தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் பலரின்
ஊழல் மோசடிகள் வெளிவரலாம் சிறைக்கு செல்லவேண்டி ஏற்படும் என்ற அச்சத்தில்
நல்லாட்சியை குழப்புகின்றனர் என்ற அச்சத்தினாலேயே
நல்லாட்சிக்கான எமது அரசுக்கு எதிராக சிலர் நாட்டுக்குள்
குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.அரசியலமைப்பு திருத்தம்
தொடர்பாக வியாழக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன்
பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டம்
தொடர்பாக பௌத்த குருமாருக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல்
நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் நடைபெற்றது. இந் நிகழ்வில்
உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு
தெரிவித்தார்.
பிரதமர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்;
புதிய அரசாங்கம் பொறுப்பேற்று குறுகிய
கால எல்லைக்குள் அரச ஊழியர்களுக்கு ரூபா 5,000 சம்பள உயர்வு
வழங்கப்பட்டது மட்டுமன்றி இடைக்கால வரவு – செலவுத் திட்டம் மூலம்
மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைத்ததோடு பல்வேறு
சலுகைகளை வழங்கினோம். இன்று வரை அரசாங்கத்தின் செலவுகள் எவ்வளவு
என்பதை எம்மால் கண்டுகொள்ள முடியாதுள்ளது.
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான
சட்ட மூலத்தின் நகல் தயாரிக்கப்பட்டுள்ளது. ஊழல் மோசடிகளை
ஒழிப்பதற்காக விசேட செயலணிக் குழு நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு
எமது நூறு நாள் வேலைத் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். எஞ்சிய
திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நாளை
வியாழக்கிழமை நான் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளேன்.
இதுவரையில் நிறைவேற்று அதிகார ஒழிப்பு,
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணியோ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ எதனையும்
வெளிப்படுத்தவில்லை. எதிர்வரும் வியாழக்கிழமை இவ்விடயம்
தொடர்பாக சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை
நடத்தவுள்ளோம்.
தேசிய அரசாங்கம் மற்றும் நல்லாட்சி
தொடர்பான அரசின் நடவடிக்கைகளை சிலர் எதிர்க்கின்றனர். ஏனென்றால்
அவர்களது ஊழல் மோசடிகள் வெளியே வரலாம். இதனால் விசாரணைகளுக்கு முகம்
கொடுக்க நேரிடலாம். சிறை செல்ல வேண்டி வரும் போன்ற அச்சம் காரணமாகவே
நல்லாட்சியை எதிர்க்கின்றனர்.
இவ்வாறானதோர் சூழ்நிலையில்
நல்லாட்சிக்கான எமது நூறு நாள் திட்டங்களை முழுமையாக
நிறைவேற்றுவோம். குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், எமது இலக்கை பூர்த்தி
செய்வோம். இதன் பின்னர் ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைத்து
பொதுத் தேர்ததை நடத்துவோம்.
ஜனாதிபதியும் பிரதமரும் மட்டும்
அனைத்தையும் நிறைவேற்ற முடியாது. மதகுருமார் மற்றும் மக்களினதும்
ஆதரவு எமக்கு தேவை. அரசர் ஆட்சிக்கும் குடும்ப ஆட்சிக்கும் நாம்
முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். இன்றிருப்பது அரசர் ஆட்சியல்ல மக்கள்
புரட்சியால் ஏற்பட்ட மக்களாட்சியாகும்.
கடந்த காலங்களில் இனங்களிடையே
முரண்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. இதனை எதிர்த்து நாட்டில்
இனங்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச்
மாதம் இன நல்லிணக்க மாநாடொன்றை நடத்தவுள்ளோம்.
கடந்த ஆட்சியாளர்கள் நாட்டுக்குள்
என்னென்ன அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்தார்கள். அதன் செலவுகள்
தொகை என்ன என்ற விடயங்கள் தொடர்பான பதிவுகள் எதுவும் கிடையாது.
தற்போது அவை தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். அத்தோடு பல்வேறு
திட்டங்களுக்கு இன்று பில்லியன் கணக்கில் பணத்தை கேட்கின்றனர்.
அலரி மாளிகைக்குள்ளும் பல்வேறு குட்டி
அரண்மனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நாடு பூராவும் இது போன்ற
அரண்மனைகள் பல காணப்படுகின்றன. இவற்றை யார் நிர்மாணித்தார்கள்?
யாருக்கு சொந்தம் என்பதையும் தேடிப்பார்க்கும் நிலை
தலைதூக்கியுள்ளது.
அரசாங்கத்துக்கு சொந்தமாக உள்ள
வாகனங்களின் தொகை எவ்வளவு என்ற தரவுகளும் இல்லை. இது தொடர்பாக
ஜனாதிபதிக்கே தெரியாதுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பாவித்த
வாகனங்களின் தொகை எவ்வளவு என்பதும் தெரியவில்லை.
கடந்த ஆட்சியாளர்கள் தேசியம் மரபுரிமை
பற்றி பேசினார்கள். ஆனால், தொல்பொருளியல் திணைக்களத்தில் வெற்றிடங்கள்
நிரப்பப்படாமல் உள்ளது. இலஞ்ச ஊழல் திணைக்களத்தில் மட்டும் அதிகாரிகளுக்கான
53 வெற்றிடங்கள் இன்னும் நிரப்பப்படாதுள்ளது.
இந்த நிலையில் எவ்வாறு இலஞ்ச ஊழல்
விசாரணைகளை துரிதப்படுத்த முடியும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர் கரு ஜயசூரியவும் கலந்துகொண்டார்.-VK

0 comments:
Post a Comment