சஹாப்தீன் -
மேல்மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் சிதறடிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாகக் காணப்படுகின்றன. இந்நிலையில் முஸ்லிம்களின் வாக்குகளை மாத்திரம் குறிவைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மேல் மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானத்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்பது ஆச்சரியமானதல்ல. ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிட இருப்பது அதிசயமானதாகும். அக்கட்சி மேல்மாகாண சபைத் தேர்தலில்தான் முதன்முதலாக தனித்துப் போட்டியிடுகின்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்று அழைக்கப்படுகின்ற கட்சி, முதலில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் என்றுதான் அழைக்கப்பட்டது. தமது கட்சியில் உள்ள முஸ்லிம் என்ற சொல் எதிர் காலத்தில் தொல்லையாக அமையலாம் என்ற அச்சத்தின் காரணமாக முஸ்லிம் என்ற பதத்தை நீக்கிவிட்டு, மக்கள் என்று சேர்த்துக் கொண்டார்கள்.மேல்மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் சிதறடிக்கப்படுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாகக் காணப்படுகின்றன. இந்நிலையில் முஸ்லிம்களின் வாக்குகளை மாத்திரம் குறிவைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மேல் மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானத்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது என்பது ஆச்சரியமானதல்ல. ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து போட்டியிட இருப்பது அதிசயமானதாகும். அக்கட்சி மேல்மாகாண சபைத் தேர்தலில்தான் முதன்முதலாக தனித்துப் போட்டியிடுகின்றது.
இக்கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்தவர்களைக் கொண்டதாக இருக்கின்ற அதே வேளை, இக்கட்சிதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு சவாலாக வளர்ந்து கொண்டு வருகின்ற கட்சியாகவும் இருக்கின்றது. இதன் வளர்ச்சிக்கு ஆளுங் கட்சியின் பங்களிப்பு அதிகமாகவே இரக்கின்றது. முஸ்லிம்களிடையே உள்ள கட்சிகளுள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு அடுத்த படியாக அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களையும், மாகாண சபை உறுப்பினர்களையும், உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களையும் கொண்டதொரு கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்தான் திகழ்கின்றது.
அரசாங்கத்தின் ஆதரவுடன் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டு வருகின்ற இக்கட்சி முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றியும், உரிமைகளைப் பற்றியும் கதைத்துக் கொண்டாலும், அவற்றிக்கு தீர்வு காண்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் போன்று, தோல்வியடைந்ததொரு கட்சியாகவே இருக்கின்றது. தற்போது இக்கட்சி, மேல் மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, அங்கும் தமது செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு வலை வீசிக் கொண்டிருக்கின்றது.
இது வரைக்கும் தனித்து போட்டியிட்டு, தமது கட்சியின் சின்னம் மயில் என்று அடையாளப்படுத்துவதற்கு தயக்கம் காட்டிக் கொண்ட, இக்கட்சி, தமக்கு செல்வாக்குள்ள மாவட்டங்களில் தனித்துப் போட்டியிடாது, மேல்மாகாண சபையில் தனித்து போட்டியிட தீர்மானித்து இருப்பது ஆளுந் தரப்பினரின் தேர்தல் தந்திரமாகவே இருக்கின்றது. மேல்மாகாண சபையின் அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இலகுவாக பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்கான ஒரு காய் நகர்த்தலாகவே இது இருக்கின்றது.
இலங்கையின் இன்றைய அரசியல் சூழ்நிலையில், முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும் போக்கு மதகுருமார்களின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் முஸ்லிம்களின் மனதை வெகுவாக பாதித்துள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவி;லலை என்பது முஸ்லிம்களிடம் காண்படுகின்ற பரவாலன மனக்குறையாக இருந்து கொண்டிருக்கின்றது. இதனால், முஸ்லிம்கள் ஆட்சியாளர்களின் மீதும், முஸ்லிம் அமைச்சர்கள் மீதும் விசனம் கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள்.
குறிப்பாக, பொது பல சேன போன்ற பௌத்த கடும்போக்கு அமைப்புக்களின் நடவடிக்கைகளினால், அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மேல்மாகாண முஸ்லிம்களாவார்கள். ஆளுந் தரப்பை பொறுத்தவரை, பெரும்பான்மையினரின் அதிகபட்ச வாக்குகளை எல்லா தேர்தல்களிலும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையை இறுக்கமாக பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். இதனால், பௌத்த கடும்போக்காளர்களை கட்டுப்படுத்தி, அவர்களின் பின்னால் இருக்கின்ற இனவாதவாக்குகளை இழப்பதற்கு ஆளுந் தரப்பினர் விரும்பவில்லை. அது மட்டுமன்றி, ஆட்சியும், அதிகாரமும் சிறுபான்மையினரின் ஆதரவுடன் அமையக் கூடாதென்பதிலும், அவர்கள் உறுதியாகவே இருக்கின்றார்கள். சிறுபான்மையினக் கட்சி, ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து கொண்டு, அரசாங்கத்தை அடிபணிய வைப்பதனை ஆளுந் தரப்பினர் ஒரு போதும் விரும்பவில்லை.
முஸ்லிம் மக்களிடையே காணப்படுகின்ற மனக்குறைவோடு தொடர்புடைய உணர்வலைகள் காரணமாக ஐ.தே.கவுக்கு அதிகமான முஸ்லிம்கள் வாக்களித்து வி;ட்டால், அது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றியை கடினமாக்கிவிடும். இன்றைய முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியி;ட்டாலும், முஸ்லிம்களின் வாக்குகளை கவர்ந்து கொள்வதற்கு, முஸ்லிம்களை மிகச் சரியாக திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கும், முஸ்லிம் அமைச்சர்களுக்கும் இருக்கின்றன. அவ்வாறு திருப்திபடுத்த விளைந்தால், பௌத்த கடும் போக்கு அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கிவிடு சூழ்நிலைகளும் அதிகமாகவே காணப்படுகின்றன.
இந்த சிக்கலில் இருந்து, தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு இருக்கின்ற ஒரேயொரு வழி, முஸ்லிம் கட்சிகளை தனித்து போட்டியிடச் செய்வதாகும். இத்திட்டத்தைத்தான் ஆளுந் தரப்பினர் அமுல்படுத்தியுள்ளனர். இதன்காரணமாகவே, தங்களை துணிச்சல் மிக்கவர்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் காண்பித்துக் கொண்டிருக்கின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துதான் போட்டியிட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டால், அதனை மீறும் சக்தி இக்கட்சியினரிடம் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
இதே வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட எடுத்துள்ள தீர்மானம் ஆச்சரியமானதாக இருக்காது விட்டாலும், ஜனாதிபதி மேல் மாகாண சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்புவிடுத்தார் என்றும், அதனை தாங்கள் மறுத்துவிட்டதாகவும் ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். ஆனால், இணைந்து போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஜனாதிபதி கட்டாயப்படுத்தி இருக்கமாட்டார் என்பது உண்மையாகும்.
ஏனெனில், அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையாகவும், மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் இரண்டு பேரை அமைச்சர்களாக பெற்றிருக்கும் கட்சியாகவும், அரசாங்கத்தினை நொந்து கொள்ளாமலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்ற பெயரில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாகவே தம்மை காட்டிக் கொண்டிருக்கும் அமைச்சர் றிசாட்பதியுதீன் தலைமையிலான கட்சியை தனித்துப் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி அனுமதித்துள்ளார் என்பது, அரசாங்கத்திற்கு இலாபம் இருப்பதனாலாகும். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது அரசாங்கத்தின் தேர்தல் வெற்றிக்கு பாதகமாக அமையுமென்றால், நிச்சயமாக, அக்கட்சி அரசாங்கத்துடன் இணைந்தே போட்டியிடும் என்பதில் ஐயமில்லை.
இதே போன்றுதான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் பேர்டியிடுவது அரசாங்கத்திற்கும் அக்கட்சிக்கும் இலாபமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து போட்டியிட்டால், தனித்துப் போட்டியிடுவதன் மூலமாக கிடைக்கும் வாக்குகளை விடவும், குறைவான வாக்குகளே கிடைக்கும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் பலத்த அதிருப்தி கொண்டிருக்கின்றார்கள்.
அரசாங்கத்டதிற்கு எதிரான முஸ்லிம் வாக்குகள் ஐ.தே.கவுக்கு செல்வதனை தடுப்பதற்காக வகுக்கப்ப்பட்டுள்ள திட்டத்தில் முஸ்லிம்கள்தான் இரையாகப் போகின்றார்கள். முஸ்லிம்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கு சிதறடிக்கப்படும் போது, மேல்மாகாணத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவடைந்துவிடும்.
முஸ்லிம்களின் வாக்குகளை பிரித்து, குரங்கு அப்பம் திண்ட கதையினைப் போன்று அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதற்கு முஸ்லிம் கட்சிகளும், அரசியல்வாதிகளும் களம் அமைத்துக் கொண்டிருக்கும் அதே வேளை, சில முஸ்லிம் அமைப்புக்கள் முஸ்லிம்களை குறைத்து மதிப்பி;ட்டு, அறிக்கைகளைவிடுத்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
அதாவது, எதிர்வரும் பெப்ரவரி 04ஆந் தேதி இலங்கையின் 66வது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கின்றது. இத்தினத்தில் இலங்கை முஸ்லிம்கள் தாய் நாட்டின் மீதான பற்றுதலை வெளிப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுதல் வேண்டும் என தேசிய ஷுரா கவுன்சில் முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கவுன்சிலின் இக்கோரிக்கை, முஸ்லிம்கள் தாய் நாட்டின் மீது இதற்கு முதல் பற்றுக் கொண்டவர்களாக இருக்கவில்லை என்ற அர்த்தத்தை மறைமுகமாக சுட்டி நிற்பதாக இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் அமைப்புக்களின் வாய்களுக்கு இனிப்புப் போட்டமாதிரியும் இருக்கின்றது.
இலங்கை முஸ்லிம்கள் தாய் நாட்டின் மீதான பற்றுதலை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டுமென்று கூறுவதனை தவிர்த்து, முஸ்லிம்கள் அனைவரும் தங்களின் வீடுகள், வியாபார நிலையங்களில் தேசிய கோடியை ஏற்ற வேண்டுமென்று கோரிக்கை விடுவதுதான் சரியானதாகும். இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாத அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு, இவ்வாறான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டாலும், அதன் அடுத்த பக்கத்தையும் சிந்திக்க வேண்டும்.
இலங்கையில் இது வரை நடைபெற்ற எந்தவொரு சுதந்திர தினத்தையும் முஸ்லிம்கள் புறக்கணிக்கவில்லை. வடக்கு, கிழக்கில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் மோலோங்கி இருந்த போது, சுதந்திர தினத்தில் தேசிய கொடி ஏற்றக் கூடாதென்று விடுதலைப் புலிகள் கண்டிப்பான உத்தரவிட்ட வேளையிலும், முஸ்லிம் பிரதேசங்களில் பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களில், வீடுகள் பலவற்றிலும், வாகனங்களிலும் முஸ்லிம்கள் தேசிய கொடியை ஏற்றினார்கள்.
மேலும், முஸ்லிம்கள் ஒரு போதும் பிரிவினையை விரும்பவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றுமையுடன் வாழவே விரும்புகின்றார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சி செய்து கொண்ட அரசாங்கங்கள் முஸ்லிம்களை பாரபட்சமாக நடத்திய போதிலும், முஸ்லிம்கள் இலங்கை அரசாங்கங்களை வெளிநாடுகளிடம் காட்டிக் கொடுக்கவில்லை.
முஸ்லிம் அமைப்புக்களும், அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் பேரினவாதிகளையும், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளையும் திருப்திபடுத்துவதற்கு எண்ணுகின்றார்களே அன்றி, முஸ்லிம்களின் தன்மானம், கௌரவம், கடந்த கால வரலாறு போன்றவற்றைப் பற்றி சிந்திப்பதில்லை. முஸ்லிம்களை இனவாதிகள் எப்படி பார்க்கின்றார்களோ, அதே போன்று காட்டுவதற்கே முஸ்லிம் அமைப்புக்களினதும், கட்சிகளினதும், அரசியல்வாதிகளினதும் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

0 comments:
Post a Comment