லதீப் பாரூக் -
பொதுபல சேனா- மியன்மார் அஷின் விராது
கூட்டணி ரோஹிங்யா பாணித் தாக்குதலை நோக்கி இலங்கை சரிகிறதா? : இஸ்லாம்
விரோத இனவாத அமைப்பான பொது பல சேனா மற்றும் பர்மாவின் குருதித் தாகம்
பிடித்த, ஆயிரக் கணக்கான
ரோஹிங்யா முஸ்லிம்களைப் படுகொலை செய்த
பிக்கு அஷின் விராதுவுக்கும் இடையிலான அண்மைக்கால நெருக்கம், இலங்கையை ஒரு
பெரும் அழிவுக்குள் அழைத்துச் செல்கிறது என்ற நெருடல் எவருடைய மனதிலும்
உருவாக்காமல் இருக்க முடியாது.
இப்பின்னணியில், ரோஹிங்யா பாணியிலான
தாக்குதலொன்று இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்று விடுமோ என்ற பயம்
இலங்கை முஸ்லிம் சமூகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது.
ஏற்கனவே பொது பல சேனா, சிங்ஹல ராவய, ராவண
பலகாய மற்றும் இவற்றின் முன்னோடியாகக் கருதப்படும் ஜாதிக ஹெல உருமய என்பன
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களை
நியாயப்படுத்தும் வகையிலான நச்சு விதைகளை சிங்கள மக்கள் மனதில்
விதைத்தாயிற்று. “1915 இல் இடம்பெற்றது போன்றதொரு சிங்கள- முஸ்லிம் கலவரம்
தவிர்க்க முடியாதது” என்று வேறு ஜாதிக ஹெல உருமயவைச் சேர்ந்த உதய
கம்மன்பில்ல ஒரு தடவை தெரிவித்திருந்தார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக கட்டவிழ்த்து
விடப்பட்டுள்ள முஸ்லிம் விரோதப் பிரச்சாரங்கள், நூற்றாண்டுகள் பழமையான
சிங்கள- முஸ்லிம் உறவில் விரிசல்களை ஏற்படுத்தியிருப்பது போன்றே தெரிகிறது.
தமது சமூகத்திற்கு கடும்போக்குவாதிகளால் உருவாக்கப்பட்டு வருகின்ற
அபாயத்தை உணர்ந்து, சிங்கள சமூகத்தைச் சேர்ந்த பொறுப்பு வாய்ந்த சக்திகள்
விழித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளன. சிங்கள மக்கள் மற்றும் பௌத்த மதத்தின்
பிம்பத்திற்கு பெருமளவிலான சேதத்தை கடும்போக்கு சக்திகள் உண்டு
பண்ணியிருப்பதையும் பலர் ஏற்றுக் கொள்கிறார்கள்.
மறுபுறத்தில், இது சிங்கள- முஸ்லிம்
பிரச்சினை அல்ல என்பதையும், மாறாக சிங்கள சமூகத்தைப்
பிரதிநிதித்துவப்படுத்துவதாகப் போலியாகக் கூறிக் கொண்டு செயற்படுகின்ற ஒரு
சிலரின் வேலை என்பதையும் முஸ்லிம்கள் உணர்கிறார்கள்.
இப்பின்னணியிலேயே மியன்மார் பிக்கு அஷின்
விராதுவை பொது பல சேனா அமைப்பினர் சந்தித்தார்கள். (இவரைத் தான்
அமெரிக்காவில் இருந்து வெளி வருகின்ற டைம்ஸ் சஞ்சிகை ‘Monk of Terror’
(பயங்கரத்தின் பிக்கு) என வர்ணித்திருந்தது).
“நாம் பர்மாவின் பௌத்த பிக்கு அஷின்
விராதுவுடனோ, 969 இயக்கத்துடனோ எதுவித ஒப்பந்தமும் செய்து கொள்ளவில்லை” என
பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி Colombo Telegraph இற்குத்
தெரிவித்தார். சமூக வலைதளங்களில் புகைப்படமொன்றுடன் சேர்த்து, ‘பர்மாவின்
பயங்கவாத அமைப்பான 969 அமைப்புடன் BBS உடன்படிக்கையொன்றுக்கு வந்துள்ளது’
என்ற இணைக்கப்பட்டிருந்த தகவல் போலியானது என அவர் தெரிவித்தார். ‘குறித்த
புகைப்படம் எமது செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே குணானாரசிங்க தேர
விசிடர்ஸ் புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட போது எடுக்கப்பட்ட படமாகும்’ என
அவர் மேலும் தெரிவித்தார். பர்மாவின் பௌத்த பின் லேடன் என பொதுவாக
அறியப்படுகின்ற அஷின் விராது இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஒன்பது நாள் கழித்து ‘அஷின் விராது தேரவைப்
பொதுபல சேனா இலங்கைக்கு அழைக்கிறது’ என்ற தலைப்பில், ருவான் லக்னாத்
என்பவரின் பதிவை 21 மார்ச் 2014 அன்று சிலோன் டுடே பத்திரிகை தாங்கி
வந்தது.
‘பௌத்த பயங்கரவாதத்தின் முகம்’ என டைம்ஸ்
சஞ்சிகையினால் வர்ணிக்கப்பட்டவரும், முஸ்லிம் விரோத செயல்பாடுகளுக்காகப்
புகழ் பெற்ற 969 என்ற மியன்மாரை சேர்ந்த இயக்கத்தின் தலைவருமான அஷின்
விராது தேரர் பொது பல சேனாவின் அழைப்பை ஏற்று நாட்டுக்கு விஜயம் செய்யப்
போகிறார். பொதுபல சேனாவின் செயலாளர் இது தொடர்பில் பின்வருமாறு
தெரிவித்தார்:
இது தொடர்பில் யாரும் குழம்பிக் கொள்ளத்
தேவை இல்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு நாம் உரிய முறையில் அறிவிப்போம். நாம்
அவரை அழைத்திருக்கிறோம். அவர் விஜயம் செய்யவிருக்கின்றார். நாம் அவருடன்
சந்திப்பொன்றை மேற்கொள்வோம். அவ்வளவுதான். அவர் எவ்வளாவு காலம் இங்கு தங்கி
இருப்பார் என்பதை மீடியாக்கள் அறிய வேண்டிய தேவை இல்லை. நாம் அதனைத்
திட்டமிட்டு, பொருத்தமான நேரத்தில் அறிவிப்போம்”.
இச்செய்திகள் குறிப்பாக இலங்கை
முஸ்லிம்களைக் கதி கலங்கச் செய்கின்றன. மியன்மாரில் முஸ்லிம் விரோத
அமைப்பின் தலைவரான அஷின் விராது தமது இனத்துவ ரீதியான மேன்மை குறித்த
கனவில் மிதப்பதில் புகழ்பெற்றவர். பௌத்த பயங்கரவாதத்தின் பின்னணியில்
இருக்கின்ற பிக்கு என டைம்ஸ் சஞ்சிகையால் வர்ணிக்கப்பட்டவர். அவருடைய
இனவாதத்தைக் கக்கும் பேச்சுக்கள் காரணமாக, மியன்மாரில் இன அழிப்பு
நடவடிக்கையை முன் கொண்டு செல்கின்ற ஹிட்லர் பாணியிலான ‘புதிய நாஸி’
ஒருவராகப் பலர் அவரை நோக்குகின்றனர்.
அவரது 969 என்ற முஸ்லிம் விரோத அமைப்பு,
மியன்மார் இராணுவத்துடன் இணைந்து, ஆண், பெண், குழந்தைகள், வயோதிபர்கள் என்ற
வித்தியாசம் இல்லாமல் ஆயிரக் கணக்கானவர்களைக் கொன்று குவித்தது. முஸ்லிம்
பிரதேசங்களை தீக்கிறையாக்கியது. வயது வித்தியாசமல் இல்லாமல் முஸ்லிம்
பெண்களைக் கற்பழித்தது. உடமைகளைச் சூறையாடியது. நூற்றுக்கணக்கான
முஸ்லிம்களின் உடல்களை வங்காள விரிகுடாவிற்குள் வீசி எறிந்தது.
முஸ்லிம்களின் இறந்த உடல்களைக் காவி உடைகளால் சுற்றி, பலியான பௌத்தர்களின்
சடலங்களே அவை என வாதிட்டது.
இத்தகைய ஒருவரையே பொது பல சேனா இலங்கைக்கு
அழைத்திருக்கிறது. இது ஹிட்லர், முஸோலினி, ஏரியல் ஷெரோன் போன்ற சர்வதிகாரி
ஒருவரை நாட்டிற்குள் அழைப்பது போன்றதே….!
இலங்கை மியன்மார் அல்ல. மியன்மார் என்பது
பல தசாப்தங்கள் தனிமைப்பட்டிருந்ததொரு தேசம். உலகத்திடம் இருந்து அது
தன்னைத் துண்டித்துக் கொண்டிருந்தது. ஆயினும், இலங்கைக்கு ஒரு நீண்ட
வரலாறும், நாகரீகமும் உண்டு. அதே போல், மூன்றாம் மண்டல நாடுகளின்
விவகாரங்களில் சிறப்பான பங்கை ஆற்றி, தனக்கென ஒரு நல்ல பெயரையும் அது
சம்பாதித்துக் கொண்டுள்ளது.
முஸ்லிம் உலகம் பாரம்பரியமாக இலங்கையுடன்
நேசபூர்வ உறவையே கொண்டிருக்கின்றது. எமது பொருளாதாரமும் முஸ்லிம்
நாடுகளுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மில்லியன்
இலங்கையர்கள் வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்று, சுமார் ஆறு
மில்லியன் டாலர்களை வருமானமாக நாட்டிற்குப் பெற்றுக் கொடுக்கிறார்கள்.
இவ்வருமானத்தைக் கொண்டு பல வீடுகளில் அடுப்பெரிகிறது. உண்மையில்,
இலங்கைக்குப் பெருமளவு அந்நியச் செலாவணியை உழைத்துத் தருகின்றதொரு துறையாக
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மாறியிருக்கிறது.
பிரச்சினைகளின் போது முஸ்லிம் நாடுகள்
எப்போதும் இலங்கையின் உதவிக்கு வந்திருக்கின்றன. உதாரணமாக, மார்ச் 27 அன்று
ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் இலங்கைக்கு எதிராக,
இறுதிக் கட்ட யுத்தத்தில் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றம்
சுமத்தப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில், முழுமையானதொரு விசாரணை
தேவை எனக் கொண்டு வரப்பட்ட மசோதாவிற்கு எதிராக வாக்களித்த 12 நாடுகளில், 5
நாடுகள் முஸ்லிம் நாடுகளாகும். இவற்றில் பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய
அரபு இராச்சியம், அல்ஜீரியா, மாலைத்தீவு என்பன உள்ளடங்குகின்றன.
வாக்களிப்பில் இருந்து தவிர்ந்து கொண்ட 12
நாடுகளில் நான்கு நாடுகள் முஸ்லிம் நாடுகளாகும். 47 உறுப்பினர்களைக் கொண்ட
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில், எந்தவொரு முஸ்லிம் நாடும் மசோதாவை
ஆதரித்து வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிட்டுக் கூறக்கூடியதொரு அம்சம்.
அநாவசியமானதொரு பிரசாரத்தை முன் கொண்டு
செல்கின்ற சிங்களக் கடும்போக்குவாதிகள், தமது பைத்தியக்காரத்தனமான
நடவடிக்கைகளின் பாரதூரத்தை உணர்ந்து கொண்டிருக்கிறார்களா?
எமது நட்பு ரீதியான உறவை கடும்போக்குவாதிகள் சில நூறு பேரைத் திருப்திப் படுத்துவதற்காக அபாயத்திற்குள்ளாக்கிக் கொள்ள வேண்டுமா?
மியன்மாரின் கசாப்புக் கடைக்காரர்களோடு
இக்கடும்போக்காளர்கள் குசலம் கொண்டாடுவதை அனுமதிப்பது நாட்டிற்கு எந்த
விதத்தில் புத்திசாலித் தனமானதல்ல.
இலங்கையில் இடம்பெற்று வருகின்ற முஸ்லிம்
விரோத பிரசாரங்களை உலகளவில் முஸ்லிம்கள் உன்னிப்பாக அவதானித்தே
வருகிறார்கள். நாம் உலகத்தின் ஒரு பகுதி. கடும்போக்காளர்கள் நினைப்பது
போன்று, உலகம் இலங்கையின் ஒரு பகுதி அல்ல. எவ்வாறாயினும், முஸ்லிம்களுக்கு
எதிரான தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு நாடு என்ன விலை கொடுக்க வேண்டி வரும்
என்பதை சரியாக எதிர்வு கூறுவது சிரமமானதுதான்.

0 comments:
Post a Comment