சுலைமான் றாபி-
உணர்வுகள் என்பது இனம், மதம், பேதம் மற்றும் மொழி எல்லாவற்றையும் கடந்து
மதிக்கப்படவேண்டியதொன்றாகும். அதனை தருணம் பார்த்து செய்வதென்றால் அந்த
உணர்வுகள் உயிரோடு இருக்க வேண்டும். அதனைத்தான் நாம் நேற்றைய தினம்
இடம்பெற்று முடிந்த உலக T20 கிரிக்கெட் போட்டியின் இறுதி நிகழ்வில்
அவதானித்தோம்.
உண்மைதான். ஒரு திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி
காந்த் சொல்லுவதைப்போல்.. கண்ணா.... பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம்!
சிங்குலாதான் வரும்! என்ற பஞ்ச் டயலொக்கினை நேற்றைய தினம் (06.04.2014)
டாக்காவில் இடம்பெற்று முடிந்த உலக T20 கிரிக்கெட் போட்டியின் இறுதியில்
செயல் வடிவமாக எடுத்துக் காட்டினார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தேசியத்தலைவர் றஊப் ஹக்கீம் அவர்கள். உண்மையில் முஸ்லிம்களின் உரிமை
மற்றும் உடமை விடயத்தில் கடந்த காலங்களில் காரசாரமாகப் பேசி, பல
எதிர்ப்புக்களையும், பாராட்டுதல்களையும் பெற்ற போதும், அவைகள் சூடு
தணியாமல் இருக்கும் வேளை, யாரும் எதிர்பாராமல் வர வேண்டிய நேரத்தில கரக்டா
வந்து ஒரு கலக்குவ கலக்கி விட்டு, ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகங்களில்
விசுவாசத்தினை சர்வதேசதிற்கும், இலங்கை தீவிற்கும் வெகுவாக கொண்டு
சென்றார்.
"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" என்பது போல,
கடந்த காலங்களில் முஸ்லிம்களைப் பற்றிய தப்பபிப்பிராயங்களும், முஸ்லிம்கள்
இந்த நாட்டுக்கு துரோகம் இழைக்கின்றனர், அவர்கள் இந்த நாட்டைக்
காட்டிக்கொடுகின்றனர் என்று கூவித்திரிந்தவர்களுக்கு கொடுக்கும் மரண அடியாக
மு.கா தலைவரின் தோன்றல் இருந்தது. இலங்கை வாழ் முஸ்லீம்கள் எந்த
சந்தர்ப்பத்திலும் தங்கள் தாய் நாட்டிற்கு எதிரானவர்கள் அல்லர் என்பதனை
தெளிவாக புடம் போட்டுக்காட்டும் ஒரு படலமாக அது அனைவராலும் அவதானிக்கப்
பட்டது. அதேவேளை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை டாக்காவில் கண்டபோது ஒரு கணம்
"றஊப் ஹக்கீம்" என்றே அனைவரும் சொன்னார்கள். அந்த வேளை இலங்கை முஸ்லீம்கள்
அனைவரும் பேரினவாதிகளுக்கு எதிராக ஏதோ ஒன்றினை சாதித்துக்காட்டிய வரலாற்று
நிகழ்வாக அவதானிக்கப்பட்டது. இதன் மூலம் எமது தேசமும் எழுச்சி பெற்றது.
அரசியல் மேடைகளில் மட்டும் றஊப் ஹக்கீம் முஸ்லிம்களின்
உரிமைகள் பற்றி வாய் கிழிய கத்திக் கொண்டு, அதன் மூலம் அவர்களை
இந்நாட்டிற்கு எதிரானவர்கள் என்ற கொள்கையில் அமர்த்தியுள்ளார் என்ற தப்பான
கருத்துக்களை பேரினவாதிகள் இட்டுச்சென்ற போது, அவர்களின் வாய்களுக்கு
பூட்டுப் போட்டு தனிக்காட்டு ராஜாவாக தாய்நாட்டுப் பற்றினை நன்றாகவே
வெளிப்படுத்தினார். ஆனால் இவைகள் இலங்கை முஸ்லீம்களால் மெச்சப்பட்டாலும்
கடந்த காலங்களில் இலங்கை முஸ்லீம்களின் மீது இனவெறியர்களால் கட்டவிழ்த்து
விடப்பட்ட பல அசௌகரிய சம்பவங்களுக்கு மு.கா தலைவர் மௌனியாகவே செயற்பட்டு
வந்தது இன்னும் முஸ்லிம்கள் மத்தியில் மாறாத வடுவாகவே இருந்து வந்தவேளை
தேர்தல் காலங்களில் முஸ்லீம்கள் மத்தியில் கொக்கரிக்கத் துவங்கினார்.
இவையெல்லாம் அவரின் அரசியல் தந்திரமாக இருந்தாலும் எப்படியாவது முஸ்லிம்
சமூகங்களின் இருப்பையும், அவர்களின் உரிமைகளையும், அவர்களின் உடமைகளையும்
பாதுகாத்துக் கொடுக்க வேண்டும் என்பதிலே அவரின் அனைத்துச் செயற்பாடுகளும்
பின்னூட்டமாக அமைந்தது எனலாம்.
மேலும் T20 உலகக்கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரிப்பதற்கு
போட்டிகள் ஆரம்பமான முதலே ஒட்டு மொத்த முஸ்லீம்கள் தங்கள் தங்கள்
கரங்களில் தேசிய கொடிகளை கரமேந்தி இலங்கையின் வெற்றிக்காக
பிரார்த்தித்தார்கள். இறுதியில் இலங்கை அணி வெற்றிவாகை சூடியபோது அன்றைய
இரவே பிரதான வீதிகளிலும், உள் வீதிகளிலும் பட்டாசு கொழித்தியும், மகிழ்ச்சி
ஆரவார பேரணிகள் மூலமாகவும் தங்கள் விசுவாசத்தினைக் காட்டினார்கள்
என்பதற்கு இதுவே போதுமான ஆதாரமாக இருக்கின்றது.
இலங்கை முஸ்லீம்கள் அரசியல் கொள்கை செயற்பாடுகளிலே
மாற்று சிந்தனையுடன் செயற்பட்டாலும், தங்கள் தாய் நாட்டை நேசித்து அந்த
நாட்டை பாதுகாக்க வேண்டும் என்பதிலே கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.
அதற்காக வேண்டித்தான் பல முஸ்லிம் அரசியல் தலைவர்களும், சமூகவியலாளர்களும்,
கல்விமான்களும் கடந்த காலங்களில் செயற்பட்டார்கள். இதே ஒரு நிலையைத்தான்
நேற்றைய கிரிக்கெட் வெற்றியின் மூலம் பிரிவினைகள் எல்லாவற்றையும்
பிரித்தெறிந்து, பேரினவாதத்திற்கு பேரிடியான செயற்பாட்டினை வழங்கி சர்வதேச
சமூகங்களுக்கும், இலங்கை வாழ் ஒட்டு மொத்த சமூகங்களுக்கும் முஸ்லிம்
காங்கிரஸ் தலைமை சிறந்த வரலாற்று பாடத்தினைப் புகட்டியுள்ளது.
இனி, இலங்கை முஸ்லீம்களையோ அல்லது அதன் தலைமையையோ
தூசிக்க நினைக்கும் சக்திகளுக்கு விலங்கிட்டு, முஸ்லீம் தேசியத்தைக்
காக்கும் தலைவனாகவும், தேசத்தைக் காக்கும் தலைவனாகவும் உலா வர வேண்டும்
என்பதே ஒட்டு மொத்த மக்களின் எதிர்பார்ப்பாகும்.

0 comments:
Post a Comment