ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து, 17 அரசியல்
அமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என ஜாதிக ஹெல
உறுமய கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை
என்றால், தான் உட்பட முக்கிய அமைச்சர்கள் சிலர் அரசாங்கத்தில் இருந்து
விலக தீர்மானித்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் உப தலைவர் அத்துரலியே ரத்ன
தேரர் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது
கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என தான் உட்பட
அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாகவும் இறுதித் தீர்மானம் எதிர்வரும் 14
ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு மற்றும் மக்களின் நலனுக்காக
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து 17வது
அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துமாறு
அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சி என்ற வகையில் ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த
முக்கியமான யோசனைகள் எதனையும் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தவறியுள்ளது.
இவ்வாறான பின்னணியில் தொடர்ந்தும்
அரசாங்கத்தை பாதுகாத்து கொண்டு அரசாங்கத்திற்குள் இருப்பது மக்களுக்கு
செய்யும் துரோகம் என்பதால், நான் உள்ளிட்ட அமைச்சர்கள் இந்த தீர்மானத்தை
எடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அத்துரலியே ரத்ன தேரர்
தலைமையிலான அமைப்பு எதிர்வரும் 14 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச
மாநாட்டு மண்டபத்தில் அரசியல் அமைப்புத் திருத்தங்கள் சம்பந்தமான யோசனையை
வெளியிட உள்ளது.
இதில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,
ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி மற்றும் இடதுசாரி
கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
நாட்டின் தற்போதைய அரசியல் அமைப்புச்
சட்டத்தை மாற்றுவது, 17வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை
அமுல்படுத்துவது, விருப்பு வாக்கு முறையை ஒழிப்பது, ஜனாதிபதி மற்றும்
பொதுத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது, அரசாங்கத்தின் அதிகாரத்தை
பிரதமருக்கு வழங்குவது, ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சை மாத்திரம்
வழங்குவது, உறவினர்கள், நண்பர்களுக்கு பதவிகளை வழங்கும் முறையை இல்லாமல்
செய்வது ஆகிய யோசனைகள் இதில் முன்வைக்கப்பட உள்ளன.
0 comments:
Post a Comment