• Latest News

    April 05, 2014

    சர்வதேச விசாரணையில் எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை: அமைச்சர் மஹிந்த சமரசிங்க


    அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்குலக நாடுகளால் இலங்கைக்கெதிராக பிரேரணை கொண்டு வரப்படுவதற்கு முன்பு அரசாங்கம் எந்த நிலைப்பாட்டிலிருந்ததோ அதே நிலைப் பாட்டிலேயே தொடர்ந்தும் இருக்கிறது எனவும், சர்வதேச விசாரணையில் எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை எனவும், உள்ளக விசாரணைகளை நாம் தீவிரப்படுத்தியுள்ள இச்சந்தர்ப்பத்தில் இதன் மூலமாக நியாயத்தை நிலைநிறுத்த முடிவுமென நாம் உறுதியாக நம்புகின்றோமென இலங்கையின் விசேட பிரதிநிதியான பெருந்தோட்டத் துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

    ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக் குழுவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 11 மேலதிக வாக்குகளால் நிறை வேற்றப்பட்டுள்ள போதும் இலங்கைக்கெதிரான சர்வதேச விசாரணையை ஆணையாளர் நவி பிள்ளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதெனவும் சர்வதேச விசாரணைகளை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள தயாரில்லாத நிலையில் ஆணையாளர் நவி பிள்ளையினால் விசாரணைகளை பலவந்தமாக எம்மீது திணிக்க இயலாது எனவும் அமைச்சர் சமரசிங்க கூறினார்.

    நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பலகோணங்களிலும் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், "செனல் 4" ஒளிப்பட நாடா தொடர்பில் இராணுவ விசாரணைக் குழு, காணாமற் போனவர்களைக் கண்டறிவதற்கான காணாமற் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு, திருகோண மலையில் ஐந்து மாணவர்களின் கொலை தொடர்பிலான விசேட விசாரணைகளென உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆவணங்களை பரீட்சித்த வண்ணமுள்ளன. உள்ளக விவகாரங்கள் குறித்த அனைத்து விசாரணைகளையும் நேர்மையாக முன்னெடுப்பதன் மூலம் குற்றச்சாட்டு களுக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து காரணகர்த்தாக்களுக்கு நியாயமான தண்டனையினைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

    உள்ளக விசாரணைகள் நியாயமாகவும் நேர்மையாகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேச விசாரணை அவசியப்படாது எனவும் அமைச்சர் சமரசிங்க வலியுறுத்தினார்.

    சர்வதேச விசாரணையென்ற பெயரில் எமது செயற்பாடுகளுக்குள் விரலையிட்டு நாட்டில் குழப்ப நிலையினை உண்டுபண்ண வேண்டுமென்பதே மேற்குலக நாடுகளின் விருப்பமாகும். இதற்காகவே, இவர்கள் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டுமென ஒரே பிடியாக இருப்பதுடன் பலவந்தமாக ஏனைய நாடுகளையும் தமது பிரேரணைக்கு சார்பாக வாக்களிக்க வைத்துள்ளனர்.

    சர்வதேச விசாரணை இலங்கைக்கு பொருத்தமில்லாத ஒரு விடயம் ஆகும். இதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன் பொறுப்பேற்கப் போவது மில்லை. நவி பிள்ளை தலைமையிலான விசாரணைகளுக்கு நாம் எந்த வகையிலும் தயாரில்லாத அதே சமயம் இதனை முன்னெடுப்பதற்கு நாம் இடம் வழங்கப் போவதில்லையெனவும் அமைச்சர் உறுதியாக தெரிவித்தார். நவி பிள்ளை இலங்கை வருவதற்கு அரசாங்கம் ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்த போதிலும், அவர் இங்கு வந்து இலங்கை குறித்த தவறான கருத்துகள் அடங்கிய அறிக்கையினையே சர்வதேசத்திற்கும் மனித உரிமைகள் ஆணைக் குழுவிற்கும் முன்வைத் திருந்தார்.

    இந்நிலையில், எதற்காக அவர் மீண்டும் இலங்கை வர அனுமதிக்க வேண்டு மெனவும் அவர் கேள்வியெழுப்பினார். அப்படியே எமது நாட்டிற்கு அவர் வந்தாலும் இலங்கை குறித்த பிழையான அறிக்கையினையே அவர் மீண்டும் முன்வைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே அவர் மீண்டும் நாட்டிற்குள் வருவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்காது. நவி பிள்ளை மட்டுமல்ல, எந்தவொரு வெளிநாட்டுப் பிரதிநிதியும் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி நாட்டிற்குள் வர முடியாது எனவும் அமைச்சர் கூறினார்.

    உள்ளக விசாரணைகளை நீதி அடிப்படையில் நேர்மையாக முன்னெடுப் பதன் மூலம் நல்லிணக்கச் செயற் பாடுகளை முன்னரிலும் அதிக சக்தி மிக்கதாக உருவாக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. இதன் அடிப்படையில் நாட்டில் மீண்டும் எல். ரீ. ரீ. ஈ. பயங்கரவாதம் தலைதூக்காத வகையிலும் அனைத்தின மக்களும் சமூக, சமய, மொழி வேறுபாடுகளின்றி இலங்கையரென்ற தனித்துவத்துடன் வாழ்வதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயலாற்றுமெனவும் அமைச்சர் கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சர்வதேச விசாரணையில் எமக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை: அமைச்சர் மஹிந்த சமரசிங்க Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top