• Latest News

    September 10, 2014

    நாட்டில் உள்ள ஷரிஆ சட்டம் துடைத்தெறியப்பட வேண்டும்: பொதுபல சேனா

    நாட்டில் உள்ள ஷரிஆ சட்டம் பாரிய பிரச்சினையாக உள்ளதாகவும் அதனை நீக்க வேண்டுமேனவும் பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடும்போக்கு பொதுபல சேனாவின் தலைமைக் காரியாலயத்தில் 09-09-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவ்வமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே இவ்வாறு தெரிவித்தார். இந்த நாட்டில் ஷரிஆ சட்டத்தின் அடிப்படையில் இயங்கும் வங்கி முறைமை தடை செய்யப்பட வேண்டும். இதற்காக நாடளாவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

    நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையால் நாட்டில் பிரச்சினை இல்லை. ஆனால், அதனைவிடப் பயங்கரமாகவுள்ள இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தை நீக்க வேண்டும். இதுவே எமது பாரிய பிரச்சினையாகும். இந்த நாட்டில் ஷரிஆ சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாராளுமன்றத்தில் மசோதா கொண்டுவருவதும் சட்டவிரோதமானது. அதனை நிறைவேற்றி சட்டமாக்குவதும் சட்ட விரோதமானது.

    இந்த நாட்டில் காஸி நீதிமன்றங்கள் ஷரிஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன. இவை எமது நாட்டுக்குத் தேவையற்றது. மேலும், ஷரிஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தென் கிழக்குப் பல்கலைக்கழகம் இந்த நாட்டுக்கு மிகவும் பயங்கரமான ஒன்றாகும்.

    பல்கலைக்கழகத்தில் உள்ள சகல பீடங்களும் ஷரிஆ சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே காணப்படுகின்றன.

    இஸ்லாமிய கற்கைகளுக்கான பிரிவு, இஸ்லாமிய சிந்தனைக்கும், கலாச்சாரத்துக்குமான பிரிவு, இஸ்லாமிய ஷரிஆ சட்டப் பிரிவு,  இஸ்லாமிய வங்கி மற்றும் நிதி முறைமைப் பிரிவு என்ற பெயர்களில் பல்வேறு பீடங்கள் இயங்குகின்றன.

    இந்த நாட்டிலிருந்து ஷரிஆ சட்டம் துடைத்தெறியப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக சட்டங்களை நடைமுறைப்படுத்தும் இந்த தனியார் சட்டத்தை நீக்க வேண்டும்…… எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த அனைத்து விடயங்களையும் நாட்டிலிருந்து நீக்கி விடுகின்ற ஒரு அரசாங்கத்தை உருவாக்குமாறு கோரி பொதுபல சேனா பாதைக்கு இறங்கும் எனவும் அவர் மேலும் கூறினார்.

    முஸ்லிம் கிறிஸ்தவ பயங்கரவாத செயற்பாடுகளையும்  நியாயப்படுத்தவே ஐ.நாவின் புதிய ஆணையாளர் செய்யித் அல் – ஹுசைன் முயற்சிக்கின்றார்.-
    ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் நவதீம்பிள்ளை தமிழ் பயங்கரவாத செயற்பாடுகளை ஆதரித்து தனது கடமையினை செய்து முடித்தார். இப்போது புதிய ஆணையாளராக பதவியேற்றுள்ள செய்யத் அல் – ஹுசைன் தமிழ் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அப்பால் சென்று முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ பயங்கரவாத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் தனது பணியினை ஆரம்பித்துள்ளார்.
     
    இலங்கையில் பயங்கரவாதமொன்றினை அழித்தமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை பேசிக் கொண்டிருக்கின்றது. ஆனால், இன்று சிரியாவிலும் இஸ்ரேல், பாலஸ்தீன பகுதிகளில் பொது மக்களை இனப்படுகொலை செய்யும் முஸ்லிம் தீவிரவாத  அமைப்புகளுக்கு எதிராகவும் பெண்களையும் கர்ப்பிணிகளையும் கொலை செய்து உலகில் இஸ்லாமிய பயங்கரவாதத்தை  பரப்பும் ஆயுதப் போராளிகளுக்கு எதிராகவும் ஆணையாளரின் வாய் திறக்காதுள்ளது.
     
    மேலும், புரூனையில் பௌத்தர்களை கொன்று இஸ்லாமிய நாடாக்கும் முயற்சியில் முஸ்லிம் பயங்கரவாதிகள் செயற்படுகின்றனர். இஸ்லாமியரல்லாத ஏனைய மத பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குகின்றனர். இவை மனித உரிமை மீறள்களாக ஏன் இவ்வமைப்புகளுக்கு தெரியவில்லை.
     
    இலங்கையில் இடம்பெற்று முடிந்த பழைய சம்பவங்களை மீண்டும் கிளறிவிட்டு இலங்கைக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒற்றுமையினையும் அமைதியினையும் சீரழிக்கும் முயற்சியில் சர்வதேசம் செயற்படுகின்றது. இவை அனைத்தையும் நிறுத்திவிட்டு இங்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமை சம்பவங்களையும் இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகளையும் தடுத்து நிறுத்த இவர்கள் ஏதெனும் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
     
    விதாரான்தெனிய நந்த தேரர்
    தமிழீழ விடுதலைப் புலிகளுடனான 30 ஆண்டுகால யுத்தத்தில் ஏற்பட்ட இழப்புக்களை விடவும் அதிகளவு இழப்புக்கள் முஸ்லிம் கடும்போக்குவாதத்தின் ஊடாக ஏற்படக் கூடுமென விதாரான்தெனிய நந்த தேரர் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் முஸ்லிம் கடும்போக்குவாதம் பரவுவதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கையின் சில வங்கிகளில் ஷரியா   சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் இதனை தடுத்த நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் நாட்டில் ஷரியா சட்டத்தை அமுல்படுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அசாத் சாலி, மிலிந்த மொரகொட, அலவி மௌலானா போன்றவர்கள் ஆதரவளித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: நாட்டில் உள்ள ஷரிஆ சட்டம் துடைத்தெறியப்பட வேண்டும்: பொதுபல சேனா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top