• Latest News

    October 25, 2014

    வெல்லும் குதிரையில் பந்தயம் கட்டுமாறு எங்கள் கட்சியில் சிலர் பதறுகின்றார்கள்: ரவூப் ஹக்கிம்

    எஸ்.அக்தர்: ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் முடிந்த பிறகு பேரம் பேச முடியாது.  அதன்பிறகு எதுவும் எடுபடாது. தேர்தலுக்கு முன்பு தான் எதையும் பேசியாக வேண்டும். நாங்கள் ஆதரிப்பதற்கு முன்பு பேசுகிறோம். அதற்கு முன் வெல்லுகின்ற குதிரைக்கு பந்தயம் கட்டுங்கள் என்று சிலர் பதறிக் கொண்டிருக்கிறார்கள்.

    இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் கல்முனை, சம்மாந்துறை ஆகிய இடங்களில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் இரண்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார். 
    அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

    இப்பொழுது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் நெருக்கடியான ஒரு கட்டத்தில் உள்ளது. முன்னொரு போதும் சந்தித்திராத பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்திருக்கிறது. ஒரு கண்டத்தை தாண்ட வேண்டியிருக்கிறது.

    இந்தச் சந்தர்ப்பத்தில் நான் சொல்லாதவற்றையெல்லாம் சொன்னதாகச் சொல்லி மக்கள் மத்தியில் தேவையற்ற வதந்திகளை சிலர் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். நான் சில தினங்களுக்கு முன் புனித மக்காவுக்கு உம்றா கடமைக்காக சென்றிருந்ததைக் கூட அரசியல் மயப்படுத்தி சில பத்திரிகைகளும் இணையத்தளங்களும் விசமத்தனமான கருத்துக்களை பரப்பின.

    தேசிய அரசியல் பெருச்சாளிகளெல்லாம் வித்தியாசமான கோலங்களோடு, மழை காலத்தில் புற்றீசல்கள் வெளிக்கிளம்புவதைப் போல படையெடுத்து வருகிறார்கள். அவ்வாறு வந்து எல்லாப் பழிகளையும் எங்கள் மீது சுமத்துவார்கள்.  ஆனால், இந்த இயக்கம் தியாகத்தினால் வளர்ந்தது. சவால்களுக்குப் பயப்பட்ட இயக்கம் அல்ல. ஆளும் கட்சியில் இன்று எங்களை விட யாரும் எதிர்க்கட்சியாக இருக்க முடியாது. முஸ்லிம்களை பொறுத்தமட்டில் நாங்கள்தான் இன்று ஆளும் கட்சிக்குள் எதிர்கட்சியினர்.

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இந்த அரசாங்கத்தில் அமைச்சர் ஒருவராக இருப்பதை   மிகப்பெரிய தவறாக ஐக்கிய தேசியக் கட்சி பார்க்கின்றது. ஆனால், அமைச்சராக இருந்துகொண்டு அனுபவிக்கும் அவஸ்தை எனக்குத்தான் தெரியும். அதைவிட எதிர்க்கட்சியில் இருந்தால் நிம்மதியாக இருக்கலாம்.

    1988ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த முடிவின் பின்புலம்தான் இந்தத் தேர்தலில் எடுக்கப் போகும் முடிவைத் தீர்மானிக்க வேண்டும.; இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கம் இருக்கிறது. அன்று  ஆறில் ஐந்து  பெரும்பான்மையுள்ள அரசாங்கம் இருந்தது. அவ்வாறான அரசாங்கம் வருவது மிகவும் அபூர்வம். அது நாங்கள் கொடுக்காத ஆறில் ஐந்து. இது நாங்கள் கொடுத்த மூன்றில் இரண்டு.

    எங்களை முந்திக்கொண்டு ஜாதிக ஹெல உருமயவினர் ஒரு பெரிய பட்டியலை கையளித்திருக்கிறார்கள். இவற்றை நிறைவேற்றினால்தான் உங்களுக்கு எங்கள் ஆதாரவு கிடைக்கும் என்று பகிரங்க அறிவிப்பு விடுத்திருக்கிறார்கள்.

    ஆனால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாருடனும் இன்னும் பேச்சுவார்த்தைக்கு போகவில்லை. எங்களுக்குள் நாங்கள் கலந்தாலோசனை (மஷூரா) செய்து கொண்டிருக்கிறோம். சரியான பாதையை கண்டு கொள்வதில் எங்களுக்கு தடுமாற்றம் ஏற்பட்டு விடக் கூடாதென்பதில் மிகவும் அவதானமாக இருக்கிறோம்.   அவ்வாறான நிலையில் நாம் வகுக்கும் வியூகம் எதுவாக இருந்தாலும், அது எங்களது கட்சியையும் சமூகத்தையும் பாதுகாக்கு;ம ஒரே நோக்கிலேயே இருக்க வேண்டும்.

    ஒரு அபரிமிதமான யுத்த வெற்றியினால் இந்த அரசாங்கத்தின் ஆதரவு என்பது ஒரு வீக்கம் மாத்திரம் தான். அது வளர்ச்சியல்ல, வெறும் வீக்கம். அந்த வீக்கம் இப்பொழுது  இறங்குகிறது.  அந்த வீக்கத்தை வளர்ச்சியென அரசாங்கம் நினைத்தால் அது மகா தவறாகும்.

    வெல்லுகின்ற குதிரைக்குத்தான் பந்தயம் கட்ட வேண்டுமென்று எங்கள் கட்சியில் சிலர் கதைக்கிறார்கள். எங்களுக்குத் தேவை ஜனாதிபதித் தேர்தல் அல்ல. ஒரு பாராளுமன்றத் தேர்தலை நடாத்துங்கள். பாராளுமன்றத் தேர்தல் என்றால் தேர்தல் முடிந்த பிறகும் பேரம் பேசலாம். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் முடிந்த பிறகு பேரம் பேச முடியாது.  அதன்பிறகு எதுவும் எடுபடாது. தேர்தலுக்கு முன்பு தான் எதையும் பேசியாக வேண்டும். நாங்கள் ஆதரிப்பதற்கு முன்பு பேசுகிறோம். அதற்கு முன் வெல்லுகின்ற குதிரைக்கு பந்தயம் கட்டுங்கள் என்று சிலர் பதறிக் கொண்டிருக்கிறார்கள்.

    இது பொறுப்பு வாய்ந்த முஸ்லிம் காங்கிரஸ் காரர்கள் மேற்கொள்ளும் காரியமா? இந்த சமூகத்தின் நம்பிக்கைப் பொறுப்பை (அமானிதத்தை) அழிக்கின்ற காரியமல்லவா? வெல்லுகின்ற குதிரை என்றால் பேரம் பேசுவதற்கு என்ன இருக்கிறது. சும்மா வெறுமனே சோரம் போக வேண்டியது தான்.

    இந்தக் கட்சியின்  முழு நம்பிக்கைப் பொறுப்பும் (அமானிதம்) இன்றைய சூழ்நிலையில் பதினைந்து பேர்களின் கைளிலேயே உள்ளன. அரசியல் உச்சபீடம் என்பது இருந்தாலும், முக்கிய அரசியல் அந்தஸ்துள்ள பதினைந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் எட்டுப் பேர் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள். ஏனைய ஏழு பேர் எமது கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்.

    வெல்லும் குதிரையில் பந்தயம் கட்டும் விளையாட்டு அல்ல. நாங்கள் பெட்டிக் கடை வைத்துக்கொண்டு அரசியல் செய்பவர்கள் அல்ல. நாங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது பயனில்லை. பிரதமராகவும் வாய்ப்புமில்லை. இருப்பதெல்லாம் பேரம் பேசலாம் என்ற ஒரு சந்தர்ப்பம். அதையும் நாசமாக்கும் வேலையைத் தான் வெல்லும் குதிரையில் பந்தயம் கட்ட எத்தனிப்பவர்கள் செய்கிறார்கள். அவர்கள் இப்பொழுது கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம்.  கட்சி இன்னும் முடிவெடுக்கவில்லை.

    முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை எமது இயக்கத்தையும், சமூகத்தையும் பாதுகாப்பதற்கான சரியான வழிவகைகள காண்பது தான் எங்களது தாரக மந்திரம். அதுபற்றி உரிய கவனம் செலுத்துவதற்கு சாதகமான களநிலவரம் உருவாகி வருகின்ற பொழுது அதனைச் சீர் குலைப்பதற்கும், எமது கட்சியின் அந்தஸ்தை அழிப்பதற்கும் சிலர் தலைப்பட்டிருக்கிறார்கள்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: வெல்லும் குதிரையில் பந்தயம் கட்டுமாறு எங்கள் கட்சியில் சிலர் பதறுகின்றார்கள்: ரவூப் ஹக்கிம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top