இலங்கையில் எதிர்வரும் 8-ம் திகதி
நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவுள்ள மக்கள் முக்கிய ஜனநாயக
சீர்திருத்தங்களை எதிர்பார்த்து வாக்களிக்க வேண்டும் என்று நூற்றுக்கணக்கான
பல்கலைக்கழக அறிவுஜீவிகள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி,
18-ம் அரசியலமைப்புத் திருத்தத்தை நீக்கி, 17-ம் அரசியலமைப்புத்
திருத்தத்தை மீளவும் கொண்டுவர உறுதியளிக்கும் வேட்பாளருக்கு மக்கள்
வாக்களிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக அறிவுஜீவிகள் கூறியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாக பல்கலைக்கழக கல்விச்
சமூகம் முன்னெடுத்துவந்த போராட்டங்களின் தொடர்ச்சியாகவே இந்தக் கோரிக்கையை
தாங்கள் முன்வைத்திருப்பதாக கண்டி- பேராதனைப் பல்கலைக்கழகத்தின்
ஆங்கிலத்துறையின் தலைவி பேராசிரியர் சுமதி சிவமோகன் பிபிசி தமிழோசையிடம்
கூறினார்.
நீதித்துறையின் சுதந்திரமும் பத்திரிகை
சுதந்திரமும் நசுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்இ மீண்டும் ஜனநாயகத்தைக்
கட்டியெழுப்புவதற்காக தொடர்ந்தும் மக்கள் மத்தியில் பிரசாரங்களை
முன்னெடுக்கவுள்ளதாகவும் சுமதி சிவமோகன் கூறினார்.
இலவசக் கல்வியையும் இலவச சுகாதாரத்தையும்
பாதுகாப்பதற்காக போராடுகின்ற கல்விச் சமூகங்கள் இணைந்து இன்றைய அறிக்கையை
வெளியிட்டுள்ளதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.-BBC

0 comments:
Post a Comment