• Latest News

    November 09, 2014

    பொது வேட்பாளர் சந்திரிக்கா அல்லது கரு ஜயசூரிய!– நாளை புரிந்துணர்வு உடன்படிக்கை

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய ஆகிய இருவரில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் பல எதிர்க்கட்சிகளும் விருப்பம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தற்போது நடைபெற்று வரும் சில முக்கியமான பேச்சுவார்த்தைகளின் பின்னர் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் பொது வேட்பாளர் யார் என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    இந்த நிலையில், பொது வேட்பாளரின் வேலைத்திட்டம் தொடர்பான விடயங்கள் அடங்கிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் எதிர்க்கட்சிகள் நாளை கையெழுத்திட உள்ளதாக கூறப்படுகிறது.

    பொது வேட்பாளராக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சிகள் மற்றும் குழுக்கள் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பதாக இந்த விடயத்துடன் தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஐக்கிய தேசியக் கட்சியின் சஜித் அணியினர் இதனை எதிர்த்த போதிலும் அது வெறும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டமாக சுருங்கியுள்ளது.

    சஜித் பிரேமதாச மற்றும் சிரால் லக்திலக்க ஆகியோர் பொது வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருவதாகவும் பேசப்படுகிறது.

    சந்திரிக்கா அல்லது கரு ஜயசூரிய பொது வேட்பாளராக நிறுத்தப்படுவது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேரடியான தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் ஜாதிக ஹெல உறுமயவும் இதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.

    நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது, தேர்தல் முறையில் மாற்றங்களை செய்வது சுயாதீன ஆணைக்குழுக்கள செயற்பட வைப்பது போன்ற ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியை வலுப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் பொது வேலைத்திட்டம் மற்றும் உடன்படிக்கையில் இணைவது பற்றி ஜே.வி.பி இதுவரை தீர்மானங்களை எடுக்கா விட்டாலும் அதற்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    எனினும் இந்த விடயம் சம்பந்தமான தீர்மானத்தை ஜே.வி.பி இன்று அறிவிக்கும் என அறியகிடைத்துள்ளது.

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான தலைவராக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பொது வேட்பாளராக போட்டியிடவோ அல்லது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சியின் பொதுவேட்பாளரை ஆதரிக்கவோ முன்வந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவை மகிந்த ராஜபக்ஷ இழந்து விடுவார் என்பது இங்கு முக்கியமான அம்சமாக இருக்கும்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொது வேட்பாளர் சந்திரிக்கா அல்லது கரு ஜயசூரிய!– நாளை புரிந்துணர்வு உடன்படிக்கை Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top