முஸ்லிம்கள் சமயத்தையும், கலாசாரத்தையும் உரிய முறையில் பேணிப் பாதுகாத்து வாழ்வதற்கான சூழ்நிலை நிலவ வேண்டுமென அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதோடு, இஸ்லாம் வலியுறுத்தும் தியாக சிந்தை, சகிப்புத் தன்மை என்பவற்றை வாழ்வில் கடைப்பிடித்து ஒற்றுமையை நிலைநாட்டப் பாடுபட வேண்டும்.
இவ்வாறு நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள 'ஈதுல் அழ்ஹா' வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள பெருநாள் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
வல்லரசுகளும், தீய சக்திகளும் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளின் விளைவாக ஏவி விடப்பட்டு அரபு நாடுகளிலும், ஏனைய சில இஸ்லாமிய நாடுகளிலும் உள்நாட்டு யுத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதனால், முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பாரிய உயிரிழப்புகளுக்கும் உடைமை இழப்புகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். இலட்சக்கணக்கானோர் அகதிகளாகி இடம்பெயர்ந்து துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
குறிப்பாக, பலஸ்தீனத்தில் காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் ஈவிரக்கமற்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களினால் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு, பாரிய சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறிருக்க, நமது தாய் நாடான இலங்கையில் முஸ்லிம்கள் மீது இனவாத வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எங்களது வேத நூலான புனித குர்ஆனைக் கூட அவமதிக்கும் விதத்தில் இனவாதிகள் மிகவும் கீழ்தரமாக நடந்து கொள்கிறார்கள்.
இனவாதிகளால் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவரும் வன்செயல்களை கட்டுப்படுத்துவதற்கும், தடுத்து நிறுத்துவதற்கும் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தாதிருப்பதும் கவலைக்குரியது.
யுத்தம் நிலவிய காலத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்து, இன்னும் உரிய பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகளுடன் மீள்குடியேற்றப்படாதவர்களின் நிலைமையிலும் மாற்றங்கள் இல்லை.
இவ்வாறான மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்தப் பெருநாளை சந்திக்கின்றோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக.
இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் விடுத்துள்ள 'ஈதுல் அழ்ஹா' செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment