இலங்கையில் பதுளை மாவட்டம் பண்டாரவளை நகரில் இலங்கை
தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) வேட்பாளர்களின் இறுதிகட்ட தேர்தல்
பிரச்சாரத்தின் போது இடம் பெற்ற சம்பவம் வாகன விபத்து அல்ல என்று அந்த
கட்சி மறுத்துள்ளது. மாறாக வேட்பாளர்களில் ஒருவரான செந்தில் தொண்டமானை கொலை
செய்வதற்கான ஒரு சூழ்ச்சி என்று அந்த கட்சி குற்றம் சாட்டுகின்றது.
நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஊவா மாகாண
சபைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று புதன்கிழமை நள்ளிரவுடன்
முடிவடைந்தது.
சம்பவத்தின் போது வேட்பாளர் செந்தில் தொண்டமானுடன்
அவரது பாதுகாப்பு கடமையிலிருந்த 4 காவல்துறையினர் மற்றும் அவரது
ஆதரவாளர்கள் என சுமார் 31 பேர் காயமடைந்து அரசாங்க மருத்துவமனையில்
சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து தலைமறைவாகியிருந்த அவரது
வாகன சாரதி காவல்துறையினரிடம் சரணடைந்தததையடுத்து தற்போது கைது
செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய
இ.தொ.கா தலைவர்களில் ஒருவரான முத்து சிவலிங்கம், இந்த சம்பவத்தை விபத்தாக
நோக்க முடியாது என்றும் இதை ஒரு தனி நபர் செய்யவில்லை என்றும் இது ஒரு
கூட்டுச் சதி என்றும் தெரிவித்தார்.
இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் வாகனம் வேகமாக
செலுத்தப்படுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் மூலம் இது ஒரு
சதி நடவடிக்கை என உறுதிபட கூறமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த சம்பவம் விபத்தா? அல்லது திட்டமிடப்பட்டதா
? என்பது தொடர்பாக தற்போது எதுவும் கூற முடியாது என காவல்துறை
கூறியுள்ளது. இதுகுறித்து சம்பவத்தில் தொடர்புடைய அனைவரிடமும்
வாக்குமூலங்கள் பெறப்பட்டு விசாரனைகள் முடிந்த பின்னரே அது பற்றி
தெரியவரும் என காவல்துறையின் ஊடகப்பேச்சாளரான அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
BBC-
0 comments:
Post a Comment