• Latest News

    July 19, 2014

    இஸ்ரேலின் தரைவழி படையெடுப்பு, மோசமான விளைவை சந்திக்க வேண்டி வரும் – ஹமாஸ் எச்சரிக்கை

    தரைவழி படையெடுப்பிற்கு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு உத்தரவிட்டதை அடுத்து இஸ்ரேல் பீரங்கிகள் மற்றும் துருப்புகள் காசாவுக்குள் ஊடுருவியுள்ளன. ஏற்கனவே காசா மீது கடந்த 10 தினங்களால் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 250 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே இஸ்ரேல் இராணுவம் நேற்று தரைவழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

    இந்த தரைவழி நடவடிக்கை முட்டாள்தனமானது என்று விபரித்திருக்கும் ஹமாஸ் பேச்சாளர் பௌஸி பர்ஹூம், இஸ்ரேல் இராணுவம் பாரிய விலை கொடுக்கவேண்டி வரும் என்று எச்சரித்துள்ளார்.
    காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த மற்றொரு பேச்சாளரான சமி அபூ சுஹ்ரி குறிப்பிடும்போது, 'இதன்மூலம் ஹமாஸ் தலைவர்களையோ பலஸ்தீன மக்களையோ பயமுறுத்த முடியாது. இவ்வாறான முட்டாள்தனமான செயற்பாட்டால் ஆபத்தான விளைவை சந்திக்க வேண்டி வரும் என்பதை நெதன்யாகுவுக்கு நாம் எச்சரிக்கிறோம்' என்றார்.

    இஸ்ரேல்-பலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தையின்போது சட்ட ஆலோசகராக இருந்த டயானா பட்டு குறிப்பிடும்போது, 'இஸ்ரேல் மீது யுத்த குற்றச்சாட்டு சுமத்த பலஸ்தீன நிர்வாகம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் கைச்சாத்திட வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு நடப்பது இது முதல் முறையல்ல. அவர்கள் (இஸ்ரேல்) சட்டத்திற்கு மேல் இருப்பவர்கள் போன்றும் பலஸ்தீனர்கள் கீழ் இருப்பவர்கள் போன்றும் நடந்துகொள்கிறார்கள்' என்றார்.

    இஸ்ரேல் மேலும் 18,000 துணைப்படையினரை அவசர இராணுவ சேவைக்கு கடந்த வியாழக்கிழமை மாலை அழைத்தது. இதன்மூலம் கடந்த ஜூலை 8 ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேல் அழைத்திருக்கும் துணைப்படையினரின் எண்ணிக்கை 65,000 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த தரைவழி நடவடிக்கை தோல்வியிலேயே முடியும் என்று ஹமாஸ் தலைவர் காலித் மிஷஅல் குறிப்பிட்டுள்ளார். 'ஆக்கிரமிப்பாளர்களான இஸ்ரேல் வான் மற்றும் கடல் வழி தாக்குதல்களில் தோல்வியடைந்தது போலவே தரைவழி தாக்குதலிலும் தோல்வியையே சந்திப்பார்கள்' என்றார்.

    காசா மீது இஸ்ரேல் நேற்று தரைவழி தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் ஐந்து மாத குழந்தை உட்பட 11 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இஸ்ரேலின் தரைவழி படையெடுப்பு, மோசமான விளைவை சந்திக்க வேண்டி வரும் – ஹமாஸ் எச்சரிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top