• Latest News

    August 10, 2015

    கல்வெட்டு உடைப்பும் இனவாதக் கோசமும் - அரசியல் இலாபத்திற்காக மற்றுமொரு சம்பவம் கல்முனையில் நடந்தேறியுள்ளது.

    கல்முனை மாநகரத்தை மட்டுமல்லாது ஒட்டு மொத்த இலங்கையிலும்  இன்றைய தினம் பேசுபொருளாக காணப்படுவது. கல்முனை மாநகரத்தில் இன்று காலை உடைத்தகற்றப்பட்ட வீதிக்கான பெயர்க் கல்வெட்டாகும்.

    பட்டப்பகலில் ஒரு கூட்டம் ஒரு மாநகர முதல்வரினதும் மாகாண முதலமைச்சரினதும் பெயர் பொறிக்கப்பட்ட பெயர்க் கல்வெட்டை உடைத்தெறிகிறது.

    மாநகர சபை என்னும் அரச நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட கல்வெட்டு அரச சொத்தாகும். அரச சொத்தை சேதப்படுத்தினால் அதன் சட்ட நடைமுறைகள் பாரதூரமானவை, மிக இறுக்கமானவை !! ஆனால் எதையும் கவனத்தில் கொள்ளாது கல்வெட்டு உடைத்தெறியப்படுகின்றது .

    தமிழரசுக் கட்சியின் பொதுத்தேர்தல் வேட்பாளரும் ,முன்னாள் மா நகர சபை உறுப்பினருமான குலசேகரம் மகேந்திரன் என்பவரே மேற்படி தன்னிச்சையான செயலினைச் செய்துள்ளதுடன், உடைத்த கையோடு இனவாதத்தைத் தூண்டும் விதத்திலான கோஷங்களுடன் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்துள்ளார்.

    இது இவ்வாறிருக்க வீதிகளுக்குப் பெயரிடுதல் சம்பந்தமாக 1975 ஆம் ஆண்டைய சட்டம் தான் கடைசியாக உள்ள சட்டம்,

    ( பார்க்க இணைப்பு படம் மா நகர கட்டளைச்சட்டம் 71 )

    இந்த சட்டத்தின் படி உள்ளூராட்சிக்குப் பொறுப்பான அமைச்சர் இன் அதிகாரத்தின் கீழ் இது வருகின்றது . அமைச்சர் தனது சுயமான முன்னெடுப்பிலோ அல்லது மா நகர சபையொன்றின் முன்மொழிதல் மூலமோ யாதுமொரு வீதி அழைக்கப்படவேண்டிய பெயரையோ அல்லது அதனைத் திருத்துவதையோ முன்னெடுப்பதற்கு அதிகாரம் உள்ளவர் .

    இப்போது இங்கு எழும் கேள்வி என்னவென்றால் மேற்படி நபர்களுக்கு இந்த வீதியின் பெயர் அனுமதி பெறப்படாமல்தான் சூட்டப்பட்டது என்று எவ்வாறு தெரியும் ??

    மா நகர சபையின் எந்த அனுமதியின்றி உள்ளூராட்சிக்குப் பொறுப்பான அமைச்சரான முதலமைச்சர் தனது முன்னெடுப்பில் பெயர் வைக்கலாம் என்னும் போது அந்த அதிகாரம் உடைய முதலமைச்சரின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை உடைப்பதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது .

    இன்று நடந்திருப்பது என்ன?? ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுக்கும் வகையில் மா நகர அரச இயந்திரம் செயலற்றுக் கிடக்கின்றதா ?? ,

    மாநகர பொறியியல் பிரிவால் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி பெயர்க்கல்வெட்டை பாதுக்காக்குமளவுக்கு அதிகாரிகள் செயற்படவில்லையா ??

    இவற்றுக்கெல்லாம் காரணம் அங்கு நடைபெறும் நிருவாகத்துக்கும் முதல்வருக்கும் தொடர்பில்லையா ? என்றெல்லாம் எண்ணத்தோன்றுகின்றது .

    ஈற்றில் இவையெல்லாம் சுட்டி நிற்பது முதல்வரையே !

    அரச சொத்தை சேதப்படுத்தியமைக்காக உடனே இவர்களை கைது செய்ய முடியுமா? அதற்க்கு அனுமதி உண்டா? இல்லையா? அதை  உயரதிகாரிகள்  பார்த்துக் கொள்வர் !!

    சட்டம் அறிந்த முதல்வர் என்ன செய்யப்போகிறார் ,

    அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    எது எவ்வாறாயினும், தற்போது கல்முனையில் காணப்படும் தமிழ் பிரதேச செயலகம், அதற்க்கான எல்லைகளின் நிர்ணயம், சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்றக் கோரிக்கை போன்ற சர்ச்சைகளுக்கு மத்தியில்

    இது ஒரு தேர்தல் காலம் என்றபடியால் இக்கல்வெட்டானது நிறுவப் பட்ட வேகமும், மறுதினமே  அது உடைக்கப்பட்ட வேகமும் கல்முனை பிரதேசத்தில் வாழும் முஸ்லிம், தமிழ் மக்களிடையே ஒரு இன விரிசலுக்கு  தூபமிடும் ஒன்றாகவே நோக்கலாம். இதற்க்கு சிறந்த உதாரணமாக இக்கல்வெட்டை உடைத்த கையோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் இனவாதத்தைத் தூண்டும் விதத்திலான கோஷங்களுடன் ஒரு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததை காணமுடிகின்றது.

    ஆகையால் எதிர்வரும் நாட்களில் தேர்தல் மேடைகளில் இது ஒரு பாரிய துரும்புச்சீட்டாகா தமிழ், முஸ்லிம் தரப்புகளால் பயன்படுத்தப் படப் போகின்றது, ஆகையால் இக்கல்லானது கல்முனைத் தொகுதித் தேர்தல் களத்தில் தமிழ், முஸ்லிம் என்ற இரு குருவிகளைக் குறிவைத்து நிற்கப்போவது திண்ணம்.

    ஆகமொத்தத்தில் இக்கல்வெட்டு சர்ச்சையானது வெறும் வாயை மென்றகொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அவல் பொரி கிடைத்தது போன்றும், தடுக்கி விழுந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு தங்கப் புதையல் கிடைத்தது போன்றும்,

    அவர்கள் இருவரது காட்டிலும் ஒரு கனமழையை எதிர்வுகூறலாம்.

    சம்பவ தினமான இன்று மாலை குறித்த இடத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

    தகவல் உதவி : ஏ.பி. ஜௌஸி










    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கல்வெட்டு உடைப்பும் இனவாதக் கோசமும் - அரசியல் இலாபத்திற்காக மற்றுமொரு சம்பவம் கல்முனையில் நடந்தேறியுள்ளது. Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top