எஸ்.றிபான் -
இலங்கை முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாத அமைப்புக்களின் கெடுபிடிகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத நிலையிலும், அரசாங்கம் நடவடிக்கைகளை எடுப்பதற்கான அழுத்தங்களை முஸ்லிம் கட்சிகள் எடுத்துக் கொள்ளாத நிலையிலும், அரசாங்கத்தோடு தோளோடு தோளாக இணைந்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட மற்றுமொரு கட்சியாகிய துஆ கட்சியின் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிடுகின்றன.
இலங்கை முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாத அமைப்புக்களின் கெடுபிடிகளை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காத நிலையிலும், அரசாங்கம் நடவடிக்கைகளை எடுப்பதற்கான அழுத்தங்களை முஸ்லிம் கட்சிகள் எடுத்துக் கொள்ளாத நிலையிலும், அரசாங்கத்தோடு தோளோடு தோளாக இணைந்திருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக தோற்றுவிக்கப்பட்ட மற்றுமொரு கட்சியாகிய துஆ கட்சியின் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிடுகின்றன.
பௌத்த இனவாத அமைப்புக்கள் அதிகாரத் தரப்பினரின் ஆதரவுடன் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளின் மீது தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் நடவடிக்கைளில் இருந்து முஸ்லிம்களை பாதுகாத்துக் கொள்வதற்காக முறையான நடவடிக்கைகளை எடுக்காது இருக்கும் முஸ்லிம் கட்சிகள், பௌத்த இனவாத அமைப்புக்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக அறிக்கைகளை விடுத்துக் கொண்டிருக்கின்றன.
பாதுகாப்பு இல்லாத கோட்டைக்குள் ஒழிந்து கொண்டிருக்கும் நிலையே முஸ்லிம் கட்சிகளின் நிலையாகும். பொதுபல சேனவின் தோற்றத்தோடு முஸ்லிம்களின் மீது தொடுக்கப்பட்ட நெருக்கடிகளும், அடாவடிகளும் இலங்கையின் வரலாற்றில் அதிகமாகும். அவைகள் குறித்து முறையான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வதற்கு திராணியற்றிருக்கும் முஸ்லிம் கட்சிகளும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் ஊவா மாகாண சபையில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை வெற்றி பெறச் செய்வதன் ஊடாக இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியுமென்று சொல்லிக் கொள்வது ஏற்க முடியாததாகும்.
கிழக்கு மாகாண சபையில்தான் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் இருப்பதுடன், ஆளுந் தரப்பில் ரவூப் ஹக்கிமின் முஸ்லிம் காங்கிரஸ், அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸ், றிசாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அதிக உறுப்பினர்களையும் கொண்டுள்ளன. ஆளுந் தரப்பில் உள்ள தமிழ், சிங்கள மக்கள் பிரதிநிதிகளை விடவும் முஸ்லிம் பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகமாகும். இவ்வாறு இருந்தும், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கும், அதனை தட்டிக் கேட்பதற்கும் வக்கற்று இருக்கும் முஸ்லிம் கட்சிகளும், தலைமைகளும், மக்கள் பிரதிநிதிகளும் ஊவா மாகாண சபையில் ஒரு முஸ்லிம் பிரதிநிதியைக் கூட பெற்றுக் கொள்ள முடியுமா என்றிருக்கும், நிலையில், அங்குள்ள முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று ஆளுந் தரப்பின் வெற்றியை உறுதி செய்வதற்காக ஒன்றுபட்டுள்ள முஸ்லிம் கட்சிகள் இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளை பெறுவதற்காக வாக்களியுங்கள் என்று கேட்கின்றார்கள்.
முஸ்லிம் மீடியா போரத்தின் 19வது வருடாந்த மாநாட்டில் சமகால அரசியலில் முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் சவால்கள் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் அமைச்சருமான பசீர் சேகுதாவூத் ஒரு உண்மையைச் சொல்லியுள்ளார். அதாவது, முஸ்லிம்களை பொறுத்தவரை நாம் முஸ்லிம்களாகவும், இலங்கையர்களாகவும் வாழ வேண்டும். ஆனால், பேரினவாதிகள் எதிர் பார்ப்பது நாம் இலங்கையராக வாழ்ந்தால் போதும் என்பதாகும். காரணம், அவர்கள் பௌத்தர்களாக வாழ்ந்தாலும் போதும், அல்லது இலங்கையர்களாக வாழ்ந்தாலும் போதும் என்பதனாலாகும். நாம் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் வாழும் போது, அது இலங்கையர் என்ற அடையாளம் அல்ல என்று அவர்கள் நினைக்கின்றார்கள் போலும்.... என தெரிவித்துள்ளார்.
இதுதான் இன்று இலங்கை முஸ்லிம்கள் பௌத்த பேரினவாதிகளினால் நெருக்கடிகளையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு பிரதான காரணமாகும். இதனை பசீர் சேகுதாவூத் மிகவும் தெளிவாக அடையாளங் கண்டுள்ளார். இதற்கு தீர்வு காணாது முஸ்லிம் கட்சிகள் தேர்தல் ஒன்றில் முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக திடீரென ஒரு கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டு, முஸ்லிம்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு வாக்களியுங்கள் என பிரச்சாரம் செய்வது பௌத்த இனவாத அமைப்புக்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு முடியாது.
பௌத்த இனவாத அமைப்புக்கள் தேசிய அடையாள அட்டைகளில், கடவுச் சீட்டு புத்தகங்களில் முஸ்லிம்கள் என குறிக்க வேண்டாமென்;று கூறவில்லை. முஸ்லிம் பெயர்களில் இயங்கும் பாடசாலைகளை மூடச் சொல்லவில்லை. சாப்பிட வேண்டாமென்று கூறவில்லை. முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டாமென்று சொல்லவுமில்லை. இவை போன்று எதனையும் அவர்கள் தடுக்கவில்லை. ஆனால், ஒரு முஸ்லிம் தன்னை முஸ்லிம் என அடையாளப்படுத்தி காட்டுவதற்குரிய அனைத்து தனித்துவமான விடயங்களிலும் படிப்படியாக தலையீடுகளை செய்து வருகின்றார்கள்.
முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து கொண்டு செல்லக் கூடாது. சில சிங்கள மொழி பாடசாலைகளும் பர்தா அணியக் கூடாதென்று முஸ்லிம் மாணவிகளுக்கு தடைகளை ஏற்படுத்திருக்கின்றது. ஹலால் உணவு உண்ண முடியாது. பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டார்கள். மாடு அறுக்க கூடாது. தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு தொப்பி அணிந்து போட்டோ எடுக்கவும் தடை விதித்தார்கள். முஸ்லிம்களின் தர்ஹாக்களை அழித்தார்கள். இது போன்ற முஸ்லிம்களின் தனித்துவமான அடையாளங்களை தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவைகளை விட்டுக் கொடுத்தால் முஸ்லிம்கள் வாழலாம். இவற்றிக்கு தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பௌத்த பேரினவாத அமைப்புக்கள், நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரிகள் அல்லர். முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கே எதிரானவர்கள். அவர்கள் நாட்டில் பயங்காரவாதத்தை தூண்டிக் கொண்டிருக்கின்றார்கள். அல்ஹைதா போன்ற அமைப்புக்களுடன் தொடர்புகளை கொண்டுள்ளார்கள் என்று தெரிவித்து, முஸ்லிம் என்ற அடையாளத்துடன் வாழுகின்றவர்களை பயங்கரவாதிகள் எனக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களின் இந்த நிலைப்பாடு இலங்கை முஸ்லிம்களின் எதிர் காலத்திற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடியதாகவே இருக்கின்றது. இதுதான் சமகால அரசியலில் இலங்கை முஸ்லிம்கள் எதிர் கொள்கின்ற சவாலாக இருக்கின்றது. இதற்கு சரியான தீர்வுகளை காண வேண்டும். இதற்கான தீர்வுகளை முஸ்லிம் கட்சிகள் தேர்தலில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக கூட்டிணைவதனால் பெற்றுக் பெற்றுக் கொள்ள முடியாது. அரசாங்கத்தில் இருந்து கொண்டு வாக்குகளை மையப்படுத்தி அரசாங்கத்தை விமர்சனம் செய்வதனால் தீர்த்துக் கொள்ளவும் இயலாது.
முஸ்லிம்கள் தங்களின் தனித்துவங்கள் தொடர்பில் எதிர் கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் புத்திஜீவிகள், அரசியல் கட்சிகள், தலைவர்கள், உலமாக்கள், பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் என எல்லாத்துறையினரும் இணைந்து திட்டங்களை வகுக்க வேண்டும். இவைகளை செய்வதற்கான ஆரம்ப வேலைகளைக் கூட செய்யாது, இரண்டு கட்சிகள் இணைந்து மற்றுமொரு கட்சியில் போட்டியிடுதனை முஸ்லிம்களின் உரிமைகளை பெறுவதற்கான அத்திவாரமாக காண்பிப்பதற்கு முயற்சிகளை எடுப்பது வரவேற்கக் கூடியதொரு செயற்பாடல்ல.
ஊவா மாகாண சபைத் தேர்தலை எடுத்துக் கொண்டால், 2009ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மதார் முஹம்மட் என்பவர் பதுளை மாவட்டதில் போட்டியிட்டார். ஆனால், இம்முறை இக்கட்சியின் சார்பில் எந்ததொரு முஸ்லிம் வேட்பாளரும் நிறுத்தப்படவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லிம்களின் வாக்குகளை இலக்கு வைக்காது, சிங்கள மக்களின் வாக்குகளையே இலக்கு வைத்துள்ளது. இதனால்தான் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தவில்லை.
இதே வேளை, ஐ.தே.க முஸ்லிம்களின் வாக்குகளை இலக்கு வைத்து முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாது இருக்கின்ற நிலையில் முஸ்லிம்களின் வாக்குகள் ஐ.தே.கவில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளருக்கு பெரும்பான்மையாகச் செல்லும். இவ்வாறு செல்லும் போது, அந்த வேட்பாளருக்குரிய வெற்றி வாய்ப்பும் அதிகமாகும். இதனை தடை செய்வதற்காகவே இரண்டு முஸ்லிம் கட்சிகளும் இணைந்துள்ளன.
அரசாங்கத்தில் உள்ள இரண்டு கட்சிகள், அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை செய்து கொண்டு, ஊவா மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிராக போட்டியிடுவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது என்றால், அரசாங்கத்திற்கு இலாபமில்லாது அனுமதி வழங்கப்பட்டிருக்காது என்பதனை புரிந்து கொள்வதற்கு எந்த ஆராய்ச்சியும் தேவையில்லை.
முஸ்லிம்களின் தனித்துவமான அடையாளங்களை அழிக்க வேண்டுமென்று செயற்பட்டுக் கொண்டிருக்கும் பொதுபல சேன போன்ற பௌத்த இனவாத அமைப்புக்களை கட்டுப்படுத்துவதற்கு சரியான நடவடிக்கைகளை எடுக்காதிருக்கும் அரசாங்கத்துடன் இணைந்து இருந்து கொண்டே, தங்களை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிரானவர்கள் என்று வேசம் போட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் கட்சிகள,; முஸ்லிம்களின் அடையாளங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் வராது ஊவா மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடித்து, முஸ்லிம் மக்கள் பிரதிநிதிக்கு வேட்டு வைப்பதற்கு களம் இறங்கியுள்ளார்கள்.
இதே வேளை, புனித ஹஜ் கடமைக்காக முஸ்லிம்களை அனுப்புகின்ற முகவர்கள் தங்களுக்கு நீதி பெற்றுத் தருமாறு முஸ்லிம்களின் அடையாளங்களை இல்லாமல் செய்வதனையே தமது கொள்கையாகக் வகுத்துள்ள பொதுபல சேனவிடம் சென்று முறையிட்டுள்ளமை வெட்கப்பட வேண்டியதாகும்.
புனித பணியில் ஈடுபட்டுள்ள இவர்கள் முஸ்லிம் விரோத அமைப்பிடம் நியாயம் பெற்றுத் தருமாறு கோரியுள்ளதன் மூலமாக, இவர்களின் உண்மைத் தன்மை தெரியவந்துள்ளது. இந்த முகவர்களின் முழு எண்ணமும் ஹஜ் கடமைக்கு ஆள் அனுப்புவதன் மூலமாக பணம் சம்பாதிப்பது மட்டுமென்று தெரிகின்றது. ஏற்கனவே, ஹஜ் கடமைக்கு ஆள் அனுப்பும் முகவர் நிலையங்கள் பலவற்றினைப் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அந்த குற்றச்சாட்டுக்கள் புனித ஹஜ் கடமைக்கு ஆள் அனுப்பும் முகவர்களுக்கு இருக்கக் கூடாது. ஹஜ் கடமைக்கு ஆள் அனுப்புவதன் மூலமாக பணம் உழைக்க வேண்டும் என்பது இருந்தாலும், பணம் உழைப்பதுதான் முதன்மையாக இருக்க முடியாது. பணம் உழைப்பதுடன் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்வது ஆகவும் முதன்மையாக இருக்க வேண்டும். இதற்கு மாற்றமாக இருந்தால் அல்லாஹ் நிச்சயமாக அத்தகைய முகவர்களை கேவலப்படுத்திவிடுவான். இத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டுள்ள முகவர்கள் ஊடாக ஹஜ் கடமைக்கு செல்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு முஸ்லிம்களின் நடவடிக்கைகள் இருக்கின்ற நிலையில் இலங்கை முஸ்லிம்கள் சமகாலத்தில் எதிர் கொண்டிருக்கும் சவால்களை வெற்றி கொள்ள முடியாது. ஒரு முஸ்லிம் முதலில் தன்னுடைய தனித்துவத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நாட்டுடன் பற்றுடன் இருக்க வேண்டும். ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு, நாட்டிற்கு எந்தத் தியாகத்தையும் செய்யலாம். அல்லாஹ்வும் இதனையே விரும்புகின்றான். ஆனால், முஸ்லிமாக இல்லாது எந்த நல்ல காரியங்களைச் செய்தாலும் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது.
நன்றி: விடிவெள்ளி


0 comments:
Post a Comment