சஹாப்தீன்:கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக செயற்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு பல அநீயாயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. மேயர் கல்முனையின் அபிவிருத்தியில் எடுக்கும் நடவடிக்கைகளைப் போன்று சாய்ந்தமருது பிரதேசத்தின் அபிவிருத்தியில் அக்கரை காட்டுவதில்லை. இதனால்தான், சாய்ந்தமருது மக்கள் பிரிந்து போக வேண்டுமென்று சிந்திக்கின்றார்கள்.
இவ்வாறு கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் ஏ.எல்.ஏ.மஜீட் மாநகர சபையின் நவம்பர் மாத அமர்வின் போது தெரிவித்தார்.
கல்முனை மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தலைமையில் நேற்று முன் தினம் (26.11.2015) மாலை நடைபெற்ற இவ்வமர்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கௌரவ உறுப்பினர் பசீர் வெளிநாடுகளில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு தேர்தல்களில் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்று கொண்டு வந்த தனி பிரேரணை மிகவும் வரவேற்கத்தக்கதாகும். இந்த வாய்ப்பு வழங்கப்படுமாயின் வெளிநாடுகளில் தொழில் செய்யும் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிககைகளை அரசாங்கம் மேற்கொள்ளும். வெளிநாடுகளில் சுமார் 20 இலட்சத்திற்கு அதிகமான இலங்கையர்கள் தொழில் புhநிது கொண்டிருக்கின்றார்கள்.
அநீயாயங்களுக்கு நீதி வேண்டும்
எந்தவொரு செயற்பாட்டிற்கும் கூட்டுப் பொறுப்பு அவசியமாகும். அத்தகையதொரு கூட்டுப் பொறுப்பை கல்முனை மாநகர சபையில் காண முடியாதுள்ளது. கடந்த 15 மாதங்களாக கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றேன். இக்காலப் பகுதியில் எனக்கு பல அநீயாயங்கள் நடந்தேறியுள்ளன. எனக்கு அநீயாயங்கள் நடந்து கொண்டிருக்கின்ற போதிலும் நான் பொறுமையாக இருந்து கொண்டிருந்தேன். ஏனெனில், நான் தலைமைத்துவ கட்டுப்பாட்டிற்கு கட்டுப்பட்டு நடப்பவன்.
ஆயினும், இனியும் பொறுமையாக இருக்க முடியாதென்பதற்காகவும், இன்றைய சந்தர்ப்பத்தை விட்டுவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதற்காகவும் நான் பல விடயங்களைப் பற்றி பேச வேண்டியுள்ளது.
கல்முனை மாநகர சபையின் மேயராக எச்.எம்.எம்.ஹரிஸ் இருந்த போது பிரதி மேயருக்கு வாகன வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. எனது கடமைகளைச் செய்வதற்கு ஆணையாளர் மறுத்துக் கொண்டிருக்ன்றார். கடந்த ஒக்டோபர் 05ஆம் திகதி உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சில் நடைபெற்ற அலுவலக ரீதியான நிகழ்வொன்றுக்கு நானும், இன்னும் சில உறுப்பினர்களும் செல்வதற்கு ஆணையாளரிடம் வாகனம் கேட்ட போது, அமைச்சிலிருந்து அனுமதி தந்தால்தான் வாகனம் தருவேன் என்றார். அதற்கு பிறகு அமைச்சிடம் நாங்கள் தொடர்பு கொண்டு பேச வைத்தோம், அதன் பின்னர் வாகனம் தரப்பட்டது.
இன்னுமொரு விடயமாக சென்ற போது ஆணையாளர் நடந்து கொண்ட விதம் என்னை ஆத்திரப்பட வைத்தது. இதனால், நான் கொண்டு சென்ற ஆவணத்தை ஆணையாளர் முன்னிலையில் கிழித்து வீசினேன்.
2015 வரவு – செலவு திட்டம்
2015ஆம் ஆண்டிற்கான வரவு – செலவு திட்டத்தை இச்சபையில் சமர்ப்பித்த போது அதனை எல்லா உறுப்பினர்களும் பாராட்டி பேசினார்கள். நானும் வறிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு வித்திடும் பாதீடு என்று புகழாரம் சூடியேன். ஆனால், அந்த பாதீட்டில் உறுதியளிக்கப்பட்ட ஏழை மக்களுக்குரிய வாழ்வாதாரத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வறிய மக்களை இனங்கண்டு அவர்களின் விபரங்களை வழங்குமாறு எல்லா உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டன. அதற்கமைவாக நாங்களும் பெயர் விபரங்களை எடுத்தோம், வழங்கினோம். ஆனால், இன்று வரைக்கும் அதன் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை. இதனால், சபையின் உறுப்பினர்களும், மக்களும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
அபிவிருத்தி நடவடிக்கைகளில் பாரபட்சம்
கல்முனை மாநகர சபையில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன. இங்குள்ள உறுப்பினர்கள் பலருக்கும் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், பிரதி மேயராக உள்ள எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது பற்றி மேயரிடம் கேட்ட போது கிழக்கு மாகாண முதலமைச்சரின் மூலமாக வந்த நியமனம் என்று தெரிவித்தார். இந்த முதலமைச்சர் எனது நண்பர், எனக்கு தெரியாதா அவரிடம் சென்று அனுமதி பெற்றுக் கொண்டு வருவதற்கு. ஆனால், தலைமைத்துவ கட்டுப்பாட்டிற்காக பொறுமையாக இருந்தேன்.
சாய்ந்தமருதில் பூங்கா ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பூங்கா என்பது மிகவும் அழகாக திருமணப் பெண் போல் காட்சியளிக்க வேண்டும். ஆனால், இந்தப் பூங்கா தாலி இழந்த கைம்பெண் போன்று காட்சியளிக்கின்றது.
கல்முனை மாநகர சபையின் மேயர் கல்முனை ஐக்கிய சமாதான சதுக்கத்தில் கடைகளை கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகளைப் போன்று சாய்ந்தமருது அபிவிருத்திகளில் முயற்சிகளை எடுப்பதில்லை. இதனால்தான், சாய்ந்தமருது மக்கள் பிரிந்து போக வேண்டுமென்று சிந்திக்கின்றார்கள்.
0 comments:
Post a Comment