• Latest News

    June 19, 2014

    இலங்கை அளுத்கம வன்முறை: முஸ்லீம் பகுதிகளில் கடையடைப்பு

    வவுனியா பகுதியின் ஹர்த்தால்வவுனியாவில் நடந்த ஹர்த்தால்
    இலங்கையின் தெற்கே அளுத்கம பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல்களைக் கண்டித்தும், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரியும் இலங்கையில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கடையடைப்பு நடந்துவருகிறது.

    நாடுதழுவிய அளவில் இந்த பணிபுறக்கணிப்பை மேற்கொள்ளுமாறு முஸ்லிம்களின் உரிமைகளுக்கான அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.


    தலைநகர் கொழும்பிலும், வடக்கே வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களிலும் இந்தக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. மன்னார் நகரில் தமிழ் வர்த்தகர்களும் இந்தக் கடையடைப்பில் ஈடுபட்டிருந்த போதிலும், ஏனைய இடங்களில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மட்டுமே பூட்டப்பட்டிருந்தன.

    சிறுபான்மை இனத்தவராகிய முஸ்லிம்கள் மீது அடாவடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட வன்முறையானது, அந்த மக்களின் பாதுகாப்பையும், அவர்களது இருப்பையும் கேள்விக்குறியாக்கியிருப்பதாக கடையடைப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் கூறினர்.

    யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், அரச படைகளிடம் மட்டுமே ஆயுதங்கள் இருக்கின்றன என கூறப்பட்டிருந்த போதிலும், அளுத்கமவில் முஸ்லிம்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டிருக்கின்றது. இதனை செய்தது யார் என்பது தெரியவில்லை. இதற்கு பொறுப்பு யார் என்பதும் தெரியவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.

    அளுத்கம பகுதியில் இரு இனங்களுக்கிடையில் மத ரீதியான அமைதியின்மை நிலவியதுபற்றி அனவைரும் அறிந்திருந்தார்கள். இந்த நிலைமையை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலதரப்பினரிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எவருமே உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் உயிரிழப்பும், சொத்துக்கள் இழப்பும் முஸ்லிம் மக்களுக்கு எற்பட்டிருக்கின்றது. இந்த அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்துவதற்குப் படையினரும் காவல்துறையினரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறியிருந்தார்கள் என்பதும் முஸ்லீம்களின் குற்றச்சாட்டாக இருந்துவருகிறது.

    மன்னாரில் சட்டத்தரணிகளும் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரும், யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் இணைந்து அடையாள எதிர்ப்பு பணிபுறக்கணிப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

    பல்கலைக்கழக வளாகத்தினுள் பதாதைகளையும் சுலோக அட்டைகளையும் ஏந்திய வண்ணம் ஊர்வலமாக பிரதான வாயிலை நோக்கிச் சென்று, நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

    கிழக்கில் மூன்றாவது நாளாக நீடிக்கும் ஹர்த்தால்
    காத்தான்குடி பகுதியின் ஹர்த்தால்

    கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை மூன்றாவது நாளாக இந்த கடையடைப்பு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதால் தொடர்ந்தும் வழமை நிழலை பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக மட்டக்களப்பு - அம்பாரை மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் பிரதேசங்களை பொறுத்த வரை ஹர்த்தால் மற்றும் கடையடைப்பு அனுஷ்டிக்கப்படுவதால் அந்த பிரதேசங்களில் தொடர்ந்தும் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பிரதேசங்களில் அமைதியான நிலை காணப்படுகின்றது.

    கூடுதலான காவல்துறையினரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளதை காணமுடிவதாக பிபிசி செய்தியாளார் கூறுகின்றார்.

    வர்த்தகர் சங்கத்தலைவர் வீட்டில் தாக்குதல்
    மட்டக்களப்பு காத்தான்குடியில் முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி சங்கத்தின் தலைவர் கே. எம். எம். கலீல் ஹாஜியாரின் இல்லம் மீது நேற்று புதன்கிழமை நள்ளிரவு அடையாளந் தெரியாத ஆட்களினால் கழிவு ஆயில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    அலுத்கம வன்முறைகளை கண்டித்து ஏற்கெனவே கடந்த செவ்வாய்கிழமை இந்த பிரதேசத்தில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டமையால் இன்று வியாழக்கிழமை மீண்டும் ஹர்த்தால் அனுஷ்டிக்காமல் வழமை போல் கடைகளை திறப்பது என மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி சங்கம் நேற்றிரவு கூடி முடிவு எடுத்ததாக கூறப்படுகின்றது.

    இந்த தகவல் குறுஞ்செய்தி மூலம் ஏனைய வர்த்தகர்களுக்கு அறிவிக்கப்பட்டு சில நிமிடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும் பொது பல சேனாவிற்கு எதிராகவும் கவன ஈர்ப்பு ரேணியொன்றும் நடைபெற்றுள்ளது. இந்த பேரணி முடிவில் இடம் பெற்ற சம்பவமொன்றின் போது அங்கு இருந்த சிறப்பு அதிரடைப்படை அதிகாரியொருவரால் தான் தாக்கப்பட்டதாக பிரதேச உள்ளுராட்சி சபைத்தலைவரான எம்.. ஏ. எம். அன்ஸில் கூறுகின்றார்.

    இது தொடர்பில் காவல்துறையிடம் தான் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இலங்கை அளுத்கம வன்முறை: முஸ்லீம் பகுதிகளில் கடையடைப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top