பொது மன்னிப்பும் பாதுகாப்பும் வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின்
உத்தரவாதத்தையடுத்து, இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் காணாமல்
போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியும், இவ்வாறு காணாமல்
போயுள்ளவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள்
மீதான நீதிமன்ற விசாரணையைத் துரிதப்படுத்தக் கோரியும் முல்லைத்தீவு
பேருந்து நிலையத்தருகில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. அரச தரப்பினருடைய எதிர்ப்பு ஒன்று கூடலுக்கு மத்தியிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தேறியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் கலந்து
கொள்வதைத் தடுப்பதற்காக அடையாளம் தெரியாதவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு
அழைத்துச் செல்வதற்காக பேரூந்துகள் வரும் என்று அரச ஆதரவாளர்கள் சிலர் வீடு
வீடாகச் சென்று அறிவித்திருந்ததாகவும், அவ்வாறு காத்திருந்தவர்களை சில
பேருந்துகள் ஏற்றி வந்து தமது ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக தாங்கள்
நின்றிருந்த இடத்திற்கு சிறிது தூரத்தில் ஒன்று கூடியிருந்ததாகவும் மாகாண
சபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
காவல்துறையினரின் அனுமதி பெற்று தமிழ்த் தேசிய
கூட்டமைப்பினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் முடியும் வரையில் அந்தப்
பகுதிக்குள் எதிர்த்தரப்பினரைச் செல்லவிடாமல் காவல்துறையினர்
தடுத்திருந்தனர்.
ஆயினும் இரு தரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது; அசம்பாவிதங்கள் எதுவும் நிகழவில்லை.
மற்றொரு ஆர்ப்பாட்டம்
இதற்கு எதிராக ஒன்று கூடியவர்கள் விடுதலைப் புலிகளினால் பிடித்துச் செல்லப்பட்டதன் பின்னர் காணாமல் போயுள்ள தமது பிள்ளைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியதுடன், விடுதலைப்புலிகளினால் தமது பிள்ளைகள் பிடித்துச் செல்லப்பட்டதை நினைவூட்டி கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயுள்ளவர்களில் விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உள்ளிட்ட 12 பேரை, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த வேளையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது.
இந்த வழக்குகள் தொடர்பிலான அரச தரப்பு சட்டத்தரணி
நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் இந்த வழக்கு விசாரணைகளை வரும் ஜுலை மாதம்
21 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
ஆட்கொணர்வு மனு
இதற்கிடையில் ஐந்து வருடங்களுக்கு முன்னர், 2009
ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததையடுத்து, இராணுத்தினரிடம் சரணடைந்ததன்
பின்னர் காணாமல் போயுள்ள விடுதலைப் புலிகளின் பொருளாதாரத்துறை பொறுப்பாளர்
கரிகாலன் மற்றும் அவருடைய மனைவி டாக்டர் பத்மலோஜினி ஆகியோர் உட்பட ஐந்து
பேர் தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள்
புதன்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் தொடர்பில் இராணுவ தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் அது தொடர்பான விசாணைகளை வரும் ஜுலை மாதம் 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
BBC -
0 comments:
Post a Comment