எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி ஆட்சி அமைக்க கூடிய வகையில் 113 ஆசனங்களை பெற
முடிந்தால், சந்தர்ப்பம் கிடைக்காது போன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை
சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர் ஒருவருக்கே பிரதமர் பதவி கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்திலேயே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
தேர்தலில் 113 ஆசனங்களுக்கு குறைவாக
கிடைத்தால், தேவையான ஆசனஙகளை பெற்றுக்கொள்வதற்கான நிறைவேற்று அதிகாரம்
கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் தன்னால் தலையிட முடியும் எனவும் ஜனாதிபதி
குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சுதந்திர
முன்னணிக்கு ஆட்சியமைக்கும் அளவுக்கு ஆசனங்கள் கிடைத்தால், பிரதமராக
வேண்டியவர் மகிந்த ராஜபக்ச அல்ல. கட்சியில் உள்ள ஏனைய சிரேஷ்ட
உறுப்பினர்களில் ஒருவரே அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும்.
இந்த பதவிக்கு பொருத்தமான அனுபமிக்க அரசியல்வாதிகள் பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளனர்.
நிமால் சிறிபால டி சில்வா, ஜோன் செனவிரட்ன,
சமல் ராஜபக்ச, அதாவுத செனவிரட்ன, ஏ.எச்.எம்.பௌசி, சுசில் பிரேமஜயந்த,
அனுரபிரிதர்ஷன யாப்ப போன்ற சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரை பிரதமராக நியமிக்க
வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
இதனை மேற்கொள்ள மகிந்த ராஜபக்ச தனது
நேர்மையையும் தியாகத்தன்மையையும் ஆசிர்வாதத்தை மக்கள் முன் காண்பிக்குமாறு
நாடு, மக்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் கோரிக்கை
விடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால , மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பியுள்ள
கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இனவாதத்தை தூண்டவேண்டாம்! புத்தியுடன் செயற்படுங்கள்; மகிந்தவிடம் மைத்திரி வேண்டுகோள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும்
நாட்டின் நலன்களை கருதி எதிர்வரும் தேர்தல் தினம் வரை இனவாதத்தை தூண்ட
வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
புத்தியுடன் செயற்படுமாறும் கட்சி
பிளவுப்படுவதை மேலும் அதிகரிக்க இடமளிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம்
எனவும் இதன் மூலமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிகமான ஆசனங்களை
கைப்பற்ற சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி, அந்த கடிதத்தில்
கூறியுள்ளார்.
பசில் ராஜபக்சவின் (மகிந்தவின் சகோதரர்)
அனுமதிக்க முடியாத செயற்பாடுகள், நடத்தைகள் காரணமாகவே நாம் இருவருக்கும்
இடையில் இருந்து வந்த நீண்டகால நட்பு முறிவடைந்தது.
உங்களுக்கு கௌரவமான அரசியல் இருப்பை
பெற்றுக்கொடுப்பதற்காக பொருத்தமான அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் குறித்த
யோசனைகளை நான் முன்வைத்தேன்.உங்களது குடும்பத்தை சேர்ந்த பல உறுப்பினர்கள்
அதனை ஏற்றுக்கொண்டனர்.
எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீது
எந்த அன்பும், உணர்வுமில்லாத ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக
மாத்திரம் எமது கட்சியுடன் தொடர்புகளை கொண்டுள்ள அரசியல் கட்சிகள் மற்றும்
அணிகளின் கைதியாக நீங்கள் மாறியதன் காரணமாக, எனது யோசனைகளை
நிராகரித்தீர்கள்.
அத்துடன் நீண்டகாலம் ஜனாதிபதி பதவியில்
இருப்பதற்காக நீங்கள் மக்களின் சுதந்திரத்தையும், கௌரவத்தையும், கட்சிக்காக
அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட
தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தையும் நீங்கள் பறித்த விதம் விவேகமற்றது
எனவும் மைத்திரிபால சிறிசேன, மகிந்தவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளார்.


0 comments:
Post a Comment