மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடி காணியில்
கொழும்பு மாநகர சபை தடை உத்தரவினையும் மீறி கட்டட நிர்மாணப் பணிகள்
தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட் டது.
நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வரும்
இடத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மேல் மாகாண சபை
உறுப்பினர்களான மக்கள் விடுதலை முன்னணி கே.டி.லால் காந்த, ஐக்கிய தேசிய
கட்சியின் முஜிபுர் ரஹ்மான் பைரூஸ் ஹாஜி மற்றும் கொழும்பு மாநகர சபை
உறுப்பினர் எம். ஷிராப்தீன் உட்பட மாளிகாவத்தை வாழ் முஸ்லிம்கள் பலர்
கலந்து கொண்டனர்.
சுமார் 11 வருடங்களுக்கு முன்பு
கொழும்பு மாநகர சபையினால் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் 19.5
பேச்சர்ஸ் காணிகள் உபாலி ஜயசிங்க என்பவருக்கு விற்கப்பட்டமை பெரும்
சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதி
கொழும்பு மாநகர சபையினால் குறித்த காணியில் நிர்மாணிக்கப்பட்டு
வருகின்ற கட்டடத்திற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும்
அக்கட்டிட நிர்மாணப்பணிகள் இதுவரையிலும்
நிறுத்தவில்லையென்றும் இது தொடர்பில் கொழும்பு மாநகர சபை அதிகாரம்
பிரயோகிக்காதது ஏன்? எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள்
கேள்வியெழுப்பியமை குறிப்பி டத்தக்கது.
இவ்வார்ப்பாட்டத்தின்போது மேல் மாகாண சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
முஜிபுர் ரஹ்மான்
கொழும்பு மாநகர சபையினால் 2003ம் ஆண்டு
மாளிகாவத்தை மையவாடியின் 19 பேர்ச்சஸ் காணி உபாலி ஜயசிங்க
என்பவருக்கு விற்கப்பட்டது. தற்போது குறித்த நிலப்பரப்பில் கட்டட
நிர்மாணிப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த மார்ச்
மாதம் 10 திகதி கட்டட நிர்மாண பணிகளை நிறுத்த வேண்டுமென உத்தரவிட்ட
போதும் தொடர்ந்து இக்கட்டட நிர்மாணப்பணிகள் இடம்பெற்று
வருகின்றன.
இந்நிலையில் இந்நாட்டின் சட்டத்தை
எவரும் மதிப்பதில்லை என்பதனையே இச்சம்பவம் எடுத்துக்
காட்டுகின்றது. பலவந்தமான முறையில் இக்காணிகளை கைப்பற்றி
சட்டத்தை மதிக்காமல் இவ்வாறு முரட்டுத்தனமாக செயற்படுவதனை
எக்காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே குறித்த கட்டிட நிர்மாணப்பணிகளை
உடனடியாக நிறுத்த வேண்டும் இல்லையேல் அடுத்த வெள்ளிக்கிழமை
பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை இங்கு ஒன்று சேர்ப்போம் என்றார்.
லால் காந்த
கொழும்பு நகரில் வனாத்த முல்ல
கொம்பனித்தெரு போன்ற பகுதிகளில் வீடுகள் உடைக்கப்பட்டு காணிகள்
அபகரித்ததைப் போன்று மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக் காணிகளையும்
அபகரிக்க முற்படுகின்றனர். மையவாடி காணிகளை கூட விட்டு வைப்பதாக
தெரிவதில்லை.
தற்போது கட்டிட நிர்மாணப்பணிக்கு தடை
உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் கூட நிர்மாணப்பணிகள்
நிறுத்தப்படவில்லை. எமது நாட்டின் சட்டத்துறை இத்தகைய
நிலைமையிலேயே காணப்படுகின்றது. எனவே இது தொடர்பில் கொழும்பு மாநகர
சபை பொறுப்புடன் செயற்பட வேண்டும். இத்தகைய செயற்பாட்டினால் கொழும்பு
வாழ் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
எனவே இத்தகைய மோசடியான கொடுக்கல்
வாங்கலுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு செல்வதுடன்
சத்தியாக்கிரக போராட்டத்திலும் ஈடுபடவுள்ளோம் என்றார்.
இதேவேளை இத்தகைய செயற்பாட்டினால் கொழும்பு
வாழ் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை
உறுப்பினர் மொஹமட் ஷராப்தீனும் கருத்து தெரிவித்தார்.
வீரகேசரி-
0 comments:
Post a Comment