• Latest News

    October 29, 2014

    பதுளையில் பாரிய மண்சரிவு பலர் பலியாகியிருக்கலாம் என சந்தேகம்!- இதுவரை பத்து சடலங்கள் மீட்பு

    பதுளையில் பாரிய மண்சரிவு இடம்பெற்றுள்ளதாகவும் இதில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

    பெருந்தோட்ட தமிழ் மக்கள் அதிகமாக வாழும் கொஸ்லந்த மீரியாவத்த என்னும் இடத்தில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

    சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிக்குண்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

    மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு பகுதியில் மண்சரிவு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    சுமார் நான்கு லயன்கள் முற்றாக மண் சரிவினால் மூடப்பட்டுள்ளது.
    மண் சரிவில் சிக்குண்டவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
    இதுவரை பத்து சடலங்கள் மீட்பு
    பதுளை ஹல்துமுல்ல கொஸ்வத்த மிரியாபெத்த என்னும் இடத்தில் இடம்பெற்ற மண் சரிவில் இதுவரை,  உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் வெளியிடப்படவில்லை. சடலங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    பெரும் எண்ணிக்கையிலான பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

    இராணுவத்தினரும் பொலிஸாரும் தொடர்ந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துங்கள்! ஜனாதிபதி உத்தரவு

    பதுளையில் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் அவசர கால நடவடிக்கை ஒழுங்கு விதிகளின் பிரகாரம், அப்பகுதி பேரிடர் முகாமைத்துவ அதிகாரியை மீட்புப் பணிகளுக்கான தலைமை அதிகாரியாக செயற்படுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பிரதேசத்தின் பொலிஸ், இராணுவம் மற்றும் அனைத்து அரச அலுவலகங்களும் அவரது பணிப்புரையின் பிரகாரம் செயற்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் இராணுவ கமாண்டோக்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்தின் விசேட கமாண்டோ படைப்பிரிவின் இரண்டு பட்டாலியன்கள் விசேட ஹெலிகொப்டர்கள் மூலமாக பதுளைக்குத் தருவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    ஹல்துமுல்ல மண்சரிவில் 250 பேரைக் காணவில்லை

    பதுளை ஹல்துமுல்ல மண்சரிவில் 250 பேரைக் காணவில்லை என அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஹல்துமுல்ல கொஸ்லந்த மீரியாபெத்த என்னும் இடத்தில் பெரும் எண்ணிக்கையிலான பெருந்தோட்டத் தொழிலாளர்களின் லயன் வீடுகள் மண் சரிவில் மூழ்கியுள்ளன.

    இதுவரையில் நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

    மண் சரிவில் புதையுண்ட பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

    மீட்புப் பணிகளுக்காக இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

    மண்ணில் புதையுண்டவர்களின் எண்ணிக்கைகள் வெளியிடப்படவில்லை.








    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பதுளையில் பாரிய மண்சரிவு பலர் பலியாகியிருக்கலாம் என சந்தேகம்!- இதுவரை பத்து சடலங்கள் மீட்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top