எஸ்.றிபான் -எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தங்களின் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமென்பதே அரசியல் கட்சியின் பிரதான நோக்கமாகும். இதற்கு அடுத்த படியாகவே மற்ற விடயங்களில் அக்கட்சிகள் அக்கரை காட்டுவார்கள் என்பது நாம் வரலாற்று ரீதியாக அறிந்து கொண்ட உண்மையாகும். இந்த உண்மைக்கு எந்தக் கட்சியும் விதிவிலக்காக இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், சிறுபான்மையின மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் அரசியல் கட்சிகள் போன்;று சிந்திக்க முடியாது. தமது சமூகம் சார்ந்த விடயங்களிலும் கவனம் செலுத்தியே பொதுத் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
எந்தவொரு இனத்திற்கும் தமது சமூகப் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லி அரசியல் ரீதியாக தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு தனித்துவமானதொரு அரசியல் கட்சி அவசியமாகும். இலங்கையில் தமிழ் குழுக்கள் ஆயுதம் ஏந்திப் போராடிய போது முஸ்லிம்கள் தவிலின் கதைபோல் இரண்டு பக்கத்திலும் அடிவாங்கிக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்கள் தமிழ் ஆயுதக் குழுக்களினாலும், இராணுவத்தினாலும் தொல்லைகளை சந்தித்தார்கள். முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும், சவால்களையும் எடுத்துச் சொல்வவதற்கு கூட ஒரு தனித்துவமானதொரு அரசியல் கட்சி இருக்கவில்லை. தேசிய கட்சிகளில் இருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது கட்சியின் தலைமைத்துவக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படுவதற்கு துணிச்சல் ஏற்படவில்லை. இதனால், செய்வதறியாது இருந்தார்கள். இக்கால கட்டத்தில்தான் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஸ்தாபித்தார். முஸ்லிம்களின் அபிலாசைகளை சுமந்ததொரு தனித்துவமானதொரு கட்சியாக இது விளங்கியது. இதனால், இக்கட்சி மிகக் குறுகிய காலத்திலேயே முஸ்லிம்களின் அதிகபட்ச ஆதரவைக் கொண்டதொரு கட்சியாகவும், அரசாங்கத்தை தீர்மானிக்கின்றதொரு கட்சியாகவும் உருப்பெற்றது.
அஸ்ரப்பின் மரணத்தின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்குள் ஏற்பட்ட தலைமைத்துவப் போட்டி காரணமாக பல பிளவுகள் ஏற்பட்டன. இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமின் மீது குற்றங்கண்டு பேரியல் அஸ்ரப், அதாவுல்லா, றிசாட் பதியுதீன் போன்றவர்கள் கட்சியை விட்டுப் பிரிந்து சென்றார்கள். இவர்களின் பிளவுக்குப் பின்னால் பேரினவாதிகளும், அவர்கள் சார்ந்த கட்சிகளும் இருந்தன என்பது இரகசியமானதல்ல. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை விட்டுப் பிரிந்தவர்கள் ரவூப் ஹக்கீமின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்தாலும், அவர்களினால் ஒருமித்து தனிக் கட்சியாக இயங்க முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தலைவர்களாக இருக்க வேண்டும். கபினட் அமைச்சராக இருக்க வேண்டுமென்பதற்காக நுஆ, தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என கட்சிகளை தொடங்கினார்கள். இவர்கள் இவ்விதமாக கட்சிகளை தனித்தனியே ஆரம்பித்தமையும் பேரினவாத கட்சிகளினதும், அன்றைய அரசாங்கத்தினதும் திட்டமிட்ட செயலாகவே இருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்தவர்கள் ஒரு கட்சியாக இயங்கினால் தங்களின் பெரும்பான்மையினத்தின் நன்மையை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்ட அரசியல் செயற்பாடுகளை செய்வதற்கு தடைகள் ஏற்படும். தமிழர்களைப் போன்று முஸ்லிம்களும் உரிமைகளைக் கேட்பார்கள் என்ற காரணத்தினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்தவர்களை பிரித்தே வைத்தார்கள். ஆனால், அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் அரசாங்கம் வழங்கியது. தங்களின் வளர்ப்புச் செல்லப்பிள்ளையாக வைத்துக் கொண்டார்கள். அத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை முற்றாக அழிக்க வேண்டுமென்பதற்கான திட்டத்தை இக்கட்சிகளின் மூலமாக மேற்கொண்டார்கள். இன்றும் கூட இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பேரினவாதிகள் பலவீனப்படுத்துவதில் வெற்றி கண்டார்கள். தங்களின் ஏஜன்டுகளை அக்கட்சிகளுக்குள் ஊடுருவச் செய்தார்கள். இன்றும் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் முக்கிய பதவிகளில் உள்ளார்கள். இவர்களின் உதவியைக் கொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸை முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ தமது அரசாங்கத்தில் இணைத்துக் கொண்டார். ரவூப் ஹக்கீம் மஹிந்தவின் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளாது போனால் கட்சியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டுப் பிரிந்து அரசாங்கத்தில் இணைந்து விடுவார்கள் என்ற பயத்தின் காரணமாக விருப்பமின்றி அரசாங்கத்தில் இணைந்து கொண்டார். கட்சியை காப்பாற்றுவதற்காக ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தில் இணைந்து கொண்டாலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்திற்குள் வெறும் போடுகாயாக வைத்துக் கொண்டு அழித்துவிடும் திட்டத்தை மஹிந்தராஜபக்ஸவும், அவரின்அரசாங்கமும் வகுத்துக் கொண்டனர். இதனை காலப் போக்கில் உணர்ந்து கொண்ட ரவூப் ஹக்கீம் துப்பவும், விழுங்கவும் முடியாதவராக மாறினார். இதனால் மஹிந்தவின் அரசாங்கத்தில் இருந்து கொண்டே கட்சியை காப்பாற்றவும், சமூகத்தின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கவும் முடிவு செய்தார். இதனால்தான் மஹிந்த கழுத்தைப் பிடித்து தள்ளும் படியாக செயற்பட்ட போதும் பொறுமையுடன் ரவூப் ஹக்கீம் செயற்பட்டார்.
இந்நிலையில் இருந்து கொண்டிருந்த ரவூப் ஹக்கீம் ஜனாதிபதித் தேர்தலை பயன்படுத்திக் கொண்டார். ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பின் போது மனட்சாட்சியின் படி நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது கூட சிலரால் விமர்சனம் செய்யப்படுகின்றன. மஹிந்தவுக்கு வாக்களிக்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தால் நேரடியாகவே சொல்லிருக்கலாம். மைத்திரிக்கு முஸ்லிமகள்; வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே மனட்சாட்சிப் படி வாக்களிக்குமாறு ரவூப் ஹக்கீம் கேட்டுக் கொண்டார். மட்டுமன்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்திலேயே மைத்திரிக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் மஹிந்த வெற்றி பெற்றிருப்பார். மஹிந்தவின் பக்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருக்கும் வரை இனரீதியான கருத்துக்களை பெரிதாக முன்வைக்கவில்லை. ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விலகிக் கொண்ட இறுதி நாட்களில் மிகப் பெரிய அளவில் மஹிந்த இனவாதக் கருத்துக்களை முன் வைத்தார் என்பதனை முழு உலகமும் அறியும். இதனால், மைத்திரிக்கு இருந்த ஆதரவில் சுமார் 02 வீதம் வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்திருந்தார்கள்.
மஹிந்தவின் அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போடு காயாக இருந்து கொண்டே முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தது. அவற்றிக்கு தீர்வு கிடைக்கவில்லை என்ற குறை இருந்தாலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரம்தான் காத்திரமாக அரசாங்கத்தை விமர்சனம் செய்தார். மட்டுமல்லாது ஐ.நாவின் மனித உரிமை ஆணைக் குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளை இலங்கை வந்த போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அனைத்துத் தரப்புக்களின் நடவடிக்கைகளைப் பற்றியும் ஆவண ரீதியான முறைப்பாட்டையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்தது. இதன் போது ரவூப் ஹக்கீம் நாட்டையும், அரசாங்கத்தையும் காட்டிக் கொடுத்து விட்டதாக பொதுபல சேன போன்ற இனவாத அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தன.
இந்தப் பின்னணியில் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் இம்மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளக ரீதியாகவும், வெளிவாரியாக பேரினவாத சக்திகளினாலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு எதிராக தோற்றம் பெற்ற கட்சிகளினாலும் விமர்சிக்கப்படுகின்றன. இக்கட்சியை முற்றாக அழிப்பதற்கு வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் பல குறைபாடுகள் உள்ளன. அஸ்ரப்பின் காலத்தை போன்று வீரியத்துடன் இல்லை என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், இருக்கின்ற முஸ்லிம் கட்சிகளுள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சற்று உயர்வாகவே இருக்கின்றது. அதனால், குறைகளுக்கு மத்தியில் கட்சியை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு குறிப்பாக அக்கட்சியின் ஆதரவாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. கட்சியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் மோசமான நடவடிக்கைகள், ஆதரவாளர்களுடன் சுமூக உறவைக் கொண்டிருக்காதவர்கள், நல்ல சிந்தனையில்லாதவர்கள் என்பதனை வைத்துக் கொண்டு, அவர்களை பலிவாங்க வேண்டுமென்பதற்காக கட்சியை அழிக்க முடியாதென்பதே அக்கட்சியின் ஆரம்ப போராளிகள் பலரினதும் கருத்தாக இருக்கின்றது. கட்சியை பதுகாத்துக் கொண்டால்தான் எதிர்காலத்தில் சிறந்தவர்களைக் கொண்டு கட்சியை புனரமைக்கலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பாதுகாத்தல் என்பது தேர்தலில் அக்கட்சி பெற்றுக் கொள்ளும் ஆசனங்களின் எண்ணிக்கையிலேயே இருக்கின்றது. ஆகவே, முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறும வகையில் வாக்களிக்க வேண்டுமென்று ஆரம்ப கால போராளிகள் தெரிவிக்கின்றார்கள். ஆனால், இப்போராளிகளைக் கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள் கண்டு கொள்ளவில்லை. ஆயினும், இப்போராளிகள் அம்பாரை மாவட்டத்தின் பல கிராமங்களிலும் தாமாகவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எதிர்வரும் அரசாங்கத்தை ஐ,தே.க அமைக்கவிருக்கின்றது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைவர் ரவூப்ஹக்கீமும் முக்கியத்துவமிக்கவராக இருக்கப் போகின்றார்.
கடந்த காலங்களில் அரசாங்கத்தின் கழுத்தறுப்புக்கள், கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு மத்தியில் கட்சியில் மேலும் பிளவுகளை ஏற்படுத்த அனுமதிக்க முடியாதென்ற எண்ணத்தில் கட்சியை இன்று வரை பாதுகாத்து வந்தவரின் கரங்களை பலப்படுத்துவது முஸ்லிம்களின் தார்மீப் பெர்றுப்பாகும் என்று அக்கட்சியின் ஆரம்ப கால போராளிகள் தெரிவிக்கின்றார்கள்.
அந்த வகையில் அம்பாரை மாவட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இதயமாக இருக்கின்றது. ஒரு மனிதனுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பது அவசியமாகும். இதே போன்றுதான், அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக் கொள்ளும் வெற்றிதான் அக்கட்சியின் இதயத் துடிப்பை சிறப்பாக்கிக் கொள்ளும். அதன் பேரம் பேசும் சக்தியையும், தலைமையின் கரங்களையும் பலப்படுத்துவதற்கான அத்திவாரத்தை போடுவதாகவும் இருக்கும். ஆதலால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் 03 வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க வேண்டும்.
அவ்வாறு வாக்களித்தால்தான் 03 பேரையும் வெற்றி பெறச் செய்யலாம். வெற்றியை குறைத்து மதித்து ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ வாக்களித்தால் முஸ்லிம்களின் மக்கள் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். இதனைக் கருத்திற் கொண்டு முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டுமென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால போராளிகள் கேட்கின்றார்கள்.
அம்பாரை மாவட்டத்தை பொறுத்த வரை தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளுள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ளது. இக்கட்சியின் வேட்பாளர்கள் கட்சிக்கு இருக்கின்ற செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுமார் 70 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் என எதிர்வு கூறப்படுகின்றது. இந்த வாக்குகளை சரியாக 03 பேருக்கும் வாக்களித்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 03 வேட்பாளர்களும் இலகுவாக வெற்றி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாரை மாவட்டத்தை பொறுத்த வரை தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளுள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதிகபட்ச ஆதரவைப் பெற்றுள்ளது. இக்கட்சியின் வேட்பாளர்கள் கட்சிக்கு இருக்கின்ற செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுமார் 70 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் என எதிர்வு கூறப்படுகின்றது. இந்த வாக்குகளை சரியாக 03 பேருக்கும் வாக்களித்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 03 வேட்பாளர்களும் இலகுவாக வெற்றி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்கள்தான் அதிகபட்ச ஆதரவைக் கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு அடுத்த படியாக முன்னாள் அமைச்சர் அதாவுல்லா ஆதரவைக் கொண்டுள்ளார். இவருக்கும் வெற்றிக்கான வாய்ப்புக்கள் உள்ளன.
ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் யானைச் சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதனைப் போன்று ஐ.தே.கவும் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இவர்கள் வெற்றி பெற வேண்டுமாக இருந்தால் சுமார் 40 ஆயிரத்திற்கும் குறையாத விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் யானைச் சின்னத்திலே போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களையும், ஐ.தே.கவில் போட்டியிடும் 03 சிங்கள வேட்பாளர்களையும் பின்னுக்கு தள்ளி வெற்றி பெறலாம். ஆனால், இவர்களைப் பொறுத்தவரை இத்தொகை வாக்குகள் முயற்கொம்பாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. இதனால், இவர்களுக்கு அளிக்கப்படும் விருப்பு வாக்குகள் முஸ்லிம் வேட்பாளர்களை தோல்விக்கு அழைத்துச் செல்லும் என்பது மட்டுமல்ல, அம்பாரையில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்களை இலகுவாக வெற்றி பெறச் செய்திடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கருத்திற் கொள்ளாது அபரிதமான நம்பிக்கையில் வாக்களிக்க முடியாது.
புதிய பாராளுமன்றம் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றும் என எதிர் பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன் வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு இனப் பிரச்சினை தொடர்பாக சர்வதேச மட்டத்திலும், உள்ளுரிலும் பல பேச்சுக்களில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பங்குபற்றுதல் முக்கியமாகும். அதிகாரப் பரவலாக்கம், அரசியல் தீர்வு பற்றி கருத்தாடல்களும், சர்தேசத்தின் நகர்வுகளும் எந்த இடத்தில் உள்ளதென்பதனை முஸ்லிம்கள் சார்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் அறியும். அதனால், இதில் தொடர்பில்லாதவர்கள் அவற்றில் பங்கு கொண்டால் காட்டில் விடப்பட்ட பூனையாகவே இருப்பார்கள். ஆதலால், பொதுத் தோதலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றி முக்கியமாகவே கருதப்பட வேண்டியுள்ளது.
அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் மயில் கட்சியினர் ஒரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தால் சுமார் 45 ஆயிரம் வாக்குகளைப் பெற வேண்டும். இத்தொகை வாக்குகளை அக்கட்சி பெற்றுக் கொள்ளுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சிக்கு சம்மாந்துறை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் கணிசமான வாக்குகள் உள்ளன. இந்த வாக்குகள் மாத்திரம் அதன் வெற்றியை தீர்மானிக்க முடியாது. ஏனைய பிரதேசங்களிலும் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை விடவும் ஆசனங்களின் பகிர்வுகளின் பின்னர் மீதி வாக்குளின் அடிப்படையில் ஒரு ஆசனத்தை பெற்றுக் கொள்ள வேண்டுமாக இருந்தாலும் சுமார் 40ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். கடந்த 2010 தேர்தலில் சுமார் 26ஆயிரத்திற்கும் அதிகமான வாக்;குகளைப் பெற்றுக் கொண்டதனால்தான் தமிழ்த் தேசிய கூட்டணியால் ஒரு ஆசனத்தை பெற்றுக் கொள்ள முடிந்தது. ஆனால், இம்முறை மொத்த வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. தமிழர்களின் 85 வீதமான வாக்குகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்;கு அளிக்கப்படக் கூடிய வாய்ப்புக்களே உள்ளன. இதனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விடவும் அதிக வாக்குகளை மயிலின் வேட்பாளர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறானதொரு நிலையில்தான் மயிலின் வேட்பாளர்கள் உள்ளார்கள். மயிலின் ஆட்டம் தொடர்வது என்பது பெற்றுக் கொள்ளும் வாக்குகளின் எண்ணிக்கையிலேயே தங்கியுள்ளது.
Vidivelli - 14.08.2015
0 comments:
Post a Comment