சஹாப்தீன் -
17.08.2015ஆம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் சிறுபான்மையின மக்களைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவமானதாகும். சிறுபான்மையினர் தங்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதொரு சூழல் தோன்றியுள்ளதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆதலால், சிறுபான்மையினர் தங்களின் தனித்துவத்தைப் பேணும் வகையிலும், பாராளுமன்றத்தில் தங்களுக்குரிய பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து பேரம்பேசும் சக்தியை அதிகரித்துக் கொள்ளும் வகையிலும் வாக்களிக்க வேண்டும்.
17.08.2015ஆம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் சிறுபான்மையின மக்களைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவமானதாகும். சிறுபான்மையினர் தங்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதொரு சூழல் தோன்றியுள்ளதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கின்றது. ஆதலால், சிறுபான்மையினர் தங்களின் தனித்துவத்தைப் பேணும் வகையிலும், பாராளுமன்றத்தில் தங்களுக்குரிய பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து பேரம்பேசும் சக்தியை அதிகரித்துக் கொள்ளும் வகையிலும் வாக்களிக்க வேண்டும்.
நாட்டில் இன ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டும். அமைதி நிலவ வேண்டுமென்று சிந்திக்கக் கூடியவராகவும், ஜனநாயக விளிமியங்களுக்கு முன்னுரிiமை அளிக்கக் கூடியவராகவும் இன்றைய ஜனாதிபதி இருக்கின்றார். இவரின் வெற்றிக்கு சிறுபான்மையினர் உறுதுணையாக இருந்துள்ளார்கள். ஆதலால், மிதவாதப் போக்குள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவின் கரங்களை பலப்படுத்தி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாக்களிப்பு வேளைகளில் ஒரு சிலர் குழப்பத்தை ஏற்படுத்தவும், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தவும், தேர்தலை குழப்பி தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கும் முயற்சிகளை எடுப்பார்கள். இத்தகைய நிலைமைகள் தோன்றுமாயின் பொறுமையுடன் செயற்படுதல் வேண்டும். பொலிஸாரின் உதவியை கொண்டு அத்தகைய தீய நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். யாரும் சட்டத்தை கையில் எடுத்துச் செயற்படக் கூடாது.
தமிழர்கள் தங்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு தங்களின் பிரதிநிதிகளாக பாராளுமன்றம் செல்லக் கூடியவர்கள் தமிழர்களின் காணிப் பிரச்சினை முதல் எல்லாப் பிரச்சினைகளையும் அறிந்து வைத்துள்ளவர்களையும், அதற்காக கடந்த காலங்களில் குரல் கொடுத்தவர்களையும் தெரிவு செய்ய வேண்டும். இத்தேர்தலில் விடும் தவறு தமிழர்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கான காலத்தை இன்னும் 20 வருடங்களுக்கு பின் தள்ளிவிடும். நாட்டின் அடுத்த ஜனாதிபதி இன்றைய ஜனாதிபதி போன்று இருக்கமாட்டார் என்றே சொல்ல வேண்டும். அரசியல் நோக்கங்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் தேவைகளை தாமாகவே நிறைவு செய்து கொடுத்த நல்ல உள்ளங்களும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் படித்தவர்களாகவும் உள்ளார்கள். இத்தகையவர்கள் தமிழர்களின் பிரதிநிதியாக மட்டுமன்றி முஸ்லிமி;களின் பிரதிநிதியாகவும் தெரிவு செய்யப்படும் போது பணத்திற்கு அடிமைப்படமாட்டார்கள். அரசியல் மூலமாக சமூகத்திற்கு அதிகபட்ச சேவைகளைச் செய்வார்கள் என்று நம்பலாம்.
வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் பெரும்பாலும் ஒரு கட்சிக்கு அளிக்கக் கூடியதொரு நிலையே காணப்படுகின்றது. ஆனால், முஸ்லிம்களின் வாக்குகள் பல கட்சிகளுக்கும் சிதறடிக்கப்பட்டு, முஸ்லிம்களின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைவடைவதற்குரிய நிலைமையே முஸ்லிம் பிரதேசங்களில் காணப்படுகின்றன. முஸ்லிம் வேட்பாளர்களில் தோல்வியடையக் கூடியவர் என்று தெளிவாகத் தெரிந்தவர்கள் கூட, தாங்கள் வெற்றி பெறுவோம் என்று கௌரவத்திற்காக வாக்குகளை கேட்டுக் கொண்டார்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகளை வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு அளிப்பதே புத்தியுள்ள வாக்காளரின் முடிவாக இருக்க வேண்டும். தங்களின் எந்த விருப்புக்கும், வெறுப்புக்கும் இடங்கொடுக்காது முஸ்லிம்களின் சார்பில் பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டும்.
இனப் பிரச்சினைக்கான தீர்வுகள் முன் வைக்கப்படவுள்ளன. இந்நிலையில் முஸ்லிம்களின் சார்பில் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர் வாயை சப்பிக் கொண்டிருக்கும் நபர்களாக இருக்க முடியாது. அத்தகையவர்களை வெற்றி பெறச் செய்தால் முஸ்லிம் சமூகத்தை அழிவுப்பாதைக்குள் தள்ளிவிடுவார்கள். ஏவல், விலக்கல்களை அறிந்து கொள்ளாதவரும், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை தெரிந்து கொள்ளாதவரும் முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படக் கூடாது. இனப் பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சுக்களில் பங்கு கொண்டு சர்வதேசத்தினதும், இலங்கையினதும் கவனத்தைக் ஈர்ந்துள்ளவர்களின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும். பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்பதற்காக ஆவேசமாக பேசியவர்களை வெற்றி பெறச் செய்ய முடியாது. இவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதும் முஸ்லிம்களின் தனித்துவங்களை மறந்துவிடுவார்கள். முஸ்லிம்களின் செயல்வீராக கருதப்படுகின்ற மர்ஹும் அஸ்ரப்பின் கனவுகளை சுமந்தவர்கள்தான் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தருவார்கள். தேர்தல் காலத்தில் மாத்திரம் அவரின் போட்டோவைப் பயன்படுத்தி வாக்குகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் பேரினவாதிகளுக்கு அடிமைகளாக செயற்படுபவர்களை முஸ்லிம்கள் தெரிவு செய்யக் கூடாது.
கடந்த காலங்களில் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள். இதன் போது அரசாங்கத்திற்கும், இனவாதிகளுக்கு அச்சம் கொள்ளாது செயற்பட்டவர்களை அடையாளங் காண வேண்டும். முஸ்லிம் பிரச்சினைகளை பேசுவதற்கு தயக்கம் காட்டிய போது ஐ.நா வரை முஸ்லிம்களின் பிரச்சினைகளை கொண்டு சென்றவர்கள்தான் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக இருக்க முடியும்.
இவற்றை எல்லாம் கருத்திற் கொண்டுதான் முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும். இத்தேர்தல் பாராளுமன்றத்திற்கு தமது உறவினரை அனுப்புகின்றதொரு தேர்தல்லல. பிரதேசவாதத்தின் அடிப்படையில் பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் என்று எண்ணுகின்றதொரு தேர்தலுமல்ல. தங்களின் தனிப்பட்ட கோபங்களுக்காக பலி தீர்த்துக் கொள்ளுகின்றதொரு தேர்தலுமல்ல என்பதனை முஸ்லிம் வாக்காளர்கள் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.
முஸ்லிம்களிடையே தனித்துவமானதொரு அரசியல் கட்சி இருந்தது. அக்கட்சி பிளவுகளை சந்திக்காது இருக்குமாயின் முஸ்லிம்களின் அரசியல் பலம் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், பேரம் பேசுவதில் முன்னணியிலும் இருந்திருக்கும். தனித்துவத்துடன் இயங்கிய அக்கட்சி பதவி மோகம், பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற பேராசை, பேரினவாதிகளின் சதிகளுக்குள் சிக்குண்டமை, தாங்கள் தலைவர்கள் என்று அழைக்கப்பட வேண்டுமென்ற தலைமைத்துவ வெறி, பொது நோக்கின் அடிப்படையில் ஒற்றுமைப்படுவதற்கு முன் வராமை போன்ற பல காரணங்களினால் முஸ்லிம்களின் அரசியல் பலம் சிதைக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசியல் பலம் மிகவும் அவசியமானதொரு சூழலில் முஸ்லிம்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே சிதைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் அரசியல் பலம் இத்தேர்தலில் இன்னும் மோசமான வகையில் சிதைக்கப்படுவதற்கான நிலைமைகளை முஸ்லிம் கட்சிகள் ஏற்படுத்தியுள்ளன. எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன. ஒருமித்து ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்கு நல்ல சிந்தனை ஏற்படவில்லை. தங்கள் கட்சியின் சார்பிலும் வேட்பாளர்களை நிறுத்தி முஸ்லிம் சமூகத்தின் பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கே இவர்களின் நடவடிக்கைகள் துணை போய் உள்ளன.
முஸ்லிமகளின்; அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும், பிரதிநிதிகளாகவும் இன்று இருப்பவர்கள் நாளை மாற்றுக் கட்சிகளுக்கு மாறலாம். அவர்கள் மக்களினால் தோற்கடிக்கப்பட்டு அரசியலில் இருந்து ஒதுக்கப்படலாம். ஆனால், முஸ்லிம் சமூகம் நிலையாகவே இருக்கும். அதனால், முஸ்லிம் சமூகம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைப் போன்று சிந்திக்க முடியாது. நாளைய சந்ததியினரின் இருப்பையும், பாதுகாப்பையும் சிந்திக்க வேண்டும். இன்றும் நாமிடும் அத்திவாரம்தான் நமது சமூகத்தினை வளர்ச்சிக்கு கொண்டு செல்லும். இன்று முஸ்லிம்களின் வாக்குளை பெற்றுக் கொள்வதற்காக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். ஓவ்வொரு கட்சியும் ஒரு பிரதிநிதியைப் பெற்றுக் கொண்டு தனித்தனியே செயற்படும் போது, முஸ்லிம்களின் அரசியல் பலம் மேலும் சிதைக்கப்பட்டு, எடுப்பார் கைப்பிள்ளை போன்று செயற்படக் கூடும். இதனையே கடந்த காலங்களில் நாம் கண்டோம்.
இத்தேர்தலில் யார் வெற்றி பெறுகின்றார் அல்லது தோல்வியடைகின்றார் என்பது முக்கியமல்ல. முஸ்லிம் சமூகம் வெற்றி பெற வேண்டும். இத்தேர்தலில் பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளைப் பற்றி பேச முடியாதவர்கள் பாராளுமன்றம் செல்லுவார்களாயின் முஸ்லிம்கள் தங்களின் தனித்துவமான அடையாளங்களை இழக்க வேண்டியேற்படும்.
ஒரு சமூகம் தனது தலைவிதியை மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யாதவரையில் அச்சமூகத்திற்கு இறைவனின் உதவியும் கிடைக்காது. ஆதலால், முஸ்லிம்கள் நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை வழக்கமாக காலகாலம் நடைபெற்றதொரு பொதுத் தேர்தலாக கருதாது. ஊருக்கு பாராளுமன்ற உறுப்பினர் வேண்டுமென்ற குறுகிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, நாடும், நமது முஸ்லிம்களும் உரிமைகளைப் பெற்று வாழக் கூடிய வகையில் வாக்களிக்க வேண்டும். நாம் தோற்றாலும் முஸ்லிம் சமூகம் தோற்கக் கூடாதென்ற நல்ல சிந்தனையில் அமைதியான முறையில் வாக்களிக்க வேண்டும். யாரும் வாக்களிக்காது இருக்கக் கூடாது. முஸ்லிம்களின் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சியடையுமாயின் பாராளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடையும் என்ற உண்மையை உணர்ந்து ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

0 comments:
Post a Comment