எஸ்.றிபான் -அமெரிக்கா ஜெனிவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றினை மீண்டும் கொண்டு வர உள்ளது. இந்நிலையில் இலங்கையில் மேல்மாகாண சபை மற்றும் தென்மாகாண சபைகளுக்கான தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசாங்கத்தில் உள்ள கட்சிளிடையே பலத்த சொற்போர்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தாக்கிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
அமைச்சர்கள் சம்பிக்கரணவக்க, விமல்வீரவன்ச, பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா போன்றவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கடும் விமர்சனத்திற்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக பேசி தங்களின் வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்கு எண்ணுகின்றார்கள்.
ஐ.நாவின் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு வருகை தந்த போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த இனவாத அமைப்புக்களினாலும், பௌத்த இனவாத தேரர்களினாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயல்களைப் பற்றியதொரு அறிக்கையை வழங்கியுள்ளது. அரசாங்கத்திற்கு தெரியாமல் மிகவும் இரகசியமாக வழங்கப்பட்ட இந்த அறிக்கையில் உள்ள விடயங்களையும் நவனிதம்பிள்ளை தனது அறிக்கையில் உள்ளடக்கிய இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனால், அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் பலரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கிமை கிழித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாட்டைக் காட்டி கொடுத்து விட்டதாகவும், நாட்டிற்று துரோகம் செய்து விட்டதாகவும், அக்கட்சி அரசாங்கத்தை விட்டுவிலக வேண்டும் என்றெல்லாம் நாளாந்தம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இவ்வாறு தாக்கிப் பேசினால், முஸ்லிம்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து, அக்கட்சியின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்று தெரிந்து கொண்டுள்ள இவர்கள், தங்களின் இந்த விமர்சனங்களினால் சிங்களவர்களின் வாக்குகளை அதிகம் பெற்று தங்களின் வெற்றியை உறுதி செய்து கொள்ளவே மேற்படி அமைச்சர்கள் கருத்துக்களை முன் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆளும் கட்சியில் உள்ள அமைச்சர்களின் இந்த விமர்சனங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கிம் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார். முஸ்லிம் சமூகத்தின் மீது தங்களுக்குள்ள அக்கரையையும், பொறுப்பையும் தானும், தமது கட்சியும் மறக்கவில்லை என்று வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் சிவாஜி பேசுவதனைப் போன்று பேசிக் கொண்டிருக்கின்றார்.
ஆனால், நவநீதம்பிள்ளையிடம் வழங்கிய அறிக்கையை வழங்கிய பெருமை கட்சியின் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலியையே சாரும். நவநீதம்பிள்ளை இலங்கை வந்திருந்த போது, முஸ்லிம்கள் பற்றியதொரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று ஹஸன்அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரிடம் கேட்டுக் கொண்ட போது, ரவூப் ஹக்கிம் அதனை விரும்பவில்லையாம். அவ்வாறு வழங்கினால் ஜனாதிபதி ஆத்திரப்படுவார் என்றெல்லாம் சொல்லி, அறிக்iகையை வழங்குவதில் நாட்டம் காட்டாதவராகவே இருந்துள்ளார்.
ஆயினும், ஹஸன்அலி காட்டிய தீவிரத்தின் காரணமாகவே நவநீதம்பிள்ளையிடம் குறிப்பிட்ட அறிக்கை சமர்ப்பிகப்பட்டதாகவும் மு.காவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நவநீதம்பிள்ளையிடம் அறிக்கை வழங்கியதனைப் பற்றி ஜனாதிபதி கோபத்துடன் பேசியதாகவும், அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு கெட்அவுட் என்று சொன்னதாகவும் ஊடகங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது. அத்தோடு, குறிப்பிட்ட அறிக்கையை வழங்கியது தானில்லை என்றும், கட்சியின் செயலாளர்தான் வழங்கினார் என்று சிறுபிள்ளைத்தனமாக அப்பாவித்தனம் காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
தங்களின் கட்சியில் உங்களின் கட்டளைக்கு கட்டுப்படாதவர்கள் இருப்பதனைப் போன்று, என்னுடைய கட்சியிலும் எனது கட்டளைக்கு கட்டுப்படாதவர்கள் இருக்கின்றார்கள். அவர்களை என்னால் யாதும் செய்ய முடியாதென்று ஜனாதிபதியிடம் விளக்கம் கொடுத்ததாகவும் பேச்சுக்கள் உள்ளன. இது உண்;மையாயயின் ரவூப் ஹக்கிம் எந்தளவிற்கு தமது கட்சிக்காரர்களை காட்டிக் கொடுக்கின்றார் என்பதனை புரிந்து கொள்ளலாம். சில வேளைகயில், ஹஸன்அலியின் அறிக்கைக்கு மாற்றமாக மற்றுமொரு அறிக்கையை அவர் வழங்கினாலும் வழங்குவார் என்பதாகவே இருக்கின்றது.
இந்தப் பின்னணியில் அரசாங்கத்திற்கும், மு.காவிற்மிடையே கருத்து முரண்பாடுகள தோன்றி இருப்பதனால் அக்கட்சி அரசாங்கத்தை விட்டு விலகுமா என்ற கதை இலங்கையின் அரசியலில் இந்நாட்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
என்ற போதிலும், மு.கா அரசாங்கத்தை விட்டு விலகும் முடிவில் இருப்பதாக தெரியவில்லை. நாங்கம் அரசாங்கத்தை விட்டுவிலக மாட்டோம். அரசாங்கம் விரும்பினால் எங்களை விளக்கலாமென்று ரவூப் ஹக்கிம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்.
மு.காவை அரசாங்கத்தில் இருந்து விலக்கும் நோக்கம் இல்ரை என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மு.காவை அரசாங்கத்தில் இருந்து விலக்கி, தமது பெயரை மேலும், சர்வதேச மட்டத்தில் மோசமாக்கிக் கொள்வதற்கு அரசாங்கம் விரும்பாது. ஆனால், எதிர்கட்சி போன்று நடத்தப்படுகின்ற மு.காவை, மேலும், ஓரங்கட்டி வைத்துச் செயற்படும் போக்கை அரசாங்கம் கடைப்பிடிக்கலாம். இதனால், சமாதான நீதவான் பதவிகளையும் வழங்க முடியாத நிலை ரவூப் ஹக்கிமுக்கு ஏற்படலாம்.
இதே வேளை, அரசாங்கத்தைவிட்டு நாங்கள் விலகமாட்டோம் என்று ரவூப் ஹக்கிம் தெரிவிப்பது, இது முதற் தடவையல்ல. இதற்கு முதலும் பல தடவைகள் இதே கருத்தையே தெரிவித்து வந்துள்ளார். மு.கா அரசாங்கத்தில் ஒரு எதிர்கட்சி போன்று இருந்து கொண்டிருந்தாலும், அரசாங்கத்தில் இருந்து விலகும் எண்ணம் ஒரு துளியேனும் இல்லை. அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்ளும் முடிவினை ரவூப் ஹக்கிம் எடுத்துக் கொண்டாலும், அவரின் முடிவுக்கு ஹஸன்அலி மட்டுமே உடன்படுபவராக இருப்பார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடனேயே இருப்பர். மு.கா எதிர்கட்சி போன்று இருந்தாலும், அக்கட்சியின் பாராhளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து அதிக இலாபம் அடைந்து கொண்டிருக்கின்றார்கள். அதனை இழப்பதற்குரிய சமூகப் பொறுப்பும், தலைமைத்துவ விசுவாசமும், கட்சிப்பற்றும் மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கிடையாது.
இதே வேளை, நவநீதம்பிள்ளையிடம் முஸ்லிம்களைப் பற்றிய அறிக்கையினை மு.காவின் செயலாளர் ஹஸன்அலி வழங்கிய போது, அதனை இரு மனத்துடன் ஏற்றுக் கொண்ட ரவூப் ஹக்கிம், இந்தளவிற்கு பூதாகாரமாக மாறுமென்று எதிர் பார்க்கவில்லை. அது ஒரு இரகசியமானதொரு ஆவணமாக இருக்கும் என்றே எண்ணிக் கொண்டார். ஆனால், நவநீதம்பிள்ளை தன்னுடைய அறிக்கையில் அதனை சேர்த்துக் கொள்வார் என்று எதிர் பார்க்கவில்லை.
இவ்வாறு இருக்கின்ற போதிலும், அமெரிக்கா ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரஇருக்கின்ற பிரேரணையை எதிர் கொள்வதற்காகன அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பௌஸி போன்ற அமைச்சர்களை முஸ்லிம் நாடுகளுக்கு அனுப்பியும் வைத்தது. ஆனால், முஸ்லிம் நாடுகளிடம் இலங்கைக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொண்டுக் கொண்ட போது, அந்நாடுகள் மு.காவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையை காட்டுவதாகவும், பள்ளிவாசல்கள் தாக்கப்படும் போது, முஸ்லிம்களின் மீது நெருக்கடிகளை ஏற்படுத்தும் போது, நாங்கள் எப்படி ஆதரவு வழங்க முடியுமென்று கூறியதாக அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாத அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இலங்கை முஸ்லிம் நாடுகளின் ஆதரவை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதனை மிகவும் தெளிவாக உணர்ந்துள்ள போதிம், அரசாங்கம் முஸ்லிம்களின் விடயங்களில் அதிக அக்கரை காட்டுவதாகயில்லை. மாடு அறுக்கக் கூடாதென்று போராட்டங்களை நடத்துகின்றனர். அண்மையில், கொழும்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்று மூடப்பட்டுள்ளது. இப்படியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் இலங்கைக்கு மேலும், பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருக்கும்.
இதே வேளை, அமைச்சர் றிசாட் போன்றவர்கள், மு.காவை ஜனாதிபதி கெட்அவுட் என்று தெரிவித்துக் கொண்ட போதும், அரசாங்கத்தில் அவர்கள் இருப்பதற்கு வெட்கமில்லையா என்று தேர்தல் மேடைகளில் பேசிக் கொண்டிருக்கின்றார். ஆனால், அவர் மு.காவினால் வழங்கிய அறிக்கை பொய்யானதென்று கூற அவரால் முடியவில்லை. அரசாங்கத்தில் இருக்கும் எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் சமூகத்திற்காக இருக்கவில்லை. அவர்கள் தங்களின் பதவி ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவே அரசாங்கத்தில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். அதே வேளை, அரசாங்கத்தில் தான்மட்டும் இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றார்கள். முஸ்லிம்களின் மீது மேற்கொள்ளப்படும் நெருக்குவாரங்களை தடுப்பதற்கு முடியாதவர்களாக இருக்கின்றவர்கள் மு.கா அரசாங்கத்தை விட்டு விலக வேண்டும். ரோசம் இல்லையா என்று கேட்கின்றார்கள். முஸ்லிம்களுக்கு அநீயாயங்கள் பல நடந்து கொண்டிருக்கும் நிலையில் எந்த அமைச்சருக்கும்; ரோசம்வரவில்லை. முஸ்லிம்களின் மீது நெருக்குவாரங்கள் எற்பட்ட போது ரோசம்வராதவர்கள் மற்றவர்களிடம் ரோசத்தைப் பற்றி கேட்பது வெட்கப்பட வேண்டியதாகும்.
முஸ்லிம் விடயத்தில் இன்றுள்ள முஸ்லிம் மக்கள் பிரதிகள் எவருக்கும் ரோசமில்லை என்பதே உண்மையாகும். தமது சமூகத்திற்கு எதிராக நடக்கும் சம்பவங்களையிட்டு வெட்கப்படாதவன் சமூகத்தின் தலைவனாக, பிரதிநிதியாக இருப்பதற்கான தகுதியை இழந்தவனாகவே இருப்பான். வெட்கம்தான் மனிதனை தலைநிமிர்ந்து வாழ வைக்கும்.
நன்றி:விடிவெள்ளி

0 comments:
Post a Comment