நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதுடன் அளுத்கம மற்றும் ஏனைய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாறக் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் நாம் மிகுந்த கவலை கொண்டுள்ளோம் என்பதை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.
முஸ்லிம்கள் சமாதானத்தை விரும்பும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தினர் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். ஏனைய இனங்களுடன் சமாதானத்தையும் நல்லுறவினையும் பேணி இந்நாட்டில் வாழும் நாம் நாட்டுப்பற்றுடையவர்கள். ரி.பி. ஜாயா போன்ற எமது தலைவர்கள் இந்நாட்டின் சுதந்திரத்துக்குப் பங்காற்றியவர்கள். எமது சமூகம் இந்நாட்டின் அபிவிருத்திக்கு தொடராக பங்களிப்புகளைச் செய்து வருகிறது.
இதேவேளை, அண்மைக்காலமாக குறிப்பிட்ட நன்கு அறியப்பட்ட சில தரப்பினர் இஸ்லாத்துக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். முஹம்மது நபியை அவதூறு செய்கிறார்கள். மக்களை தீய நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகின்றனர். முஸ்லிம்களும் அவர்களது வீடுகளும், மதத் தலங்களும் தாக்கப்படுகின்றன.
இவ்வாறான குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. சட்டத்தின் முன் அவர்கள் நிறுத்தப்படவில்லை. குறிப்பிட்ட குழுக்களின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அடுத்தே அண்மையில் அழுத்கமயில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களது வீடுகள், வர்த்தக நிலையங்கள் சேதங்களுக்குள்ளாக்கப்பட்டன.
அரசாங்கம் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமலிருக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அரசாங்கம் முஸ்லிம்கள் உட்பட இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
அளுத்கம உட்பட ஏனைய பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடமைகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment