• Latest News

    December 11, 2014

    ஒரு நாட்டை முன்னேற்றுவதற்கு தலா வருமானத்தைவிட மக்களின் கொள்வனவு சக்தியே முக்கியமானது : மலேசியாவின் முன்னாள் ஜனாதிபதி மஹதீர் மொஹமட்

    மஹதீர் மொஹமட்
    நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவதற்கு ஐரோப்பிய நாடுகளைவிட, கிழக்கு நாடுகளை முன்னுதாரணமாகக் கொள்வது பொருத்தமானதாக அமையும் என மலேசியாவின் முன்னாள் ஜனாதிபதி மஹதீர் மொஹமட் தெரிவித்தார்.

    மலேசியாவை முன்னேற்றுவதற்கு கிழக்கு நாடுகளையே முன்னுதாரணமாகக் கொண்டதாகக் குறிப்பிட்ட அவர், ஒரு நாட்டை முன்னேற்றுவதற்கு தலா வருமானத்தைவிட மக்களின் கொள்வனவு சக்தியே முக்கியமானது என்றும் கூறினார்.

    பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஹம்பாந்தோட்டையின் அபிவிருத்தி தொடர்பான விசேட செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

    நாட்டை பொருளாதார ரீதியில் உயர்வடையச் செய்வதற்கு உட்கட்டுமான அபிவிருத்தி என்பது மிகவும் முக்கியமானது. விவசாய நாடாகவிருந்த மலேசியாவில் மக்களுக்கு வருமானத்தை ஈட்டிக்கொள்ளக் கூடிய வகையில் விவசாயத்தில் புதுமை புகுத்தப்பட்டதுடன், தொழில்பேட்டைகளும் அமைக்கப்பட்டன. முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதற்கு வீதிக் கட்டமைப்பு மிகவும் முக்கியமானது.

    இதற்காக அதிவேக நெடுஞ்சாலைகள் அமைக்கப் பட்டன. இவற்றை அமைக்கும் பொறுப்பு களும் தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டன. இதற்கு அடுத்ததாக முதலீடுகள் அதிகரிக்கப்பட்டன. சுற்றுலாத்துறை போன்ற புதிய துறைகள் உருவாக்கப்பட்டன.

    மக்களின் வருமானங்களை மேலும் அதிகரிக்கச் செய்வதற்காக நாம் தொழில்நுட்பத் துறையை அறிமுகப்படுத்தி, அதில் மக்களுக்குப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்வதற்கு வெளிநாடுகளுக்கும் அனுப்பிவைத்தோம். அது மட்டுமன்றி நாட்டில் ஈட்டப்படும் வருமானம் மற்றும் முதலீடுகளை அனைவருடனும் பகிர்ந்துகொண்டதன் மூலமே நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

    ஐரோப்பிய நாடுகளைவிட கிழக்கு நாடுகளையே நாம் முன்னோடியாகக் கொண்டுள்ளோம். குறிப்பாக ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகளின் உத்வேகத்தை நாம் முன்மாதிரியாகப் பார்க்கின்றோம். இதனாலேயே ஜப்பானுக்கு எமது தொழிலாளர்களை அனுப்பி தொழில்களின் நேர்மைத்தன்மையை அறிந்துகொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்துள்ளோம்.

    தலா வருமானம் என்பதைவிட நாட்டிலுள்ள மக்களின் கொள்வனவு சக்தியே மிகவும் முக்கியமானது. உதாரணமாக சவுதியை எடுத்துக்கொண்டால் உலகிலேயே தலா வருமானம் கூடிய நாடாகும். ஆனால் அதனை அபிவிருத்தியடைந்த நாடென்று கூறுவதில்லை. அதேபோலத் தான் தலாவருமானத்தைவிட மக்களின் கொள்வனவு சக்தி அதிகமாகவிருந்தால் அந்நாடு பொருளாதார வலுவுடைய நாடாகும். பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சமாதானம் அவசியமானது என்றும் அவர் மேலும் கூறினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஒரு நாட்டை முன்னேற்றுவதற்கு தலா வருமானத்தைவிட மக்களின் கொள்வனவு சக்தியே முக்கியமானது : மலேசியாவின் முன்னாள் ஜனாதிபதி மஹதீர் மொஹமட் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top