முல்லைத்தீவு மாவட்டம்
கேப்பாப்பிலவு பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்களுக்குச்
சொந்தமான 240 ஏக்கர் வயற்காணிகள் இராணுவத்தினரால் இன்று வியாழக்கிழமை
நிலத்துக்கு சொந்தக்காரர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் மற்றும் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டு இந்தக் காணிகள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆவணங்களும் காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
ஐநூறு ஏக்கருக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்குச் சொந்தமான வயற்காணிகள் இராணவத்தினர் மற்றும் விமானப்படையினர் வசம் இருந்து வந்தன. இவற்றில் பத்து ஏக்கர் காணிகளைத் தவிர மிகுதி காணிகள் முழுவதும் உரியவர்களிடம் இன்றுடன் கையளிக்கப்பட்டுவிட்டதாக கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் இராசையா பரமேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
கேப்பாப்பிலவு பகுதி மக்களுடைய வயற்காணிகள் உரியவர்களிடம் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, அந்த மக்களுக்குச் சொந்தமாக இருந்த காணிகளின் அளவு காணிகளை மேட்டு நிலக்காணிகளாக வழங்குவதற்கென 250 ஏக்கர் காணி அடையாளப்படுத்தப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.
இந்த மக்கள் குடியிருந்த காணிகளுக்குப் பதிலாகவே குடும்பம் ஒன்றிற்கு கால் எக்கர் காணியில் வீடுகள் அமைத்து கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் இவர்கள் குடியேற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
0 comments:
Post a Comment