு அளித்த பதிவுகள் ஏராளமகவே இருக்கின்றன.
    ஆகவே, மேல் மாகாண சபை முஸ்லிம் வாக்காளர்கள் முஸ்லிம்களின் பிரதிகளை பாதுகாக்கின்ற அதே வெளை, தாம் வாக்களிக்க இருக்கும் வேட்பாளர் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக செயற்படுவாரா, அவருக்கு அந்த ஆற்றலும், தில்லும் இருக்கின்றதா என்று ஆராய்ந்தே வாக்களிக்க வேண்டும். இதனை விடுத்து, முஸ்லிம் கட்சி என்றோ, தேசிய கட்சி என்றோ, அரசாங்கக் கட்சி என்றோ, வேட்பாளர் நண்பர் என்றோ, உறவினர் என்றோ, வாக்களிப்பதற்கு பணம் தந்தார் என்றோ மதிப்பீடுகள் செய்து வாக்களித்தால் முஸ்லிம்கள் இன்று இழந்து நிற்கின்றவைகளை விடவும் அதிகமானவற்றை இழக்க வேண்டிவரும். பொறுப்பற்ற முஸ்லிம் தலைமைகளினால்தான் முஸ்லிம்கள் இன்று பலத்த சவால்களுக்கு முகங் கொடுக்க நேர்ந்துள்ளது என்பதனை மேல் மாகாண முஸ்லிம்கள் கருத்திற் கொண்டு தங்களின் வாக்குகளை பயன்படுத்த வேண்டும். சமூகத்திற்கு துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டாத வரையில், முஸ்லிம்களின் அரசியலை தூய்மைப்படுத்த முடியாது.
    (09.02.2014 வீரகேசரி)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிச்சைக்காரனுக்கு புண்ணைப்போல முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தேவைப்படுகின்றன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top