• Latest News

    February 22, 2015

    மூதூர் தள வைத்தியசாலைக்கு ஹக்கீம் விஜயம். குறைகளை நிபர்த்தி செய்வதாகவும் உறுதி வழங்கியுள்ளார்

    மூதூர் தள வைத்தியசாலையில் நிலவும் மருத்துவ நிபுணர்களுக்கும், மருத்துவர்களுக்குமான  வெற்றிடங்கள் நிரப்பபடுவதோடு, ஏனைய சிற்றூழியர்கள் உட்பட ஆளணிப் பற்றாக்குறைக்குறைக்கான தீர்வும், நெரிசல் கூடிய நோயாளர் விடுதிகளுக்கான தேவைகளும் முன்னுரிமை அளிக்கப்பட்டு அவசரமாக நிறைவேற்றப்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

    அத்துடன் பிரஸ்தாப தள வைத்தியசாலையின் உடனடித் தேவைகளை நேரில் கண்டறிந்து அவற்றை நிறைவு செய்வதற்காக சுகாதார இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான எம்.ரீ. ஹஸன் அலி தனது அழைப்பின் பேரில் எதிர் வரும் மார்ச் மாதம் 02ந் திகதி மூதூர் தள வைத்தியசாலைக்கு வருகை தரவுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் கூறினார்.

    அமைச்சர் ஹக்கீம், போக்குவரத்துப் பிரதியமைச்சர் எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை (22) மூதூருக்கு விஜயம் செய்த போது தக்வா நகர் அல்மஸ்ஜிதுல் நூரியாவிற்கு சென்ற பின்னர் மூதூர் தள வைத்தியசாலையின் குறைபாடுகளைக் கண்டறிவற்காக அங்கு சென்றனர். அங்கு நடைபெற்ற உரையாடலில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்ட தகவல்களை கூறினார்.

    மூதூர் தள வைத்தியசாலைக்குப் பொறுப்பான மருத்துவ அதிகாரி டாக்டர் வீ.பிரேம்நாத் மருத்துவ ஆஸ்பத்திரியில் நிலவும் குறைபாடுகளை விளக்கிக்கூரினார். பல்வேறு குறைபாடுகளுக்கும், மகப்பேற்று, பெண் நோயியல் நிபுணர், அறுவைச் சிகிச்சை நிபுணர் ஆகியோர் உட்பட குறைந்த பட்சம் 28 மருத்துவர்களாவது சேவையாற்ற வேண்டிய மூதூர் தள வைத்தியசாலையில் 13 மருத்வர்களே கடமையாற்றுவதாகவும் சட்டிக்காட்டினார்.

    இத்தள வைத்தியசாலை குழுவின் தலைவர் ஜே.எம்.இக்பால் குறைபாடுகளையும் தேவைகளையும் அமைச்சரினதும், பிரதியமைச்சரினதும் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
    கூறப்பட்டவற்றை கவனமாக செவிமடுத்த அமைச்சர் ஹக்கீம் உடனடியாகவே உயரதிகாரி ஒருவரோடு தொடர்பு கொண்டதையடுத்து, விஷேட மருத்துவ நிபுணர்களுக்கான வெற்றிடங்களைப் பொறுத்தவரை வெளிநாட்டில் உரிய பயிற்சியை முடித்துக் கொண்டு நாடு திரும்பவுள்ள நிபுணர்களில் இருவர் முன்னுரிமை அடிப்படையில் மூதூர் தள வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட இருப்பதாகக் குறிப்பிட்டார்.

    அத்துடன், தாம் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சிற்கும் பொறுப்பானவர் என்ற முறையில் நீரினால் ஏற்படக்கூடிய சிறுநீரக நோய்கள் மற்றும் திட்டமிடப்படாத வடிகாலமைப்பின் காரணமாக அசுத்த நீர் தேங்கி நிற்பதால் பரவுக்கூடிய நோய்களை கட்டுப்படுத்துவதற்காக மூதூர் சுகாதார மருத்துவ அதிகாரியுடனும் தாம் கலந்தாலோசிக்க இருப்பதாகவும் கூறினார்.

    உத்தேச மூதூர் நகர அபிவிருத்தித் திட்டங்களோடு இணைந்ததாக தள வைத்தியசாலையும் அபிவிருத்தி செய்யப்படுமென அமைச்சர் ஹக்கீம் உறுதியளித்தார்.

    இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜே.எம்.லாஹிர், ஆர்.எம்.அன்வர், சுகாதார அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஜே.எம். ஹுசைன்தீன், சுகாதார இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எம்.எம்.பாயீஸ், அமைச்சர் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் யூ.எல்.எம்.முபீன், மூதூர் பிரதேச சபை தலைவர் ஹரீஸ், மருத்துவர்கள், தள வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், தாதிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
    ஊடகச் செயலாளர்



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மூதூர் தள வைத்தியசாலைக்கு ஹக்கீம் விஜயம். குறைகளை நிபர்த்தி செய்வதாகவும் உறுதி வழங்கியுள்ளார் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top