• Latest News

    January 30, 2015

    சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் பிரதம நீதியரசர் விவகாரம்! பிரதமர் இன்று விளக்கம்

    பிரதம நீதியரசர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விளக்க அறிக்கையொன்றை சமர்ப்பித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று விளக்கமளிக்கவுள்ளார்.

    பிரதம நீதியரசர் ஒருவரை நியமிக்கவும், பிரதம நீதியரசர் ஒருவரை நீக்கவும் எடுக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக அரசியலமைப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில் மொஹான் பீரிசின் இல்லத்திற்குச் சென்று அவரை பதவி விலகுமாறு ஒருவர் அச்சுறுத்தியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டது உண்மையா? அவ்வாறு அச்சுறுத்தல் செய்தவர் யார்? அவரது பெயர் என்ன? என்பது பற்றி பிரதமர் இந்த சபைக்கு விளக்கமளிக்க வேண்டும் என விசேட கேள்வியொன்றை எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால.டி.சில்வா நேற்று சபையில் தெரிவித்தார்.

    எதிர்க்கட்சித் தலைவரின் இந்த உரையின் பின்னர் தினேஷ் குணவர்த்தன எம்.பியும் பிரதம நீதியரசர் விவகாரம் தொடர்பாக பேசினார்.
    பிரதம நீதியரசராக ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் நியமிக்கப்பட்டது அதி உயர் பாராளுமன்றத்தின் தத்துவங்களையும் அரசமைப்பையும் அப்பட்டமாக உதாசீனப்படுத்தும் செயல் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கூறினார்.
    பிரதம நீதியரசர் ஒருவரை நீக்குவதற்கு அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு அமைய ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

    அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் பிரேரணை கொண்டு வரப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அவரை விலக்குவதற்கான ஆலோசனையை சபாநாயகரிடம் கையளித்துள்ளோம். அதன்படி சபாநாயகருக்கு ஜனாதிபதிக்கும் அளித்திருந்தார்.

    அரசியல் அமைப்பின் படியும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களுக்கு உட்பட்டே பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டார். அதிகெளரவமான பதவியில் இருக்கும் அவரது வீட்டிற்குச் சென்று அவரை அச்சுறுத்தினார் என்றும் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

    எதிர்க்கட்சித் தலைவரினதும், தினேஷ் குணவர்த்தனவினதும் உரைகளை செவிமடுத்த பிரதமர் கருத்து வெளியிட்டார்.

    பிரதம நீதியரசர் நியமனம் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் முழுமையான விளக்க அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படும். அத்துடன் இது தொடர்பாக விவாதம் தேவைப்பட்டாலும் அது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி நேரம் வழங்கத் தயார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் பிரதம நீதியரசர் விவகாரம்! பிரதமர் இன்று விளக்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top