• Latest News

    March 25, 2014

    முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்க முன்வர வேண்டும்

    ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பேருவளை பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் களுத்துறை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபைத் தேர்தல் வேட்பாளருமான பைஸான் நைஸர்   உடனான நேர்காணல்....

     கேள்வி - தங்கள் அரசியல் பிரவேசம் பற்றி கூறுங்கள் ?

    பதில் -  நான் படிக்கின்ற காலம் முதல் சமூக சேவையில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன். இதனால் மக்களோடு மக்களாக ஒன்றித்து சமூக சேவையில் ஈடுபட்டு வந்ததால் எனக்கு களுத்துறை மாவட்ட மக்களின் சுக துக்கங்களில் பங்கெடுக்கும்  வாய்ப்பு  கிடைத்தது. அப்போது பளீல் ஹாஜியாரின் அரசியல் பணிகளில் நானும் இணைந்து உதவியாக செயற்பட்டேன். இந்த பின்னணிதான் நான் அரசியலுக்கு வந்து மக்களுக்கு
    சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை தந்ததனால் கடந்த 2006 ஆம் அண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தேர்தலில் குதித்து சுமார் 13 ஆயிரம் வாக்குகளை அப்போது பெற்று பேருவளை பிரதேச சபை உறுப்பினராக தெரிவானேன். இதன் பின்னர் எனது அரசியல் பிரவேசம் மூலமாக தொடர்ந்தும் சிறப்பாக செயற்படும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.



    கேள்வி – தற்போதய மேல்மாகாண சபைத் தேர்தலில்  ஆளும் கட்சியிலிருந்து விலகி முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து தேர்தல் வேட்பாளராக வந்திருக்கிறீர்கள். தேர்தலில் வென்ற பிறகு மீண்டும் ஆளும் தரப்பிற்கு மாறமாட்டீர்களா ?



    பதில் – உண்மையில் இவ்வாறான ஒரு பிரளியை சில அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் விதைத்திருக்கின்றார்கள். இது என்மீது கொண்ட பொறாமையின் காரணமாவே விதைக்கப்படுகிறது. தேர்தல் நெருங்குகின்ற இறுதி வேளையில் களுத்துறை வாழ் ஏழை மக்களும்இ நல்ல சிந்தனையுள்ளவர்களும் என்மீது நம்பிக்கை வைத்து என்னால் ஒருபோதும் மக்கள் ஏமாற்றப்பட மாட்டார்கள். என்ற நம்பிக்கையில் இன்று எனது வெற்றியை உறுதி செய்து வருகிறார்கள். இதனை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களின் கட்டுக்கதையே இந்த கட்சி மாறுவேன் என்ற நாடகமாகும். உண்மையில் நான் அனுபவித்த சகல சுகபோகங்களையும் விட்டெறிந்துவிட்டு வந்திருக்கின்றேன். வெற்றிபெற்ற பிறகு ஒருபோதும் நான் மக்களை ஏமாற்றிவிட்டு கட்சி மாறமாட்டேன்.

    நான் ஆளும் கட்சியிலிருந்து  பேருவளை பிரதேச சபை மக்களுக்கு எனது சக்திக்குட்பட்ட வகையில் அதிக சேவையாற்றியுள்ளேன். பிரதேசத்தில் ஏற்படும் பிரச்சினைகள், தேவைகளை அறிந்து மக்களின் காலடிக்குச் சென்று  தீர்வு பெற்றுக்கொடுத்திருக்கின்றேன். இதனால் மக்களின் பேராதரவு எனக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை உண்டு.  ஆனால்  வெறுமனே அபிவிருத்தி என்ற மாயைக்காக  எமது சமூகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்கும் நிலையிலிருந்து விலக கிடைத்த வாய்ப்பாக நான் இதனை கருதுகிறேன்.

    தற்போதைய அரசாங்கம் வக்கிர புத்தி கொண்ட இனவாதக்குழுக்களால் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுத்தப்படும் ஒடுக்குமுறைகள், அநீதிகள், கெடூரங்களை கண்டும் காணாததுபோல் செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இச்சூழ்நிலையில் பதவி பட்டங்களை வீசிவிட்டு  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து எமது சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க முன்வந்திருக்கின்றேன்.

    கேள்வி – பிரதேச அரசியல் வாதியான பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லமுடனான உங்களின் உறவு பற்றி கூறுங்கள் ?

    பதில் – தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் அப்போது மாகாண சபை உறுப்பினராக இருந்தவர். இவரது இடத்தை நிரப்ப அவர் இப்பிரதேச மக்களுக்கு செய்த சேவைகளின் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினரின் முழு ஆதரவுடன் நானும் அவருடன் இணைந்து  சேவையாற்றுவேன்.

    கேள்வி- கட்சி மாறியுள்ள உங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் வாக்களிப்பார்களா ?

    பதில் – ஒன்றை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். நான் முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்காக குரல் கொடுக்கும் எண்ணத்தில் ஆளும் கட்சியிலிருந்து விலகி, அஸ்லம் எம்.பி உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கியே கட்சி மாறியிருக்கிறேன். இதற்காக களுத்துறை மாவட்டத்தின் எனது ஆதரவாளர்களின் கருத்தினையும் பெற்றுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கின்றேன். சகலரும் எனக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

    கேள்வி - முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்காக குரல்கொடுப்பதனை இலக்காகக்கொண்டு தேர்தலில் குதித்திருக்கும் நீங்கள் எதிர்காலத்தில் இப்பிரதேச அபிவிருத்தியை எவ்வாறு மேற்கொள்ளவுள்ளீர்கள் ?

    பதில் – உரிமை விடயத்தில் மட்டுமல்ல முன்புபோன்று எமது பிரதேச பாடசாலைகளின் கட்டிட வசதிகள், மாணவர்களுக்கான பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கவும், பாதைகள், வடிகான்கள், மின்சாரம், விளையாட்டுத்துறை போன்ற விடயங்களிலும் அதிக அக்கறை எடுக்கவுள்ளேன். வறிய குடும்பங்களுக்கான நிவாரண திட்டம், சுகாதார மேம்பாடு போன்ற பல அபிவிருத்தித்திட்டங்களை மாகாண சபைக்கு தெரிவானால் என்னால் செய்ய முடியும். அதனற்கான திட்டங்கள் என்னிடமுண்டு.

    கேள்வி – மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் பிரபல்யங்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதால் இவர்கள் உமக்கு சவாலாக அமையமாட்டார்களா ?

    பதில் – உண்மையில் இத்தேர்தலை நான் ஒரு சவாலாகவே ஏற்றுள்ளேன். நான் பிரதேச சபையிலிருந்து செய்த சேவைகள் ஏராளம். மக்கள் என்மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதனால் அதனால் சவால்கள் நிறைந்த இந்த பயணத்தில் எவரது சவாலையும் சமாளிக்கக்கூடிய சக்தியை மக்கள் எனக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுண்டு.

    கேள்வி - பேரினவாத சக்திகளின் கொடூரங்களுக்கு மத்தியில் இலங்கை வாழ் மக்களுக்கு  என்ன கூற விரும்புகிறீர்கள் ?

    பதில் - ஒரு இனம் மற்ற இனத்தவரின் உரிமைகள், மத அனுஷ்டானங்கள்  விடயத்தில் விட்டுக்கொடுப்புடனும், பரஸ்பரம் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும். இதன்மூலமே நாட்டில் நிலையான சுதந்திரத்தைப் பெற்றவர்களாக மாறலாம். பேரினவாத சக்திகளுக்கு இது பேரிடியாக அமையும்.  அத்துடன் இம்முறைத் தேர்தல் மூலம் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்க முன்வர வேண்டும்
    நேர்காணல் - எஸ்.அஷ்ரப்கான்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்க முன்வர வேண்டும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top