மைத்திரிபால சிறிசேன அசஹாய சூரர் ஒருவர் என்பதை அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தின் மூலமும், அதனைத் தொடர்ந்து அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் பொறுப்புவாய்ந்த பதவிகளை வகித்த இருவரை செயலிழக்கச் செய்ததன் மூலமும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். அவர் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் விளைவாக மஹிந்த ராஜபக்ஷவும், அவருக்கு ஆதரவாக செயல்படும் இனவாத அரசியல்வாதிகளும் இப்பொழுது செய்வதறியாது திக்குமுக்காடிப் போயிருக்கின்றார்கள். ஜனாதிபதி தமது ஆளுமை எத்தகையது என்பதை உரிய முறையில் செயலில் காட்டியிருக்கின்றார்.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சரும், கண்டி மாவட்ட ஐ.தே.முன்னணியின் வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் உடுநுவரைத் தொகுதியில் கெலிஓய நகரில் வெள்ளிக்கிழமை (14) இரவு நடைபெற்ற இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார். இக்கூட்டத்தில் சிங்கள மக்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டின் தேசிய ஒருமைப்பாடு பற்றியும் நாட்டு எல்லைகளின் ஸ்திரத்தன்மை பற்றியும், நாட்டின் இறைமை பற்றியும் போதிய புரிந்துணர்வின்றி செயல்பட்டவர்களாகவே முன்னாள் ஜனாதிபதியையும், அவரது ஆதரவாளர்களையும் நாம் காண்கின்றோம்.
அப்பாவி நாட்டுப்புற சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் இனவாதக் கருத்துக்களை விதைத்து அவர்களை உசிப்பேற்றி இணங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கவே முன்னாள் ஜனாதிபதி இன்னமும் எத்தனித்துக் கொண்டிருக்கின்றார்.
ஜனவரி 8ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட 'யுகப் புரட்சி'க்கு வழிகோலியவர்களை மறக்காது, அதனை பாதுகாக்க உதவிய தரப்பினருக்குதாம் ஒருபோதும் துரோகம் செய்யப்போவதில்லையென்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்தின் மூலமும், அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலமும் உணர்த்தியுள்ளார்.
தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ள கணிப்புகளின்படி ஐக்கிய தேசிய முன்னணி தேர்தலில் 120 ஆசனங்களை வெற்றி கொள்ளக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தோல்வியைத் தழுவுவது நிச்சயமாகி விட்டது. ஆட்சி மாற்றித்திற்கு உதவி மக்கள் இந்தத் தேர்தலில் தூர நோக்குடன் நாட்டின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணங்கிச் செல்லும் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதில் முனைப்பாக இருக்கின்றனர்.
கண்டி நகரமும் அதனைச் சூழ்ந்துள்ள இதர பிரதேசங்களும் நகர அபிவிருத்தி அதிகாரசபையினூடாகவும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினூடாகவும் ஐ.தே.முன்னணி அரசாங்கத்தினூடாக துரித கதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன என்றார்.

0 comments:
Post a Comment