ஏறாவூர்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர் எம்.பி.எம்.வஹாப்தீன்
முஸ்லிம் சமூகத்திற்காக இதய சுத்தியுடன்
உழைக்கின்ற ஒரு கட்சி அதன் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் பொய் பேசாத நேர்மையாக
நடக்கின்ற ஒருவர் என்று நம்பி இந்தக் கட்சியில் இணைந்து இந்தக் கட்சியின் ஏறாவூர் அமைப்பாளராகவும்
நியமிக்கப்பட்ட ஒருவன் நான்,
அண்மைக்காலமாக தங்களின் சுயரூபம் பல வழிகளில் வெளிப்பட்டபோது இந்தக் கட்சியைப் பற்றியும், தங்களைப் பற்றியும் நான் தப்புக் கணக்கு போட்டுவிட்டேன் என்கின்ற உணர்வு என்னை ஆட்கொண்டும் நான் மௌனமாக இருந்தேன். ஆயினும் கடந்த 20.11.2015 ஆம் திகதிய நேத்ரா தொலைக்காட்சியில் நீங்கள் கலந்து கொண்ட வெளிச்சம் நிகழ்ச்சியின் பின்னும் நான் மௌனம் கலைக்கவில்லையாயின் அது சமூகத்துரோகமாகிவிடும். உண்மை சமூகத்தின் முன் ஒப்புவிக்கப்பட வேண்டும்.
பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுடனும், ஆனந்த சங்கரி ஐயாவுடனும் கலந்து கொண்ட குறித்த நிகழ்ச்சியில் நீங்கள்
உரையாற்றும்போது
நீங்கள் மீள் குடியேற்ற அமைச்சராக இருந்து 3 இலட்சம் தமிழ் அகதிகளை திட்டமிட்ட அடிப்படையில் குடியேற்றியதாகவும் அதன் பின் உங்களை மீள் குடியேற்ற அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கியதால் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை திட்டமிட்ட அடிப்படையில் செய்ய முடியவில்லை என்று முன்னைய அரசாங்கத்தை குறை கூறினீர்கள். அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு எதிராக இனவாத ரீதியில் செயற்படுவதாகவும் குறிப்பிட்டீர்கள்.
மஹிந்தவின் அரசாங்கத்தில் சக்தி வாய்ந்த அமைச்சராக இருந்தவர்
நீங்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு அவ்வரசாங்கத்தில் எதையும் செய்யக் கூடிய சக்தி பெற்றிருக்கவில்லை. அவ்வாறிருந்தும் யுத்தம் நிறைவு பெற்ற 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டுவரையான நீண்ட 6 வருட காலப்பகுதியில் ஏன் இம் மீள் குடியேற்றத்தை உருப்படியாகச் செய்ய முடியவில்லை ” என்று பிரதி அமைச்சர் ஹரீஸ் கேள்வி தொடுத்தபோது, குரலை உயர்த்திப் பேசினால் நான்தான் வெற்றிபெற்றதாக மக்கள் நினைப்பார்கள் என்பதுபோல நீங்கள் பதில் கூறத் தொடங்கினீர்கள். அதை மக்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்பதற்காகவோ என்னவோ வழமையாக முகநுல்களில் உங்களுக்காக புகழ் பாடுபவர்கள் ஏதோ நீங்கள் இந்நிகழ்ச்சியில் சாதித்துவிட்டதாக எழுதித் தள்ளுகிறார்கள்.
மேலும் உங்கள் பதிலில், நான்
அமைச்சரவையில் பேசினேன், அங்கு பேசினேன், இங்கு பேசினேன் எதுவும் நடக்காததால் அரபு நாடுகளிடமும், உள்நாட்டு முஸ்லிம் தனவந்தர்களிடமும் பேசி பல நுறு வீடுகளை கட்டிக் கொடுத்தேன் என்றும் குறிப்பிட்டீர்கள். அதற்காக உங்களைப் பாராட்டுகின்றோம்.
ஆனால் கடந்த அரசை விட்டு வெளியில் வந்ததும் நன்றி மறக்க முடியாமல் பஷீல் ராஜபக்ஷ அவர்களை பாராட்டிப் பேசினீர்கள். நீங்கள் 3 மாவட்டங்களில் மாவட்ட இணைப்புக் குழுத் தலைவர் பதவியை மஹிந்த அரசு தந்தது. நான் ஒரு சக்தி மிக்க அமைச்சராக இருந்தேன். எல்லாவற்றையும் துக்கி வீசிவிட்டு சமூகத்திற்காக மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முன்வந்தேன் என்று உங்களை நீங்களே பாராட்டி கைதட்டல்களும் பெற்றவர் நீங்கள்,
இவ்வளவு சக்தி வாய்ந்த அமைச்சராக நீங்கள் இருந்தும் பிரதி அமைச்சர் ஹரீஸ் கேட்டதுபோல இந்த 6 வருட காலப்பகுதியில் ஏன் மீள் குடியேற்றத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை.
தமிழர்களின் மீள் குடியேற்றம் பூர்த்தியானதும் உங்களை மீள் குடியேற்ற அமைச்சர் பதவியில் இருந்து மஹிந்த அரசாங்கம் துக்கி வீசியபோது நீங்களே உங்களைப் பாராட்டுகின்ற அளவு சக்திவாய்ந்த அமைச்சராகிய நீங்கள், நான் இடம்பெயர்ந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டவன் எனவே அம்மக்களை மீள் குடியேற்றும்வரை அப்பதவியை எனக்குத்தாருங்கள் என்று போராடியிருக்கலாம்தானே. நீங்கள்தான் சிங்கத் தலைவனாச்சே. அப்படித்தானே உங்கள் அடிவருடிகளான முகநுல் காரர்கள் எழுதுகிறார்கள்.
அந்த அமைச்சையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. மீள் குடியேற்றத்தையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை. ஆனால் நீங்கள் சக்திவாய்ந்த அமைச்சராக இருந்ததாக கூறுகின்றீர்கள். அவ்வாறு முடியாவிட்டால் ஏன் நேரகாலத்தோடு அந்த அரசை விட்டு வெளியேறவில்லை.
மைத்திரி நிச்சயம் வெற்றிபெறுவார், என்பது வெளிப்படையாகத் தெரிந்ததும் அரசைவிட்டு வெளியேறி கைதட்டல் வாங்கிக் கொண்டீர்கள். காரணம் ரவூப் ஹக்கீம் கூட உங்களுக்குப் பின்னர்தான் அதனைச் செய்தார் என்பதால்,
மு.கா.
விற்கும் நமக்கும் ஒரேயொரு வித்தியாசம். நாம் தபால் மூல வாக்களிப்புக்கு 2 நாட்கள் முன்னராக அரசை விட்டு வெளியேறினோம். அவர்கள் தபால் மூல வாக்களிப்பிற்கு பின்னராக வெளியேறினார்கள். அவ்வளவு தான் வித்தியாசம். அதுபோகட்டும் குறித்த வெளிச்சம் நிகழ்ச்சியில் நீங்கள் மேலும் குறிப்பிடும்போது, தமிழ் தேசிய கூட்டமைப்புத்தான் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சக்தி மிக்கதாக உள்ளது. அவர்கள் சொல்வதுதான் நடக்கிறது. என்று கூறினீர்கள். இவ்வாறு அடிக்கடி கூறுகின்றீர்கள். உண்மைதான், அதற்கும்
நியாயம் இருக்கின்றது.
அண்மையில் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒரு கூட்டத்தில் பேசுகின்றபோது, “ தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தலுக்கு முன் மைத்திரியிடமும், ரணிலிடமும் எதனை நிபந்தனையாக முன்வைத்தார்களோ அவற்றை அரசு இப்பொழுது வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதுதான் யாராலும் ஒருபோதும் மீட்க முடியாது என்று நினைத்த “ சம்பூர் மீட்பு ”
யோசப் பரராஜ சிங்கத்தின் கொலை வழக்கை துசு தட்டி முன்னாள் முதலமைச்சரையே கைது செய்தது போன்றவையாகும். எதிர்காலத்திலும் அவர்கள் கேட்ட ஏனையவைகளும் கிடைக்கும். ”
“ அதே நேரம் ஜனாதிபதியும் பிரதமரும் முஸ்லிம்கள் விடயத்தில் நேர்மையாக நடக்கவில்லை என்றும் கூறமுடியாது. முஸ்லிம் தலைவர்கள் தேர்தலுக்கு முன் என்ன என்ன தர வேண்டுமென்று நிபந்தனை முன்வைத்தார்களோ அவற்றினை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். அதுதான் எமக்கு என்ன அமைச்சு, எனது கட்சிக்காரர்களுக்கு எத்தனை பிரதி அமைச்சு,
இன்னும் எத்தனை இதர பதவிகள் என்பதாகும்.” என்று குறிப்பிட்டார்.
இது எவ்வளவு நிதர்சனமான உண்மை. “ ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் மஹிந்தவுடன் பேச்சு வார்த்தை நடாத்தியபோது 20 அம்சத்திட்டத்தை தயாரித்து, கட்சியின் மொத்த உயர் பீடத்தையும் அழைத்துச் சென்று மஹிந்தவுடன் பேசினீர்கள். ஏற்கனவே பேசி வைத்ததுபோல் அவரும் எல்லாவற்றிற்கும் ஆம் என்று தலையசைத்து விட்டார். ஆனால் அதன் பின் மைத்திரியுடனும், ரணிலுடனும் பேச்சு வார்த்தை நடாத்தச் சென்றபொழுது உயர் பீடத்தையும் அழைத்துச் செல்லவில்லை. 20 அம்சத்திட்டத்தையும் கொண்டு செல்லவில்லை. தனியாகவே
சென்று பேசினீர்கள். ஆகக் குறைந்தது இரண்டு அம்சத்
திட்டத்தையாவது கொண்டு சென்று நிறைவேற்றித் தர வேண்டுமென்று நிபந்தனை வைத்தீர்களா ? அதிலும்
குறைந்தபட்சம் ஒரு அம்சத்திட்டமாக இந்த மீள் குடியேற்றத் திட்டத்தையாவது உடன்படிக்கை
செய்திருக்கலாமே. அவ்வாறு செய்திருந்தால் சம்பூர் தங்கு தடையின்றி
மீளளிக்கப்பட்டதுபோல மீள் குடியேற்றமும் தங்குதடையின்றி நடைபெற்றிருக்குமே.
இது தொடர்பாக கட்சிக்குள் உங்களிடம் யாரும்
இதுபற்றி அப்பொழுதே பேசவில்லை என்று உங்களால் கூற முடியுமா ? கட்சியின்
செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடுக்கும் உங்களுக்கும் பாரிய வாக்குவாதம் முதல் தடவையாக ஏற்பட்டதே சமூதாயம்
தொடர்பான விசயங்களை மைத்திரியிடமும், றணிலிடமும் ஏன் பேசவில்லை
என்று கேட்டதனால்தானே, மறுப்பீர்களா ? கட்சியின்
முன்னாள் பிரதித் தலைவர் என்.எம். ஸஹீட்
அவர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு அளிக்க முற்பட்டதும் இந்த விடயத்தில் உங்களிடம் ஏற்பட்ட
முரண்பாட்டினால்தானே. அதையும் மறுப்பீர்களா ?
நீங்கள் பேசியது எல்லாம் அமைச்சர் பதவி
மற்றும் பிரதி அமைச்சர்கள் பதிவிகள்தானே, ஆகக் குறைந்த்து மீள் குடியேற்ற அமைச்சையாவது
கேட்டீர்களா ? அதுவும் இல்லையே, வர்த்தக
கைத்தொழில் அமைச்சைத்தானே மீண்டும் கேட்டுப் பெற்றுள்ளீர்கள். அந்த அமைச்சுக்குள் அப்படி என்ன இரகசியம் பொதிந்திருக்கின்றது. நீங்கள் மீள் குடியேற்றம் பற்றி பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டிய நேரத்தில்
பேசவேண்டியதைப் பேசாமல் இப்பொழுது பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் பேசுகின்றீர்கள்
அல்லது பேசுவதாக உங்களின் ஊடகவியலாளர்கள் எழுதுகின்றார்கள். “ பிச்சைக்காரர்கள் புண் ஆறுவதை விரும்பாதது போல, நீங்களும்
மீள் குடியேற்றம் நடைபெறவும் வேண்டும். மீள் குடியேற்றம் முழுமை
அடைந்துவிடவும் கூடாது. அப்பொழுதுதான் மீள் குடியேற்றத்தை சந்தைப்படுத்தி
தனது அரசியலை தொடர்ந்தும் முன்னெடுக்கலாம் என்ற உக்தியை பாவிப்பதாக மக்கள் பேசுகின்றார்கள்.
குறிப்பாக உங்கள் புகழ் பாடுவதற்காக நியமிக்கப்பட்டிருக்கும்
முகநுல் நண்பர்கள் உங்கள் புகழ் பாடும் விதம் முகம் சுழிக்க வைக்கின்றது. ஒரு
அமைச்சரை ஜனாதிபதி ஒரு கூட்டத்திற்கு அழைப்பது என்பது சர்வ சாதாரணமான விடயம்.
அதற்கு “ ஏக பிரதிநிதி என்று செய்கின்ற விளம்பரம்
மக்களை ஒரு விதமாகப் பேச வைக்கின்றது. அது மட்டுமல்ல,
கூட்டம் முடிந்து செல்லுகின்றபோது ஒரு அமைச்சரை ஜனாதிபதி சற்று நிறுத்திப்
பேசுவது ஒரு அசாதாரண நிகழ்வா ? அதற்கும் விளம்பரமா ? ஜனாதிபதி அவ்வாறு உங்களை நிறுத்திப் பேசியதை நீங்கள் உங்கள் ஊடகவியலாளர்களிடம்
சொல்லாமல் அது அவர்களுக்கு எவ்வாறு தெரியும்?
நீங்கள் கடந்த பொதுத் தேர்தலின்போது முசலியில்
ஒரு கூட்டத்தில் பேசுகின்றபோது உங்களின் ஆதரவாளர்களின் கரகோசங்களுக்கு மத்தியில் முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாறுக் அவர்களை ஏளனம் செய்து பேசியது மட்டுமல்லாமல் அவர்
என்ன ஒப்பந்தம் செய்துவிட்டு எதிரணிக்குச் சென்றிருக்கின்றார். ஆனால்
இந்த நாட்டில் நாங்கள் மாத்திரம்தான் சமூகத்திற்காக ஒப்பந்தம் செய்துவிட்டுப் போயிருக்கின்றோம்.
“ வியாபாரம் செய்யும்போது கூட ஒப்பந்தம் செய்து அழகிய முறையில் வியாபாரம்
செய்யுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்
” எனவே நாங்கள் அந்த அடிப்படையில் ஒப்பந்தம் செய்துவிட்டுத்தான் எதிரணிக்குப்
போயிருக்கின்றோம். அதில் முசலியைப் பற்றியும் எழுதியிருக்கின்றோம்
என்று நாக் கூசாமல் பொய் கூறினீர்கள். அவ்வாறு நீங்கள் ஒரு ஒப்பந்தம்
செய்திருக்கின்றீர்களா ? உங்களால் காட்ட முடியுமா ? என்று சவால் விடுக்கின்றேன்.
அமைச்சுப்பதவி தொடர்பாக
நீங்கள் இங்கு செய்த ஒப்பந்தத்தை நான் இங்கு
குறிப்பிடவில்லை. குறித்த வெளிச்சம் நிகழ்ச்சியில் அதாஉல்லாஹ்
போன்றவர்கள் மு.கா. விலிருந்து வெளியேற்றப்பட்டமை தொடர்பாகவும்,
மு.கா.வில் ஹஸன் அலியின்
அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை தொடர்பாகவும் நீங்கள் நீலிக் கண்ணீர் வடித்தீர்கள்.
இது தொடர்பாக பேசுவதற்கு உங்களுக்கு அருகதை இருக்கின்றதா ? என்று ஒரு கணம் சிந்தித்தீர்களா ? நீங்கள் எமது கட்சியின்
தலைமைப் பதவியை ஏற்றது 2010 ஆம் ஆண்டுக்குப் பின்தான்.
இந்த 5 வருட காலப்பகுதியில் கட்சியின் உயர் பீடத்தில் இருந்தவர்களுக்கு என்ன நடைபெற்றது.
அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விற்கு
நடந்தது என்ன ? மாகாண சபை உறுப்பினர் சிப்லி எங்கே ? முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் எங்கே ? வட
கிழக்கிற்கு வெளியே கிடைத்த ஒரேயொரு மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் எங்கே ? சிரேஷ்ட பிரதித் தலைவர் சட்டத்தரணி என்.எம். ஷஹீட் எங்கே ? முன்னாள் சுகாதார அமைச்சர், தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.சுபைர் எங்கே?
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இந்தக் கட்சியின் உருவாக்கத்திற்கே அடிப்படைக்காரணமாக
இருந்த கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீடை தேர்தலில் போட்டியிடாமல் தடுத்து,
தேசியப்பட்டியல் வாக்குறுதி கொடுத்து அதையும் காற்றில் பறக்கவிட்டது
மட்டுமல்லாமல் அவரைக் கட்சியிலிருந்தும் வெளியேற்றுவதற்கு முயற்சி எடுத்த உங்களுக்கு
ஸ்ரீ லங்கா மு.கா செயலாளர் நாயகம் ஹசனலியின் அதிகாரக் குறைப்பு
தொடர்பாக பச்சாதாபம் ஏற்பட்டிருக்கின்றது.
இது தொடர்பாக பிரதி
அமைச்சர் ஹரீசிடம் கேள்வி எழுப்பினீர்களே நீங்கள் என்ன “ இறாலா
‘ ? அல்லது இதைத்தான் கலியுக
காலம் என்பதா ?
எம்.பி.எம்.வஹாப்தீன்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைப்பாளர்
ஏறாவூர்.


0 comments:
Post a Comment