அரசாங்கம்
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திட்டமிட்டு முடக்கி விட்டுள்ள
சூழ்ச்சியை அமைச்சர்களான ஹக்கீமும், ரிஷாத்தும் கொண்டு
நடத்துகின்றனர் என தெரிவித்த மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர்
ரஹ்மான் அச்சூழ்ச்சியை முறியடிக்க முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
வெலிமடை, குருத்தலாவையில் ஐ.தே.க.
வேட்பாளர்களான அமீர் மொஹமட் மற்றும் நசீர் ஆகியோரை ஆதரித்து
இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
இந்த தேர்தலில் அமைச்சர் ஹக்கீமும்
ரிஷாத்தும் சமூகத்தின் ஒற்றுமையின் அவசியம் தொடர்பில் கதைக்கின்றனர்.
ஆனால், ஒரே கட்சியில் இருந்து இவர்கள் தமது சுய லாபங்களுக்கான
சமூகத்தை கூறு போட்டு இனவாதம், பிரதேச வாதம், கட்சிபேதம் போன்றவற்றை
சமூகத்தின் மத்தியில் திணித்தவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இவர்கள் சொற்ப அரசியல் இலாபங்களுக்காக அரசாங்கத்தின் ஆதரவுடனும்
ஜனாதிபதியின் ஆசீர்வாதத்துடனும் ஒற்றுமையாக இருப்பது போல்
நடிக்கின்றனர். இந்த நாடகம் எல்லாம் தேர்தல் முடிந்தவுடன் நிறைவுக்கு
வந்து விடும்.
இவர்களின் ஒற்றுமையில் சமூகத்திற்கு
எந்தவித பலனும் கிடைக்காது. அரசாங்கத்தை முஸ்லிம் மக்கள் முற்று
முழுதாக நிராகரித்து விட்டனர். அதேபோல் அரசின் கபட நாடகங்களை
அரங்கேற்றுபவர்களையும் மக்கள் நிராகரிக்க வேண்டும்.
அரசை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும்
இவர்களின் முயற்சியை மக்கள் முறியடிக்க வேண்டும். அரசாங்கத்திற்கு
நல்லதொரு பாடத்தை புகட்ட வேண்டும். இன்று அரசாங்கத்தை வீட்டுக்கு
அனுப்ப பதுளை மக்கள் முன்வந்துள்ளனர். இதனை முறியடிக்க சிலர்
அரசாங்கத்தின் கைக்கூலிகளாக பதுளைக்கு வந்துள்ளனர்.
அரசு முஸ்லிம்களுக்கும்
தமிழர்களுக்கும் செய்த அநியாயத்திற்கு இவர்களும் துணை போகின்றனர்.
அரசாங்கத்தை நிராகரிப்பதோடு அதன் கைக்கூலிகளையும் நிராகரித்து
ஐ.தே.க. ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை வழங்க மக்கள்
முன்வந்துள்ளனர்.தேசிய ஐக்கியத்தினூடாகவே தமிழ், முஸ்லிம் மக்களின்
பாதுகாப்பை உறுதிப்படுத்தி உரிமைகளை பேணுவதற்கான சந்தர்ப்பம்
கிடைக்கும்.எனவே, ஐ.தே. கட்சியின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம் என்றார்.