BBC:இலங்கை பாதுகாப்புப் படையினரால்
தேடப்பட்டு வந்த கோபி என்றழைக்கப்படும் கஜீபன் பொன்னையா செல்வநாயகம்,
மற்றும் தேவியன் என்றழைக்கப்படும் சுந்தரலிங்கம் கஜீபன் ஆகிய இருவர் உட்பட,
மூன்றுபேர் இலங்கையின் வடக்கே வவுனியா
மாவட்டம் நெடுங்கேணி பிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.
விடுதலைப்புலிகளின் இப்போதைய உயர் மட்ட
உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்ட இவர்கள் இராணுவத்தினர் மேற்கொண்டிருந்த
சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையொன்றில் இருந்து தப்பிச் செல்ல
முற்பட்டபோது இராணுவத்தினர் மேற்கொண்ட
துப்பாக்கிப்பிரயோகத்திலேயே
கொல்லப்பட்டிருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய
தெரிவித்துள்ளார். தொடர்புடைய விடயங்கள் இந்தத் தகவலை அரச தகவல்
திணைக்களமும் உறுதி செய்திருக்கின்றது.
கொல்லப்பட்டவர்களில் மூன்றாவது நபர் அப்பன் என்றழைக்கப்படும் விடுதலைப்புலி சந்தேக நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன் இரவு இடம்பெற்ற சம்பவத்தில் இராணுவ
சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதாக முன்னர் வெளியாகிய தகவல் தவறானது என்றும்
அந்த இராணுவ சிப்பாய் வேறு ஓரிடத்தில் இடம்பெற்ற இராணுவ பயிற்சியின் போதே
உயிரிழந்ததாக இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
விடுதலைப்புலிகளை மீண்டும் ஒன்றிணைக்கும்
முயற்சியில் கோபி என்பவர் ஈடுபட்டிருந்ததாகவும், இவர் தன்னைத் தேடிச் சென்ற
பொலிஸ் அதிகாரி ஒருவரை கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வைத்து
துப்பாக்கிச் சூடு நடத்தி காயப்படுத்திவிட்டு தப்பியோடியதாகவும் முன்னர்
அரசாங்கம் தெரிவித்திருந்தது.
தேடப்பட்டு வந்த கோபிக்கு அடைக்கலம்
கொடுத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தர்மபுரம் பகுதியில் இந்த
சூட்டுச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படும் பகுதியில் தனது
வீட்டிலிருந்த ஜெயக்குமாரி என்ற பெண்ணும் அவருடைய 14 வயது மகளும் கைது
செய்யப்பட்டிருந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பயங்கரவாதச்
செயலில் ஈடுபடுபவர்கள் அல்லது, விடுதலைப்புலிகளை மீளவும் ஒன்றிணைக்க
முயற்சிப்பவர்களுக்கு உதவிகள் வழங்கியதாகக் கூறி, 65 பேர் கைது
செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்திருந்தார்.
இவர்களில் 5 பேர் விடுதலை
செய்யப்பட்டுவிட்டதாகவும், மிஞ்சிய 60 பேரில் பத்துப் பேர் பெண்கள் என்றும்
காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது,
0 comments:
Post a Comment