• Latest News

    July 24, 2014

    பிரதி அமைச்சர் சரத்வீரசேகரவின்அபிவிருத்திகளை சில்லரைகள் என விமர்சிப்பதற்கு பைசால் காசிமுக்கு அருகதை கிடையாது :இசட் ஏ.எச்.ரஹ்மான்

    பி.எம்.எம்.ஏ.காதர்:அரசிடம் நாலா மடிந்து வீதிக் கொந்தராத்துகளைப் பெற்று- அவற்றுக்கு வீதக் கணக்கில் கமிஷன் வாங்கி அரசியல் வியாபாரம் நடாத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காஸிமுக்கு பிரதி அமைச்சர் சரத் வீரசேகரவின் அபிவிருத்தித் திட்டங்களை சில்லறை அபிவிருத்திகள் என்று விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் கிடையாது.

    இவ்வாறு கல்முனை மாநகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரும் பிரதி அமைச்சர் சரத் வீரசேகரவின் இணைப்புச் செயலாளருமான இசட் ஏ.எச்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.   
    பிரதி அமைச்சர் சரத் வீரசேகரவையும் அவரது இணைப்புச் செயலாளரான இசட்.ஏ.எச்.ரஹ்மானையும் விமர்சித்து முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் ஊடகங்களில் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ரஹ்மான் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

    அதில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

    'நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம், பிரதி அமைச்சர் சரத் வீரசேகரவை முஸ்லிம்களின் விரோதி என்று குற்றம்சாட்டியது மட்டுமல்லாமல் அவரது இணைப்பாளர்களான எம்மையும் வம்புக்கிழுத்து அறிக்கை வெளியிட்டதன் காரணமாகவே நான் அதற்கு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்த அறிக்கையை கூட கொள்கை ரீதியாக மிகவும் நாகரீகமாகவே எழுதி ஊடகங்களில் வெளியிட்டிருந்தேன்.

    ஆனால் எனது அறிக்கைக்கு கொள்கை ரீதியாக பதிலளிக்க முடியாத பைசல் காசிம் எம்.பி. மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளைப் பயன்படுத்தி நாகரீகமற்ற முறையில் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனை நடுநிலை நின்று நோக்கும் எவரும் நன்கு புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.

    குறித்த அவரது அறிக்கையில் பூர்வீக வரலாறு பற்றியும் எம்மிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
      
    நான் கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய காலப் பகுதியில் காசோலை மோசடி ஒன்றுக்காக கல்முனை நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பைசால் காசிம், கைது செய்யப்பட்டபோது அப்போதைய பதில் நீதவான் முன்னிலையில் இவரை அவசரமாக ஆஜர்படுத்தி பிணையில் விடுவிக்க நான் முன்னின்ற பூர்வீக வரலாறு பற்றியா இப்போது பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள பைசால் காசிம் கேள்வி எழுப்புகிறார்?

    அல்லது பதியத்தலாவையில் அமைந்திருந்த CATEX எனும் தனது ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதியை செலுத்தாமல் மோசடி செய்தமைக்காக தொழில் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்றத்தினால் குற்றவாளியாக காணப்பட்டு- அதன் உத்தரவின் பேரில் குறித்த தொகைப் பணத்தை செலுத்திய பூர்வீக வரலாறு பற்றியா இப்போது பைசால் காசிம் எம்.பி. கேள்வி எழுப்புகிறார்?

    இப்படி பைசல் காசிம் எம்.பி.யின் இன்னும் பல பூர்வீக வரலாறுகளை எம்மால் அடுக்கிக் கொண்டு செல்ல முடியும்.

    அது போன்று நிந்தவூரில் அமைந்துள்ள அவரது MACFA Apperal Pvt Ltd  சம்மந்தமான சில திடுக்கிடும் தகவல்களையும் விசாரணைகளையும் விரைவில் கண்டுகொள்ள முடியும்.

    அதேவேளை பிரதி அமைச்சர் சரத் வீரசேகர அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் மேற்கொண்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களை பைசல் காசிம் எம்.பி. சில்லறை அபிவிருத்திகள் என்று குறிப்பிட்டு கொச்சைப்படுத்தியுள்ளார். இதனை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன். 

    தேர்தல்களில் தமக்கு வாக்களித்த மக்களுக்கு எவ்வித அபிவிருத்திப் பணிகளையும் செய்யாமல் அவர்களை திசை திருப்புவதற்காக தனது கட்சியும் தலைமைத்துவமும் ஊடகங்களில் இனவாதம் பேசி முஸ்லிம் மக்களை உணர்ச்சிப்படுத்துகின்ற கைங்கரியத்தை செய்வதன் மூலம் அரசியலில் நிலைத்திருக்கின்ற பைசல் காசிம் எம்.பி. போன்றவர்கள் சரத் வீரசேகர மேற்கொள்கின்ற சேவைகளுடன் ஒப்பிடுகையில் அவரது கால் பாதத்திற்கும் பெறுமதியற்றவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது.

    முடிந்தால் பைசால் காசிம் எம்.பி. வீதிக் கொந்தராத்துகளைத் தவிர தான் மேற்கொண்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்களை பட்டியலிட்டுக் காட்டட்டும் பார்க்கலாம்.

    இவற்றை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் தற்போது உணர்ந்து வருகின்றனர். இதனால் முஸ்லிம்கள் மத்தியில் சரத் வீரசேகரவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல்- தனது எதிர்கால அரசியல் இருப்புக்கு ஆபத்து என்று அஞ்சி நிலைகுலைந்த நிலையிலேயே சரத் வீரசேகரவை முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு இனவாதி என்ற பிரசாரத்தை பைசல் காசிம் எம்.பி. முடுக்கி விட்டிருக்கிறார்.

    பொது பல சேனாவை அரசாங்கமே போசிக்கிறது என்று கூக்குரல் இடுகின்ற முஸ்லிம் காங்கிரஸ் இன்னும் அமைச்சுப் பதவிகளில் சுகம் அனுபவித்துக் கொண்டு அரசாங்கத்தில் ஒட்டிக் கொண்டிருப்பது பற்றிப் பேசாமல் எம்மை ஒரு நேர்மையான பிரதி அமைச்சரிடம் இருந்து வெளியேறுமாறு பைசல் காசிம் எம்.பி. கோஷம் எழுப்புவதன் மர்மம் என்ன?

    அதை விட அரசிடம் நாலா மடிந்து வீதிக் கொந்தராத்துகளைப் பெற்று- அவற்றுக்கு வீதக் கணக்கில் கமிஷன் வாங்கி அரசியல் வியாபாரம் நடாத்துவதையே இப்போது தொழிலாக கொண்டிருக்கிறார். இதற்கான ஆதாரம் தேவைப்பட்டால் அதனை வெளியிடுவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்.

    இப்படிப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், முஸ்லிம் பகுதிகளுக்கு அபிவிருத்தித் திட்டங்களை அள்ளிக் கொட்டுகின்ற ஒரு பிரதி அமைச்சரின் சேவைகளை கேள்விக்குட்படுத்தி கொச்சைப்படுத்துவதற்கு எவ்வித அருகதையுமற்றவர் என்பதை கொமிஷனுக்காக கொந்தராத்து அரசியல் செய்கின்ற பைசல் காசிம் எம்.பி. புரிந்து கொள்ள வேண்டும்.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பிரதி அமைச்சர் சரத்வீரசேகரவின்அபிவிருத்திகளை சில்லரைகள் என விமர்சிப்பதற்கு பைசால் காசிமுக்கு அருகதை கிடையாது :இசட் ஏ.எச்.ரஹ்மான் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top