• Latest News

    October 07, 2014

    தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளை வரவேற்போம்

    இஸ்லாம் இரண்டு பெருநாட்களை மனித வாழ்விற்கு மிகவும் அவசியமான இரண்டு பெறுமானங்களின் அடிப்படையில் ஏற்படுத்தியுள்ளது. இதில் இறைதூதர் இப்றாஹிம் (அலை) அவர்களின் வாழ்வியல் வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் 'ஈதுல் அழ்ஹா' எனும் திருநாளை தியாகத்தின் அடிப்படையில் இஸ்லாம் அமைத்துள்ளது. இது இஸ்லாமிய திருநாள்களில் காணப்படும் ஒரு சிறப்பம்சமாகும்.

    துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது பிறையினை ஹஜ்ஜுப் பெருநாளாக கொண்டாடி மகிழ்கின்ற நமக்கு ஹஜ்ஜுப் பெருநாள் என்றதுமே இரண்டு நபிமார்களைப் பற்றி நினைவிற்கு வரும். அவர்கள் நபி இப்றாஹிம் (அலை) அவர்களும் அவர்களின் அருமைப் புதல்வர் நபி இஸ்மாயில் (அலை) அவர்களுமாவார்கள். அல்லாஹ்வின் அருள்மறையாம் திருக்குர்ஆனை கருத்தூன்றி ஆராயும் போது நபி  இப்றாஹிம் (அலை) அவர்களுடைய தியாகவாழ்வு பொன்னெழுத்தால் பொறிக்கப்பட வேண்டிய அற்புத வரலாறாகும். நபி இப்றாஹிம் (அலை) அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனைகளையும் வேதனைகளையும் துன்ப துயரங்களையும் அவர்கள் பொறுமையுடன் சகித்திருந்து இறைவனிடம் பிரார்த்தித்து வெற்றி பெற்ற வீர வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகும்.
    நாடு, மொழி, இனம், நிறம், கோத்திரம், செல்வம், செல்வாக்கு ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வுடன் ஒன்று கூடும் உலக மகா மாநாடு தான் ஹஜ்.

    அமல்களில் சிறந்தது 'செயல்களில் சிறந்தது எது?' என நபி (ஸல் ) அவர்களிடம் கேட்கப்பட்டது. 'அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை  கொள்வது' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டது. 'அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது' என்றார்கள். 'பின்னர் எது?' என்று கேட்கப்பட்டது. 'ஏற்றுக்கொள்ளப்படும் ஹஜ்' என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 26

    பெண்களின் ஜிஹாத் பற்றி 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகின்றோம். எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், 'இல்லை. எனினும் (பெண்களுக்கு) சிறந்த ஜிஹாத், பாவச் செயல் எதுவும்; கலவாத ஹஜ் தான்' என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஸா (ரலி), நூல்: புகாரி 1520.

    ஹஜ்ஜுப் பெருநாள் அன்று பள்ளிவாசலுக்குச் சென்று பெருநாள் தொழுகை முடிந்ததும் கடமை முடிந்தது என்று நினைக்காமல் ஹஜ்ஜுப் பெருநாள் சிந்தனைகளை குறிப்பாக நபி இப்றாஹிம் (அலை) அவர்களுடைய வாழ்க்கைப் பாதையினை நெஞ்சில் நிறுத்தி உறவினர் நண்பர்களிடையே ஒருவருக்கொருவர் உபதேசம் செய்ய வேண்டும். வசதிமிக்கவர்கள் குர்பானி கொடுக்க வேண்டும்.  மேலும் ஹஜ்ஜு மாதம் பிறை 9 அதாவது அரபா தினம் என்றழைக்கப்படும் நாளில் சுன்னத்தான நோன்பு நோற்க வேண்டும். அரபா தினத்தில் நோன்பு நோற்பது முந்தைய மற்றும் அடுத்;;த இரண்டு வருட பாவங்களையும் மன்னிக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: முஸ்லிம், அபூதாவுத், திர்மிதி, இப்னு மாஜா அறிவிப்பவர்: அபூகதாதா (ரழி).

    ஹஜ்ஜூப் பெருநாளன்று பிராணிகளை அறுத்துப் பலியிடுவதே குர்பான என்று சொல்லப்படுகிறது. நபி இபுறாஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை முன் மாதிரியாகக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் இதனைச் செய்துள்ளனர். அல்லாஹ்வும் தன் திருமறையில் இதை ஒரு வணக்கமாக அங்கீகரித்துள்ளான். உமது இறைவனுக்காக தொழுது மேலும் (அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 108:2).
    குர்பானி கொடுக்க வேண்டும் என்று எவர் நாடுகிறாரோ அவர் துல்ஹஜ் பிறை ஒன்றிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை பத்து நாட்களுக்கு நகங்கள், முடிகளை களையக் கூடாது.  

    நோன்புப் பெருநாள், ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதிகமான ஆண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் இத்தொழுகைகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்களே தவிர பெண்கள் ஆர்வம் காட்டுவதாகவோ கட்டாயம் என உணர்ந்து கொண்டதாகவோ தெரியவில்லை. அதனால் தான் ஆண்களை தொழுகைக்கு அனுப்பி விட்டு பெண்கள் வீட்டு (சமையல்) வேலைகளில் முடங்கி விடுகிறார்கள். இன்னும் சிலர் பள்ளியில் தொழுது விட்டு வந்து வீடுகளில் பெண்களுக்கு தொழுகை நடத்துகிறார்கள். இது பெரும் தவறாகும்.

    மேலும் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் பெருநாள் தொழுகைக்காக தொழும் திடலுக்கு (மைதானத்திற்கு) வீட்டை விட்டு புறப்படச் செய்யும் படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகியிருப்பார்கள் என உம்மு அதிய்யா (ரலி)  கூறினார்கள். (நூல்: புகாரி). சில பகுதிகளில் ஆண்களுக்கு ஒரு நேரத்திலும், பெண்களுக்கு வேறொரு நேரத்திலும் பள்ளிவாசல்களில் இரு முறை தொழுகை, குத்பா நடத்துகிறார்கள். சிலசமயங்களில் வீடுகளில் பெண்களுக்கு மாத்திரம் ஜமாஅத் தொழுகை நடத்துகிறார்கள். இவை நபிவழிக்கு முரணான செயலாகும். ஊர்மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒரே ஜமாஅத்தின் கீழ் ஒரே நேரத்தில் ஒரே (திடலில்) மைதானத்தில் தொழக்கூடியதாக ஏற்பாடுகள் செய்வதே நபிவழியாகும்.

    'நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜூப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) மைதானத்திற்கு (தொழுவதற்கு) செல்பவர்களாக இருந்தார்கள'; என அபூஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி). 'நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள'; என புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: திர்மிதீ). 'சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு ) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள';. அறிவிப்பவர்: அனஸ் (ரலி) ( புகாரி )

    ஜாபிர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறினார்கள். நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜூப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்துகள் தொழுதனர். அதற்கு முன்பும், பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: புகாரி)
    நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: அஹ்மத், இப்னு மாஜா).

    வானொலி நிகழ்ச்சிகளில் பெருநாள் தினத்தன்று திரைப்படப் பாடல்களை விரும்பி கேட்பதும் தொலைக்காட்சி;, வீடியோவில் திரைப்படங்கள் பார்ப்பதும் நம் இளையோரிடையே பரவலாக காணப்படுகின்ற பழக்கவழக்கங்களாகும். இது நமது இஸ்லாமியப் பண்பாட்டில் உள்ளது அல்ல என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். நமது இஸ்லாத்தின் கலாசாரத்திற்கு மாற்றமாக நம் மனதை கெடுத்து பல வித தவறான எண்ணங்களையும் கருத்துக்களையும் போதிக்கும் திரைப்படங்களை பார்ப்பதை நாம் கைவிட வேண்டும்.

    மேலும் நமது மனோ இச்சைகளை தூண்டி ஷைத்தானிய எண்ணங்களை நம் மனதில் பதியும் விஷயங்களும் நம் வாழ்க்கையில் பிரதிபலிக்கும் என்பதை மனோவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். அதன்படி நம் இளைய சமுதாயம் வாழ்க்கையில் உயர்ந்து சிறந்த மனிதர்களாக உருவாரதற்கு இந்த திரைப்படங்களும் திரைப்பாடல்களும் தடையாக இருக்கின்றன.
     
    எனவே இறைவனால் எமக்களிக்கப்பட்ட இந்த சங்கை பொருந்திய ஹஜ்ஜுப் பெருநாளை இறைவன் வகுத்த வழியில் இன்று நாம் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடி மகிழ்வோமாக! 'ஈத் முபாறக்'
     
    நஸ்லின் றிப்கா அன்சார்
    பிரதி அதிபர்
    கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலயம், சாய்ந்தமருது


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தியாகத் திருநாளாம் ஹஜ்ஜூப் பெருநாளை வரவேற்போம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top