ஹஜ் முகவர்களுக்கிடையில் பகிரப்பட்டுள்ள
ஹஜ் கோட்டாக்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்துச்செய்த உயர்
நீதிமன்றம் ஹஜ் முகவர்கள் நேர்முகப் பரீட்சையின் போது பெற்றுக் கொள்ளப்பட்ட
புள்ளிகளின் அடிப்படையில் ஹஜ் கோட்டாவை மீள பகிர்ந்தளிக்கும் படி நேற்று புதன்கிழமை உத்தரவு வழங்கியது.
இவ்வருடத்துக்கான ஹஜ் கோட்டா
அநீதியான முறையில் பகிரப்பட்டதாகவும் நேர்முகப் பரீட்சையில் ஹஜ்
முகவர் நிலையங்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில்
வழங்கப்படவில்லையெனவும் இதனை ரத்துச் செய்யுமாறு கோரி செரண்டிப் ஹஜ் உம்ரா முகவர்கள் சங்கம் உயர்நீதிமன்றில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தது. சங்கத்தின் 10 உறுப்பினர்கள்
கையொப்பமிட்டு குறிப்பிட்ட வழக்கினை தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம் கடந்த 10
ஆம் திகதி ஹஜ் கோட்டா பகிர்வுக்கும் ஹஜ் நடவடிக்கைகளுக்கும்
இடைக்கால தடையுத்தரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹஜ் கோட்டா பகிர்வில் அநீதி
இழைக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஹஜ் முகவர்கள்
நேர்முகப் பரீட்சையில் பெற்றுக் கொண்டுள்ள புள்ளிகளுக்கு அமைவாக
கோட்டாவை மீளப் பகிருமாறு அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டது.
மீள அமைக்கப்பட்ட கோட்டா பகிர்வு பட்டியலை இன்று (வியாழக்கிழமை)
க்குள் சவூதி அரேபியா ஹஜ் அமைச்சருக்கு அனுப்பி வைக்கும் படியும்
செயலாளர் நீதிமன்றினால் கோரப்பட்டுள்ளார்.
இதேவேளைஇ ஹஜ் கோட்டா பகிர்வு பட்டியல்
நீதிமன்ற இடைக்கால தடையுத்தரவுக்கு முன்பே ஹஜ் குழு இணைத்தலைவர்
சிரேஷ்ட அமைச்சர் பௌஸியினால் சவூதி அரேபிய ஹஜ் அமைச்சருக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹஜ் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் பௌஸி
யை விடிவெள்ளி தொடர்பு கொண்டு வினவியபோது; தான் ஏற்கனவே கோட்டா
பட்டியலை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்துவிட்டதாகவும் புதிய
பட்டியல் ஒன்றினை சவூதி அரேபியா ஏற்றுக் கொள்ளுமா என்பது பற்றி
தெரியாது என்றார்.
புத்தசாசன மற்றும் மத அலுவல்கள்
அமைச்சின் செயலாளர் திசாநாயக்கவிடம் வினவிய போது நீதிமன்ற
உத்தரவுக்கிணங்க ஹஜ் கோட்டாவை முகவர்கள் பெற்றுக் கொண்டுள்ள
புள்ளிகள் அடிப்படையில் மீள பகிர்வதில் எதுவித
சிரமமுமில்லையெனவும் இந்தப் பணியை தான் உடனடியாக
மேற்கொள்வதாகவும் கூறினார்.-வீரகேசரி

0 comments:
Post a Comment