• Latest News

    April 08, 2014

    சாதனை வீரர்களுக்கு இன்று மகத்தான வரவேற்பு! காலிமுகத்திடல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

    சுலைமான் றாபி;
    பங்களாதேஸில் இடம்பெற்ற T20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான இலங்கை அணி வீரர்களுக்கு இன்று மகத்தான வரபேற்பு அளிக்கப்படவுள்ளது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்தை மீளப் பெற்ற இலங்கை கிரிக்கட் அணியினர் இன்று செவ்வாயக்கிழமை பி.ப. 4.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்க உள்ளார்கள்.

    விமான நிலையத்தில் வரவேற்கப்பட்ட பின்னர் திறந்த பஸ் வண்டியொன்றில் ஏற்றப்பட்டு நீர்கொழும்பு பழைய வீதியின் ஊடாக மேள, தாளங்களுடன் காலிமுகத்திடலுக்கு அழைத்து வரப்படுவார்கள்.

    அங்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையில் கிரிக்கட் வீரர்களுக்கு கோலாகலமான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

    உலக வெற்றிக் கிண்ணத்தை பெற்றிருக்கும் இலங்கை அணியினருக்கு சர்வதேச கிரிக்கட்  சபை 14 கோடி ரூபாவை பரிசாக வழங்கியிருக்கிறது. அத்துடன், மேலதிகமாக சிறிலங்கா கிரிக்கட் அமைப்பு இந்த வீரர்களின் சாதனையைப் பாராட்டி மேலும் 20 கோடி ரூபாவை பரிசாக வழங்க உள்ளது.

    இலங்கையின் கிரிக்கட் வரலாற்றில் இதுவே முதல் தடவையாக இவ்வளவு பெருந்தொகை கிரிக்கட் அணிக்கு அன்பளிப்பாக கொடுக்கப்படவுள்ளது.

    தற்போது இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு கொடுக்கும் சம்பளத்திற்கு மேலதிகமாகவே இந்த அன்பளிப்பும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    அடுத்த சில நாட்களில் அரசாங்கம் இலங்கை கிரிக்கட் அணியை சேர்ந்த வீரர்களுக்கு மேலும் ஒரு பெருந்தொகையை பரிசாக வழங்க இருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

    இலங்கை அரசாங்கம் விளையாட்டுத்துறைக்கு அளித்துவரும் ஊக்கத்தினால் தான், இலங்கை அணி மீண்டுமொரு தடவை உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டிருக்கிறதென்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

    கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தவுடன் இலங்கை அணியினர் கெளரவமாக வரவேற்கப்படுவதற்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

    20 ஓவர் போட்டிகளில் இருந்து இளைப்பாறவுள்ள மஹேல ஜயவர்தனவும், குமார் சங்கக்கார ஆகியோருக்காக சிறிலங்கா கிரிக்கட் நிறுவனம் இன்னுமொரு விசேட கெளரவிப்பு நிகழ்வினையும் ஒழுங்கு செய்யவுள்ளது.

    20 ஓவர் போட்டியில் உலகில் முதல் தடவையாக 1000 ஓட்டங்களை பெற்ற சாதனையை மஹேல ஜயவர்தன பெற்றுள்ளார்.

    இறுதிப் போட்டியில் குமார் சங்கக்கார அரை சதம் அடித்து சாதனை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

    2009, 2012ம் ஆண்டிலும் 20 ஓவர் உலகக் கிண்ணப் கிரிக்கட் போட்டியில் இலங்கை இறுதி ஆட்டத்திற்கு வந்து தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

    லசித் மாலிங்க இலங்கை கிரிக்கட் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்ட இரண்டாவது போட்டியிலேயே அவரது அணி உலக சம்பியனாகியது பாராட்டுக்குரிய விடயமாகும்.

    ஒற்றுமையாக கிரிக்கட் அணியினர் விளையாடியதனால் இந்த சாதனையை ஏற்படுத்த முடிந்ததென்று சர்வதேச கிரிக்கட் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாதனை வீரர்களுக்கு இன்று மகத்தான வரவேற்பு! காலிமுகத்திடல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top