கலீல் எஸ். முஹம்மத்:
சாய்ந்தமருதின் குறைபாடுகள் உரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும், இல்லையேல் நீங்கள் எதிர்பார்ப்பது போன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச்சின்னத்தில் தேர்தல் கேட்டுவிட்டால் நீங்கள் போடுகின்ற வேட்பாளருக்கு சாய்ந்தமருது மக்கள் வாக்களித்து விடுவார்கள் என்று இனியும் நினைத்துவிட வேண்டாம்.
அல் அமானா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மக்களின் காணிப்பிரச்சினை தொடர்பாக லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு சாய்ந்தமருது ஜும்மா பள்ளி நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
கல்முனை மாநகர முதல்வர் நிசாம் காரியப்பர் பிரதம அதீதியாக கலந்துகொண்ட இந் நிகழ்வில் பிரதி மேயர் அப்துல் மஜீத் மாநகர உறுப்பினர்களான பிர்தௌஸ் சட்டத்தரணி றக்கீப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் போக்குவரத்து பிரதியமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹீர் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உரையாற்றுகையில்;
சாய்ந்தமருதில் குடியிருப்புக்கான காணி பிரச்சினை மிகவும் பாரதூரமானது. மிக நீண்ட காலமாக இருந்துவருகிறது. இதனால் இங்கு வாழும் ஏழை குமர்கள் தமது வாழ்க்கை பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளனர். தமது வசதிக்கேற்ப ஊருக்குள் ஒரு வளவுத்துண்டை வாங்கிக்கொள்ள முடியாமல் உள்ளனர்.
இதனால் அவர்கள் வெளிநாடுகளுக்கு பணிபெண்ணாக செல்வதற்க்கு உந்தப்படுகின்றார்கள். இதற்கு பொறுப்பு சொல்லக்கூடியவர்களாக நாம் இருக்கிறோம். இது குறித்து நிரந்தர தீர்வு காணப்படல் வேண்டும்.
மேலும் முறையான வடிகானமைப்பு இங்கு இன்னும் இல்லை இதனால் மழைக்காலங்களில் பெரும் அசௌகரியத்தை மக்கள் எதிர்நோக்குகின்றனர்.
இந்த சந்தர்பத்தில் தான் அல்லாஹ்வின் உதவியால் முஸ்லிம் காங்கிரசின் தலைவருக்கு நகர அபிவிருத்தி நீர்வளங்கள் வடிகாலமைப்பு எனும் பாரிய அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. இதனை கொண்டு ஆக்கபூர்வமாக எமது மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண முற்பட வேண்டும்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் தேர்தலை எதிர்கொள்ள மக்களை சந்திக்க போகிறீர்கள் அதற்கு முன் இந்த ஊரின் பிரச்சினைகளை தீர்ப்பதற்க்கு முன்வர வேண்டும். அவ்வாறு நிறைவேற்றுகின்ற போது இந்த பள்ளிவாசலே உங்களுக்கு தாமாக முன் வந்து உதவி செய்யும்.
கடந்த காலங்களை போன்று இனியும் எங்களுக்கு அதிகாரமில்லை என்று தப்பி விட முடியாது. முஸ்லிம்க் காங்கிரஸில் மரச்சின்னத்தில் யாரை களமிறக்கினாலும் சாய்ந்தமருது மக்கள் வாக்குப்போடுவார்கள் என்று இனியும் நம்பி விடாதீர்கள் என்று தெரிவித்தார்.

0 comments:
Post a Comment