• Latest News

    September 19, 2014

    அமைச்சர் பசீர் சேகு தாவூத் கூறிவரும் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்தே ஆகும்

    அமைச்சர் பசீர் சேகு தாவூத் கூறிவரும் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்களே அன்றி அவை கட்சியினதோ அல்லது தலைவரினதோ நிலைப்பாடல்ல என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்துள்ளார்.

    இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

    அமைச்சர் பசீர் சேகு தாவூத் அண்மைக்காலமாக ஜனாதிபதிக்கு ஆதரவாக கூறிவரும் கருத்துக்கள் தொடர்பில் எனது நண்பர்கள் நேரடியாகவும் பேஸ் புக் அன்பர்கள் சட் மற்றும் ஈமெயில் ஊடாகவும் கேட்கின்றனர். அவ்வாறு அவர் தெரிவிப்பதாக ஊடகங்களில் வெளிவரும் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்களே அன்றி அவை கட்சியினதோ அல்லது தலைவரினதோ தீர்மானங்களோ கருத்துக்களோவல்ல என்பதை தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
    மேலும், கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களேயன்றி வேறு யாரும் இல்லை. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவோ இதில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பிலோ இன்னும் கட்சி எந்த தீர்மானங்களோ அல்லது நிலைப்பாடோ எடுக்கவில்லை
    .
    'இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களின் பின்னர் நடைபெறப்போகும் ஒரு தேர்தல் தொடர்பில் அவசரமாக தீர்மானம் எடுக்க முடியாது. ஏனெனில் அரசியலில் மூன்று அல்லது நான்கு மாதங்கள் என்பது மிக நீண்ட காலமாகும் அதில் என்னவென்ன மாற்றங்கள் இடம்பெறும் என்பது ஊகிக்க முடியாத ஒன்று' என்று தலைவர் ஏலவே அறிவித்து விட்டார்.

    இவ்வாறுதான் பிரேமதாச அவர்களை தொன்நூற்றி நான்காம் ஆண்டு நடைபெறவிருந்த அவருடைய இரண்டாவது தேர்தலிலும் ஆதரிக்கும் மனநிலையில் முஸ்லிம் காங்கிரஸ் இருந்தபோதிலும் பிரேமதாச புலிகளால் கொல்லப்பட்டு காமினி திசாநாயக்க வேட்பாளர் ஆக்கப்பட்டு அவரும் புலிகளால் கொல்லப்பட்டு அவருடைய மனைவி சிறிமா திசநாயக்க தேர்தலில் களம் இறங்கினார். மறுபுறம் அன்றைய காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வெறுத்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளராக சந்திரிக்கா களமிறக்கப்பட்டு அவரை ஆதரித்து ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் புதிய பரிமாணம் எடுத்த தடயத்தை அவ்வளவு இலகுவாக மறக்க முடியாது.

    மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியாது என்கின்ற சட்ட சிக்கலும் ஏதோ ஒரு அரசியல் பின்னணியில் தான் ஆரம்பிக்கபட்டுள்ளதாக கூறப்படும் சூழ்நிலையில் இவை தொடர்பில் முஸ்லிம் சமூகம் மிகக்கவனமாக அவதானிக்க வேண்டிய தேவையுமுள்ளது என்பதை நாம் எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

    பதினெட்டாவது சரத்து திருத்தத்துக்கு முன்னரான சரத்தின் பிரகாரம் தனது இரண்டாவது பதவிக்காலத்திற்கான பதவிப்பிரமானத்தினை செய்துவிட்டதினால் ஜனாதிபதி பழைய சரத்தில் கூறப்பட்டுள்ளதின் பிரகாரம் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்கலாம் மூன்றாவது தடவை போட்டியிடும் தகுதி அவருக்கு இல்லை என்னும் விடயம் உச்சநீதிமன்றம் சென்று மீண்டும் போட்டியிட முடியும் என்ற தீர்ப்பு வழங்கப்படுமாயின் அது சந்திரிகா குமாரணதுங்கவுக்கும் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெற்றுக்கொடுக்குமென அரசியல் அவதானிகள் கூறுகின்ற நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் அவசரமாக தீர்மானங்கள் எடுப்பது பொருத்தமானதல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

    ஆகவே ஜனாதிபதி களமிறங்குவாரா என்றும் சந்திரிக்கா களமிறக்கப்படுவாரா என்றும் அல்லது வேறு புதிய கூட்டு உருவாகுவதன் மூலம் வேறு ஒரு பொது வேட்பாளர் களமிறக்கப்படுவாரா என்ற நிலையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவசரப்பட்டு முடிவெடுப்பது அறிவு சார்ந்த விடயமல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொண்டிருக்கிறோம் என அவ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அமைச்சர் பசீர் சேகு தாவூத் கூறிவரும் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்தே ஆகும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top