அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் வெற்றிபெற நேர்ந்தால் அவருக்கெதிரான தேர்தல் ஆட்சேபனை மனுவொன்றின் ஊடாகஅவ்வாறான தெரிவை வலுவற்றதாக்குவது உரிய மாற்றுத் தீர்வாகக் கொள்ளப்படலாமென சிரேஷ்ட சட்டத்தரணியும்,முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஸ்தபாதாக்கல் செய்த றிட் மனுவொன்றின் மீதுபுதன்கிழமை (13) மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கலாநிதி இஸ்மாயில் பிரஸ்தாப பல்கலைக்கழகத்தில் முதலாம் தர சிரேஷ்ட விரிவுரையாளராக பதவி வகித்துக் கொண்டு, வேட்பு மனு தாக்கல் செய்த வேளையில் தமது பதவியை இராஜினாமாச் செய்திருக்கவில்லை என்பதையும், பிந்திய நாளொன்றிலேயே அவர் தமது இராஜினாமாவை செய்திருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டி அவரக்கெதிரான மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவரது பதவி விலகல் கடிதம் நீதிமன்ற ஆவணமாக கோவையிடப்பட்டுள்ளதுடன்,அதன் உண்மைத் தன்மையை பிரதி சொலிசிட்டர் ஜெனரலும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் விஜித் மலல்கொடவினால் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, வாதியின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பருடன், எம்.சீ.எம். நவாஸ், எம்.ஐ.எம்.ஐனுல்லாஹ், சன்பரா ஆகியோரும் பிரதிவாதியின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா மற்றும் அரச தரப்பில்பிரதி சொலிசிட்டர் ஜெனரல் விகும் டீ ஆப்ரு ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.
இராஜிமான விவகாரத்தின் பின்னணியில் கலாநிதி இஸ்மாயில் சில நாட்கள் தேர்தல் பிரசாரத்தில் சட்டவிரோதமாக ஈடுபட்டிருந்தமையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.
கலாநிதி இஸ்மாயில் வெற்றிபெற நேர்ந்தால், அவருக்கெதிராக வேறு கட்சியினரையோ நபரையோ விட அதே கட்சியில் இரண்டாவது இடத்திலுள்ள வேட்பாளர் கூட வழக்கு தொடரக்கூடிய வாய்ப்பும் உள்ளதென சட்ட வட்டாரங்கள் சுட்டிக்காட்டின.

0 comments:
Post a Comment