சிறிலங்கா கொடியுடன் இந்தியப்
பெருங்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட சீன மீன்பிடிக் கப்பல்கள்
வேறேதும் பணிகளில் ஈடுபட்டுள்ளனவா என்று சந்தேகம் எழுந்துள்ளதாக, சிறிலங்கா
அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா
கொடியுடன் மீன்பிடியில் ஈடுபடும் சீனக் கப்பல்கள் தமது வருமானத்தில் 10
வீதத்தை சிறிலங்கா அரசுக்குச் செலுத்தும் என்றும், பிடிக்கப்படும் மீன்கள்
சிறிலங்கா கரைக்குக் கொண்டு வந்தே விற்பனை செய்யப்படும் என்றும் சிறிலங்கா
அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது.
இதன்
மூலம் பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும் என்று கூறி, சிறிலங்கா
அரசாங்கத்தினால் ஒரு தொகுதி சீன மீன்பிடிக் கப்பல்களுக்கு அனுமதி
அளிக்கப்பட்டது.
சிறிலங்கா
துறைமுகங்களில் இருந்து சிறிலங்காவின் தேசியக் கொடியுடன் சென்று அனைத்துலக
கடற்பரப்பில் இந்த சீன மீன்பிடிக் கப்பல்கள் ஆழ்கடல் மீன்பிடியில்
ஈடுபட்டு வந்தன.
ஆனால்,
இந்த 8 சீனக் கப்பல்களில் மூன்று கப்பல்கள் மாத்திரமே, இரண்டு தடவைகள்
பணம் செலுத்தியுள்ளதாகவும், ஏனைய கப்பல்கள் எதுவித பணத்தையும்
செலுத்தவில்லை என்றும் பதில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர்
சரத்குமார குணரட்ன தெரிவித்துள்ளார்.
ஏனைய
ஐந்து கப்பல்களும் எந்த மீன்களும் இன்றியே கரையை வந்தடைந்திருப்பதாகவும்
கொழும்பில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார்.
“இதில் ஏதோ இரகசியமொன்று" மறைந்துள்ளது.
அந்தக் கப்பல்களில் பிடிக்கப்பட்ட மீன்கள் நடுக்கடலிலேயே வேறு நாடுகளுக்கு விற்கப்பட்டு விட்டன.
இது விடயம் தொடர்பில் ஆராய்வதற்கும், குறித்த கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல்கள் மீன்பிடியில் மாத்திரமன்றி வேறேதாவது வர்த்தகங்களில் ஈடுபடுகின்றனவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இவை குறித்துக் கண்காணிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
சுங்கத் திணைக்களத்தின் உதவியுடன் இவற்றைக் கண்காணிக்கவுள்ளோம்.
அதேவேளை ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவில் மீன்களைக் கொள்வனவு செய்வதற்கு தடை விதித்துள்ளமையானது சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.
சிறிலங்காவைப் பழிவாங்கும் எண்ணத்துடன் இவ்வாறானதொரு தடை கொண்டு வரப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் உருவாகியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யும்போது புதிது புதிதாக அவர்கள் நிபந்தனைகளை விதிக்கின்றனர்.
இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றும் அமைச்சர் சரத்குமார குணரட்ன தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment