பெரும்போக வேளாண்மைச் செய்கை தொடர்பான முன்னோடிக் கூட்டத்தில் கே.எல் 20 முதல் கே.எல்.27 வரையான வாய்க்கால்களின் ஊடாக நீர்ப்பாசனம் வழங்க முடியாததனால் குறித்த வாய்க்கால்களின் ஊடாக நீரைப்பெறுகின்ற வயற்காணிகளுக்கு வேளாண்மை செய்வதற்கான அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற தீர்மானத்தினால் தாம் முழுமையாகப் பாதிக்கப்படுவதாக பாலமுனையைச் சேர்ந்த விவசாயிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு மூலமாக திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பைஷல் காசிம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பாக அம்பாரை மாவட்ட நீர்பாசன பணிப்பாளரின் அலுவலகத்தில் நீர்பாசன பணிப்பாளரான நிகால் ஜயதிலகவை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில் பாலமுனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் தலைவர் அல்-ஹாஜ் ஐ.எல்.சுலைமாலெப்பை விவசாயக் குழுவின் தலைவர் ஹபீப் முஹம்மட் ஆகியோருடன் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் பைஷல் காஷிம் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை நீர்பாசனப் பணிப்பாளரிடம் முன்வைத்தார்.கே.எல் 20 முதல் கே.எல் 27 வரையான வாய்க்கால்களினூடாக நீர்ப்பாசனம் பெறும் காணிகள் யாவும் பாலமுனையைச் சேர்ந்த ஏழை விவசாயிகளின் காணிகள் என்பதனால் இவ்வாய்க்கால்களினூடாக நீர்ப்பாசனம் வழங்காது போனால் பாலமுனைக் கிராமமே வறுமைக்குள்ளாக வேண்டியேற்படும் என்பதனையும், தனியே ஒரு கிராமத்தின் விவசாயிகள் பாதிக்கப்படுவதான தீர்மானம் அசாதாரணமானது என்பதனையும் விளக்கிய பாராளுமன்ற உறுப்பினர் அம்மக்களுக்கான தீர்வினை உள்ளடக்கி தீர்மானம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

0 comments:
Post a Comment