அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் அட்டுல் கெஷப், வெள்ளிக்கிழமை முற்பகல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமை கட்சியின் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
அளுத்கமை, தர்காடவுன், வெயாங்கல்லை, பேருவளை மற்றும் துந்துவை போன்ற பிரதேசங்களில் அப்பாவி முஸ்லிம் மக்களின் உயிர், உடைமை, பொருளாதார என்பவற்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் இதுவென்று எடுத்துக் கூறப்பட்டதை அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் அட்டுல் கெஷப் ஏற்றுக்கொண்டார்.
முன்னெச்சரிக்கைகளை கவனத்தில் எடுக்காமல் சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் மிகவும் அசிரத்தையான இருந்தனர் என்றும், மக்களை தூண்டிவிடும் பாணியில் குரோதக் கருத்துகளை பரப்பிய தீவிரவாத கும்பல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதால் அதனை நாம் மிகவும் அக்கறையுடன் எதிர்பார்த்திருக்கிறோம் என்று அவரிடம் தெளிவுபடுத்தினேன்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்திலும், மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலும் இவ்வாறான சமய நல்லிணக்க தீர்மானத்திலும் இவ்வாறான நடவடிக்கைகளை தடுப்பதற்கு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்று கூறினேன்.
பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி இன்னும் கூட தகவல் கிடைத்தவண்ணம் இருப்பதாக கூறப்பட்டது. கண்டிப் பகுதியிலும் ஒரு பள்ளிவாசல் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
அமைச்சரவையிலும் நாங்கள் இவை தொடர்பான விடயங்களை தெளிவாக எடுத்துக் கூறியதாகவும், இந்த விவகாரத்தில் சர்வதேசம் காட்டும் ஆர்வத்திற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என்றும் கூறப்பட்டது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதி உதவிச் செயலாளர் அட்டுல் கெஷப், தாம் இத்தகைய விவகாரங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவதாக என்னிடம் தெரிவித்தார்.
இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் கூறினார். இந்தச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், கிழக்கு மாகாண அமைச்சருமான ஹாபீஸ் நஸீர் அஹமதும் கலந்துகொண்டார்.
அப்துல் ஹபீஸ்

0 comments:
Post a Comment