நீதிமன்ற சுயாதீனத்திற்கு எந்தவொரு
சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் தலையீடு செய்யவில்லை என ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனநாயக மற்றும் மனிதவுரிமைகளை பாதுகாக்கும்
சட்டத்தரணிகள் சங்கத்தினருடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சட்டத்தின் ஆதிக்கத்தை பாதுகாக்க அரசாங்கம்
பொறுப்புடன் செயலாற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் நீதிமன்ற
செயற்பாடுகளுக்கு தலையீடு செய்வதாக சிலர் பொய்யான குற்றச்சாட்டுகளை
முன்வைப்பதாகவும அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரும் ஒன்று என்ற ரீதியில் நாட்டின்
சட்டத்தையும், சமாதானத்தையும் பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன்
செயலாற்றுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிலாபம் ஷேர்லி கொரயா மைதானத்தில்
மக்கள் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை நாட்டின்
அனைவரும் தனது உறவினர்கள் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காலி – வதுரம்ப பிரதேசத்தில்
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் மேடைக்கு தீவைத்தவர்களை
அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் ஜனாதிபதி,
காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்ததுடன்,
காவல்துறை மாஅதிபரை தொடர்பு கொண்ட ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்ததாக
ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்களின் ஊடாக தமக்கும்,
ஆளும் கூட்டமைப்பின் பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க
முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
கொழும்பில் இடம்பெற்ற மொமென்டன் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.நிலையான
இலங்கைக்கான தொழிற்றுறையினர் அமைப்பினால் ஆசியாவின் தொழிற்றுறையினருக்காக
ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய மாநாடாக இது கருதப்படுகிறது.
கொழும்பில் 4 முன்னணி விருந்தகங்களில்
இடம்பெற்ற இந்த மாநாட்டில் பல வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய
ராஜபக்ஷ, நாட்டிற்கு எதிராக செயற்படுத்தப்படும் சர்வதேச அழுத்தங்கள்
தொடர்பாக அரசாங்கம் எந்நேரமும் அவதானத்துடன் செயற்படுவதாக
தெரிவித்தார்-Hiru

0 comments:
Post a Comment