ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை
குறித்த அறிக்கை ஆறு மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளமை புதிய அரசு
பெற்றுக்கொண்ட பெரும் வெற்றியாகும் என்று கூறியுள்ளார் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் தனக்கு எந்தவிதமான உடன் படிக்கையும் இல்லை.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மிக நீண்ட ஆயுள் காலத்துக்காக கசப்பான
உண்மைகளைப் பேசவேண்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்காவில் நடைபெற்ற இரண்டு நாள் செயலமர்வில் கடந்த ஞாயிற்றுக் கிழமை
இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
“ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை
விவகாரம் குறித்த அறிக்கை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் வரை
பிற்போடப்பட்டுள்ளமை புதிய அரசு பெற்றுக்கொண்ட பெரியதொரு வெற்றியாகும்.
புதிய அரசின் அர்ப்பணிப்பு உள்ளக பொறி முறை உள்ளிட்ட பல்வேறு விடயங்களால்
சர்வதேசம் இந்த நம்பிக்கையை வைத்துள்ளது. அதன்மூலம் புதிய அரசின்
கோரிக்கைக்கு சர்வதேசம் செவிசாய்த்துள்ளது.” என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
“ஐக்கிய தேசியக் கட்சியுடன் எந்தவிதமான உடன்படிக்கையும் இல்லை. யதார்த்த
பூர்வமான விடயங்கள் எப்போதும் இனிமையாக இருக்காது. ஆனால் சிறிலங்கா
சுதந்திரக் கட்சியின் மிக நீண்ட ஆயுள் காலத்துக்காக கசப்பான உண்மைகளை
பேசவேண்டியுள்ளது.
சுதந்திரக் கட்சியில் மாற்றம் வர வேண்டும் என்பதற்காகவே கடந்த தேர்தலில்
மக்கள் வாக்களித்துள்ளனர். எனவே அந்த மாற்றத்துக்கு ஏற்ப செயற்படாவிடின்
சுதந்திரக் கட்சி எதிர்வரும் 10 முதல் 15 வருடங்களுக்கு எதிர்க்கட்சியில்
இருக்கவேண்டிய நிலை ஏற்படும்.’ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment