PMGG ஊடகப்பிரிவு:
அளுத்கம வன்முறைகளுக்கு முஸ்லிம்களே காரணம் என்ற ஹன்சாட்டின் பிழையான
பதிவுக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே காரணம்: நல்லாட்சிக்கான தேசிய
முன்னணி “அளுத்கம வன்முறைகளுக்கு முஸ்லிம்களே
காரணம் என்ற பிழையான ஒரு பதிவு ஹன்சாட்டில் பதியப்படுவதற்கு அனுமதித்ததன்
மூலம் தமது சமூகத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாரிய துரோகம்
இழைத்துள்ளனர்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) விடுத்துள்ள ஊடக
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…
சுமார் நான்கரை மணித்தியாலங்களாக நடைபெற்ற
இந்த விவாதத்தில் அரசாங்க தரப்பு மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பலரும்
கலந்து கொண்டு உரையாற்றினர்.
எனினும், முஸ்லிம் பாராளுமன்ற
உறுப்பினர்களான அஸ்வர், ஹலீம் ஆகியோரைத் தவிர வேறு முஸ்லிம் அமைச்சர்கள்
பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இவ்விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை.
இவ்விவாதத்தின்போது அரச தரப்பில்
உரையாற்றிய பிரதமர் ஜயரத்ன, களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,
அமைச்சருமான றோஹித அபேவர்த்தன ஆகியோர் முஸ்லிம் இளைஞர்களால் பௌத்த பிக்கு
ஒருவர் தாக்கப்பட்டதே இந்த வன்முறைகளுக்கு காரணம் என முஸ்லிம்களின் மீது
அப்பட்டமான பழியை சுமத்தியுள்ளனர்.
முஸ்லிம்கள் மீதான இப்பிழையான
குற்றச்சாட்டுகள் ஹென்சாட்டில் பதிவாகியுள்ளது. உத்தியோக பூர்வ ஆவணமான
ஹென்சாட்டில இப்பதிவாகியது முஸ்லிம்களின் மீது திட்டமிட்டு பாதுகாப்பு
தரப்பினரின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட வன்முறைத்தாக்குதலை
ஒட்டுமொத்தமாக மூடி மறைக்கும் ஒரு செயலாகவே அமைந்துள்ளது.
இவ்வாறு முன்வைக்கப்படும் பிழையான
குற்றச்சாட்டுக்களை மறுதலித்து உண்மையில் அளுத்கம, தர்ஹாடவுன், வேருவள,
வெலிப்பண்ணை பிரதேசங்களில் நடந்தது என்னவென்பதை தெளிவுபடுத்தி
பாதிக்கப்பட்ட மக்களின் நியாயங்களை எடுத்துச் சொல்லி சரியான தகவல்களை
ஹென்சாட்டில் ஆவணப்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பும் கடமையும் முஸ்லிம்
அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இருக்கிறது.
ஒரு மக்கள் பிரதிநிதியின் தலையாய கடமை
பாராளுமன்றம் மற்றும் குழுநிலை விவாதத்தில் பங்கேற்று தான்
பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் சார்ந்த விடயங்களின் சரியான கருத்துக்களை
கொள்கைகளை நிலைப்பாடுகளை முன்வைத்து அவற்றை ஆவணப்படுத்தி சட்டவாக்க
நடவடிக்கைகளில் பங்கேற்பதாகும்.
தான் எந்தப் பொறுப்புக்காக, கடமைக்காக
மக்களால் தெரிவு செய்யப்பட்டோமோ அந்தக்கடமைகளை பொறுப்புக்களை
புறந்தள்ளிவிட்டு வெறும் பத்திரிகை அறிக்கைகள் மூலமாகவும், தமிழ் பேசும்
மக்கள் மாத்திரமே பார்க்கின்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்
கதையளப்பதனூடாகவும் , தேர்தல் மேடைகளில் வீர வசனங்களை அள்ளியெறிந்தும்
இவர்கள் தமது அரசியல் பணியை செய்வதாக பூச்சாண்டி காட்டி வருகின்றனர்.
தொடர்ந்தும் தமது பாராளுமன்ற கடமைகளையோ
பொறுப்புக்களையோ சரியான முறையில் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வரும்
முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த 10 ஆம் திகதியும்
சட்ட ஒழுங்கு பிரேரணையில் பங்கு கொள்ளாமல் மீண்டுமொரு முறை மக்களை
ஏமாற்றியுள்ளனர். அன்றய தினம் பாராளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்த இரண்டு
முஸ்லிம் உறுப்பினர்களுக்கு கூட பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான
கருத்துக்களை மறுதலிக்கும் துணிவு இருக்கவில்லை.
விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றபோது
ஒருசில முக்கிய அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐந்து நட்சத்திர
ஹோட்டலில் நடை பெற்ற நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வில் சந்தோசமாக கலந்து
கொண்டடிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் குறித்த தினத்தில் அமைச்சர SB
திசாநாயக அவர்கள் இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் வருடாந்த இப்தார்
நிகழ்ச்சிக்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார். எனினும் தான் ஒரு
முக்கிய விவாதத்தில் பங்கேற்க வேண்டியிருப்பதால் தனக்கு வரமுடியாது என்று
தனது செயலாளரை குறித்த நிகழ்ச்சிக்கு அனுப்பியிருந்தார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
எனவே, அளுத்கம, தர்ஹாடவுன், வேருவள,
வெலிப்பண்ணை பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களே இவ்வன்முறைக்கு காரணம் என
பிழையான ஒரு பதிவைஹென்சாட்டில் பதியப்படுவதற்கு அனுமதித்ததன் மூலம்
பாதிக்கப்பட்ட மக்களுக்கும், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும்
சமூகத்திற்கும் முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பாரிய
துரோகம் இழைத்துள்ளனர்.
எனவே இவ்விவாதத்தில் பங்கு கொள்ளாத
முஸ்லிம் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் இப் பொறுப்பற்ற
செயலை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வன்மையாக கண்டிப்பதுடன் , இந்த
பாரதூரமான பொறுப்பற்ற நடவடிக்கை தொடர்பில் முஸ்லிம் சமூகத்திடம்
மன்னிப்புக் கோர வேண்டும் என பகிரங்க வேண்டுகோள் விடுக்கிறது.
0 comments:
Post a Comment