• Latest News

    July 22, 2016

    மக்கள் நீதிமன்றத்தில் ரவூப் ஹக்கீம்

    எஸ்.றிபான் -
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக் காரியாலயமான தாருஸ்ஸலாம் யாருடைய பெயரில் உள்ளதென்று அக்கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எழுதியுள்ள கடிதமொன்றில் கேட்டுள்ளார். இதன் மூலமாக குறிப்பிட்ட காரியாலயம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பெயரில் அல்லாது வேறு யாரோ ஒருவரதோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் பெயரிலோ இருக்க வேண்டுமென்ற ஒரு ஊகத்தினை மு.காவின் ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

    பசீர் சேகுதாவூத் பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்கின்றேன் என்று அறிவித்தவுடன் மு.காவில் ஒரு சாரார் ரவூப் ஹக்கீமின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ரகசியங்களை பசீர் சேகுதாவூத் வெளியிடுவார் என்று பல கற்பனைக் கதைகளை சொல்லிக் கொண்டார்கள். வீடியோக்களை முன் வைப்பார் என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். ஆனால், பசீர் சேகுதாவூத் அண்மைக்காலமாக கடிதங்களின் மூலமாக முன் வைத்துக் கொண்டிருக்கும் கேள்விகள் கட்சியின் நடவடிக்கைகள், சொத்துக்களுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன. இதனால், கட்சியின் ஆதரவாளர்கள் திகைப்பில் ஆழ்ந்துள்ளார்கள். இப்படியெல்லாம்; நடந்துள்ளதா என்று கேட்கின்றார்கள். இது கால வரைக்கும் பசீர் சேகுதாவூத் மறைத்து விட்டாரே என்றும் கூறுகின்றார்கள். அவருக்கு தேசியப்பட்டியலில் வாய்ப்பு வழங்கி இருந்தால் இவற்றை மறைத்திருப்பார் என்றும் சொல்லுகின்றார்கள். இவ்வாறு பலவிதமாக தமது அறிவுக்கும், தேடலுக்கும் ஏற்ப மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
    ஆயினும், அவரின் கேள்விகளில் உள்ள உண்மைகளையும் விளங்கிக் கொள்ளல் வேண்டும். பசீர் சேகுதாவூத் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமை வழி நடத்தினார். கட்சியின் இன்றைய சீரழிவுக்கு அவர்தான் காரணம் என்று சொல்லும் உயர்பீட உறுப்பனர்களும் மு.காவில் உள்ளார்கள். அவர்கள் ரவூப் ஹக்கீம் குற்றமற்றவர் என்று சொல்லுவதற்கும், பசீர் சேகுதாவூத் குற்றம் இழைத்தவர் என்று காட்டுவதற்கும் விளைகின்றார்கள். ஆனால், ரவூப் ஹக்கீமை பசீர் சேகுதாவூத்தான் வழி நடத்தினார் என்பது உண்மையாயின் கட்சியின் தலைவரும், தவிசாளரும் குற்றவாளிகளாவார்கள். பசீர் சேகுதாவூத் கட்சியை சீரழித்தார் என்றால் அதில் ரவூப் ஹக்கீமுக்கும் பங்குண்டு. ரவூப் ஹக்கீம் கட்சியை சீரழிக்கவில்லை என்றால் பசீர் சேகுதாவூத்தும் கட்சியை சீரழிக்கவில்லை என்ற முடிவுக்கு வருதல் வேண்டும். தலைவர் என்பவர் மற்றவரிடம் ஆலோசனை கேட்பவராக இருக்க வேண்டுமேயன்றி முடிவுகளை அவர்தான் எடுக்க வேண்டும். ஆதலால், அவர்தான் கெடுத்தார் என்று சொல்லலாமே அன்றி, அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மற்றர்கள் பிழையாக வழி நடத்தி கெடுத்தார்கள் என்று தலைவர் ஸ்தானத்தில் உள்ளவர்கள் சொல்லி தப்பிக்க முடியாது.
    மேலும், குற்றம் செய்த ஒருவர் நியாயத்தை கேட்க முடியாதென்று உலகத்தில் எங்குமில்லை. குற்றம் இழைத்தவர் நியாயத்தை பேச முடியாதென்றால் அது இன்னுமொரு குற்றவாளியை பாதுகாத்துக் கொள்வதற்கான முயற்சியாகும். இஸ்லாமிய வரலாற்றில் கூட மிகப் பெரிய குற்றங்களைச் செய்தவர்கள் நீதியான மனிதர்களாக மாறியுள்ளார்கள். ஆதலால், சொல்லப்படும் விடயங்களில் நியாயம் உள்ளதா என்று பாருங்கள். நியாயம் இருக்குமாயின் ஆதரிக்க வேண்டும். அதில் அதர்மம் இருக்கமானால் எதிர்க்க வேண்டும்.
    இதே வேளை,; பசீர் சேகுதாவூத் முன் வைத்துள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு இருக்கின்றது. இதிலிருந்து அவர் நழுவ முடியாது.  கடந்த காலங்களில் கட்சிக்கு ஏற்பட்ட சவால்களுக்கு பதிலளிக்காது இருந்தமை சிலரினால் சாணக்கியமாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், தற்போது கட்சி தொடர்பாக, அதன் நடவடிக்கைகள், சொத்துக்கள் பற்றி எல்லாம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்காது இருப்பதனை சாணக்கியம் என்று ரவூப் ஹக்கீம் கருதுவாராயின் அவர் மக்கள் நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்க வேண்டியும் ஏற்படலாம். ஏனெனில், கேட்கப்படும் கேள்விகள் பாரதூரமானவை.
    மு.காவின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கட்சியின் தலைமைக் காரியாலயம் பற்றி கேட்டுள்ள கேள்விகள் முக்கியமானவையாகும். இக்காரியாலயம் கட்சிக்குரியதாக இருக்குமாயின் அதனைத் தெரிவிப்பதற்கு நீண்ட நாட்களை எடுக்க வேண்டிய அவசியமில்லை. இப்பத்தி எழுதும் வரைக்கும் அது யாருடைய பெயரில் உள்ளதென்று தலைவர் ரவூப் ஹக்கீம் பகிரங்கப்படுத்தவில்லை. இதனால், மு.காவின் தலைமைக் காரியாலயமான தாருஸ்ஸலாம் சிக்கல்களில் மாட்டியுள்ளதா என்று எண்ண வேண்டியுள்ளது. ரவூப் ஹக்கீம் முன்னர் பிரச்சினைகள் எழும் போது பேசாதிருந்தமை சாணக்கியம் என்று ஏற்;றுக் கொண்டாலும், பசீர் சேகுதாவூத்தின் கேள்விகளுக்கும் பேசாதிருப்பாராயின் கட்சியின் செல்வாக்கிலும், ரவூப் ஹக்கீம் மீதும், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மீதும் ஆதரவாளர்களுக்கு இருக்கின்ற நம்பிக்கைகளை நாரடிக்கச் செய்திடும்.
    மு.காவின் தலைமைக் காரியலாயத்தை கட்டுவதற்கு ஏழை ஆதரவாளன் முதல் பண வசதி படைத்த ஆதரவாளன் வரை நிதி உதவி வழங்கியுள்ளனர்.  இக்கட்டிடம் 1998.10.23ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இக்காரியாலயத்தினை பராமரிப்பதற்காக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரப் லீடர்ஸ் ஒப்லிகேட்டரி ட்ரஸ்ட் போர் யுனிட்டி அன்ட் ஸ்ரீலங்கன் ஐடென்டிட்டி (லோட்டஸ்) டுநயனநச'ள ழுடிடபையவழசல வுசரளவ கழச ருnவைல யனெ ளுசடையமெயn ஐனநவெவைல (டுழுவுருளு) எனும் பெயரில் தனியார் கம்பனி ஒன்றினை ஆரம்பித்தார்.
    பசீர் சேகுதாவூத் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு எழுதியுள்ள கடித்தத்தில் 'தலைவர் அஷ்ரஃப் அவர்களின் அகால மரணம் பற்றிய மர்மம் இன்றுவரை நீடிப்பது போன்றே அவர் தந்த நமது கட்சியின் தலைமைச் செயலகக் கட்டிடத்தின் உரிமை அவரின் மரணத்தின் பின் கட்சிக்கு இருக்கிறதா? இல்லையா? என்ற மர்மமும் இன்றுவரை தொடர்கிறது.' என்று குறிப்பிட்டுள்ளார். இதனை கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இந்த சந்தேகத்தை தீர்க்க வேண்டும்.
    மு.காவின் சொத்துக்களை நசீர் அஹமட் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு எதிராக அதாவது கட்சியின் சொத்துகளை மீட்டெடுப்பதற்காக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சமாதான முறையில் தீர்த்துக் கொள்வதற்கு ரவூப் ஹக்கீம் முடிவு செய்தார். அதற்கமைய நசீர் அஹமட்டிற்கு மு.காவின் பிரதி தலைவர் பதவி வழங்கப்பட்டது. கிழக்கு மாகாண சபையில் போட்டியிடச் செய்து முதலமைச்சர் பதவியும் கட்சியினால் பெற்றுக் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கை ரவூப் ஹக்கீம் சமாதானமாக தீர்த்துக் கொள்வதற்கு பிரதான காரணம் கறுத்தக் கோட்டார் ஒருவரின் கோட்டை காப்பாற்றுவதற்காக என்று உபகதைகளும் சொல்லப்படுகின்றன. அந்த உப கதைகளின் உண்மைகளை அல்லாஹ்வும், அதனோடு தொடர்புடையவர்களும் அறிவார்கள்.
    இதன் பின்னர் கட்சியின் சொத்துக்கள் மீளப் பெறப்பட்டுள்ளதென்று நம்பப்பட்டாலும் கட்சிக்குள் பலருக்கும் அது பற்றியதொரு சந்தேகங்கள் எழவே செய்தன. இதனால், கட்சியின் உயர்பீடத்தில் உள்ள கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் முபீன், பிரதி தவிசாளர் நயிமுல்லா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆகியோர்களும், இன்னும் சிலரும் தாருஸ்ஸலாம் மீண்டும் கட்சிக்கு கையளிக்கப்பட்டுள்ளதா என்று ரவூப் ஹக்கீமிடம் உயர்பீட கூட்டங்களின் போது கேட்டதாக மு.காவின் உயர்பீட உறுப்பினர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆக, தாருஸ்ஸலாம் பற்றிய கேள்விகளை பசீர் சேகுதாவூத்திற்கு கேட்பதற்கு முன்னர் கட்சியில் உள்ள ஒரு சில உயர்பீட உறுப்பினர்கள் கேட்டுள்ளார்கள். இதன்போதெல்லாம் அளிக்கப்பட்ட விடைகள் யாரையும் திருப்திப்படுத்தவில்லை. இதனை பசீர் சேகுதாவூத்தும் தமது கடிதத்தில் 'கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் சிலர் அண்மையில் கடிதம் ஒன்றின் மூலம் செயலாளர் நாயகத்திடம் தாருஸ்லாமின் உரித்தும், பராமரிப்பும், கணக்கு வழக்கும் தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தனர் என்பதனையும், செயலாளர் நாயகத்துக்கு இவை தொடர்பாக எதுவுமே தெரிந்திருக்கவில்லை என்பதனையும் தாங்களும் அறிவீர்கள். இக்கேள்விகளுக்கு நீங்களும், உச்சபீட உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான முகமட் ஹபீல் முகமட் சல்மானும் உச்சபீடக் கூட்டம் ஒன்றில் பதிலளித்தீர்கள். உங்கள் இருவரினதும் மழுப்பலான விளக்கங்களால் அன்று எனக்கும், இன்னும் பல உச்சபீட உறுப்பினர்களுக்கும் திருப்தி ஏற்பட்டிருக்கவில்லை.' என்று தெரிவித்துள்ளார்.
    ஆகவே, கட்சியின் தலைமைக் காரியாலயம் யாருடைய பெயரில் உள்ளதென்ற சந்தேகம் பசீர் சேகுதாவூத்தின் கடித்தின் மூலமாகவும், ஒரு சில உயர்பீட உறுப்பினர்கள் மூலமாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் உயர்பீடத்தில் பேசப்பட்டுள்ளதென்று புலனாகின்றது. ஆனாலும், அதற்கான சரியான விடைகளை ரவூப் ஹக்கீம் வழங்கவில்லை என்று தெரிகின்றது. அக்கேள்விகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய பதில்கள் அளிக்கப்பட்டிருந்தால் பசீர் சேகுதாவூத் 12 கேள்விகளை கேட்க வேண்டியிருக்காது என்று நினைக்கின்றேன். பசீர் சேகுதாவூத் கேட்டியிருப்பது நியாயமான கேள்விகள். அளிக்கப்படும் விடைகள்; மூலம்தான் மக்களினால் நியாயத்தை அறிந்து கொள்ள முடியும்.

    மேலும், மு.காவின் தலைமைக் காரியலாயத்தினை நசீர் அஹமட் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது அதனை மீட்டெடுக்க வேண்டுமென்பதில் மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் மிகப் பெரிய பிரயத்தனங்களை ஆரம்பத்தில் மேற்கொண்டார். இதனால்தான் அவர் நசீர் அஹமட்டுடன் முரண்பட நேரிட்டது. 

    மு.காவின் தலைமைக் காரியாலயம், அதன் சொத்துக்கள், வருமானம் என்பது பற்றிய சர்ச்சை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. ரவூப் ஹக்கீம் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்ட நாள் முதல் இன்றுவரை நீடித்துக் கொண்டிருக்கின்றது.

    பசீரின் கேள்விகள்
    Leader’s Obligatory Trust for Unity and Srilankan Identity (LOTUS)     என்ற நம்பிக்கை நிதியத்தின் இன்றைய நிறைவேற்று அதிகார சபை (Executive Board) உறுப்பினர்கள் யார்?

    நிறைவேற்று அதிகார சபை உறுப்பினர்கள் இவர்கள்தான் என்பது கட்சியின் தவிசாளர், பொதுச் செயலாளர் ஹஸன்அலி, உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கே தெரியாதென்றால்? இவர்களுக்கு மறைப்பதற்கான காரணம் யாதென்று ரவூப் ஹக்கீம் சொல்ல வேண்டும். 

    கட்சியின் சொத்துக்கள் மூலம் பெறப்படும் வருமானம், அந்த வருமானம் செலவு செய்யப்பட்ட விதம் பற்றியும் பசீர் சேகுதாவூத் கேட்டுள்ளார். கட்சியின் சொத்துக்களின் வரவு – செலவுகளை முன் வைப்பதில் உள்ள தயக்கம் என்ன? 

    தாருஸ்ஸலாமின் சட்டப்படியான உரித்துடமை எந்த அமைப்பிடம் அல்லது குழுவிடம் அல்லது எந்த நபரிடம் உள்ளது? இக்கேள்வி பற்றி கல்முனை மாநகர சபையின் உறுப்பினரும், உயர்பீட உறுப்பினருமாகிய ஒருவரிடம் கேட்ட போது, அவர் பேரியல் அஸ்ரப்தான் என்று குறிப்பிட்டார். இவரை சந்திப்பதற்கு முன்னர் மற்றுமொரு உயர்பீட உறுப்பினரிடம் அலைபேசி மூலமாக பேசிய போது கட்சியின் உறுப்புறுமையை இழந்தவர்கள் கட்சியை பராமரிப்பதற்கான நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்க முடியாதென்றார். இதைச் சொன்ன போது கல்முனை மாநகர சபையின் குறிப்பிட்ட அந்த உறுப்பினர் இருக்கலாம் என்றார். இதன் மூலமாக கட்சியின் உயர்பீட உறுப்பினர்களிடையே கட்சியின் சொத்துக்களை பராமரிப்பதில் உள்ள சட்டங்கள் பற்றிய தெளிவு இல்லையென்று புரிந்து கொண்டேன். 

    மு.காவின் தலைமைக் காரியாலயத்தை பராமரிப்பதற்கு முன்னாள் தலைவர் அஸ்ரப்பினால் உருவாக்கப்பட்ட டுழுவுருளு கம்பனியின் பதிவு தொடர்பிலும் சந்தேகம் உள்ளது. இதனை பசீர் சேகுதாவூத் தமது கேள்வியில் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, டுழுவுருளு பதிவு செய்யப்பட்டுள்ளதா? பதிவு செய்யப்பட்டிருந்தால் சட்டப்பூர்வமாக எந்நிறுவனத்தில் பதியப்பட்டுள்ளது? பதிவிலக்கம் என்ன? நிதியத்தின் யாப்பு அல்லது உபவிதி (டீலடயற) இருப்பின் அதன் ஒரு பிரதியைத் தரமுடியுமா? பதிவு செய்யப்படாவிட்டால் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் மரணத்தின் பின்னரான 16 வருடங்களிலும் இந்நிதியத்தை பதிவு செய்ய நீங்கள் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேட்டுள்ளார். ரவூப் ஹக்கீம் இச்சந்தேகங்களை தீர்த்து வைக்க வேண்டும். தீர்க்கா வேளையில் அவர் மீது காணப்படும் நம்பிக்கையீனங்கள் அதிகிரிக்கச் செய்வதமாகவும் அமையும். 

    1998ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான யுனிட்டி பில்டர்ஸ் பிரைவட் லிமிடட்டின் (Unity Builders (Pvt) Ltd) பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக இருந்தவர்கள், இருக்கின்றவர்களின் பெயர்கள், விலாசம் முதலானவை அடங்கிய விபரங்களையும், இதுவரை இக்கம்பனியால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் (Resolutions) பிரதிகளையும் தர முடியுமா? என்ற பசீர் சேகுதாவூத்தின் கேள்வி ஊடாக அவர் மு.காவின் சொத்துக்கள் பற்றிய பல தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். அல்லது தெரிந்து வைத்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது. 1998ஆம் ஆண்டில் காணப்பட்ட பணிப்பாளர் சபையில் திருகுதாளங்கள் செய்யப்;பட்டு மாற்றப்பட்டுள்ளதா என்று நினைக்க வைக்கின்றது. இதனால்தான் அவர் 1998ஆம் ஆண்டின் பணிப்பாளர் சபையையும், இன்றுள்ள பணிப்பாளர் சபையையும் கேட்கின்றார் என நினைக்கின்றேன். 1998ஆம் ஆண்டு என்பது முன்னாள் தலைவர் அஸ்ரப்பின் காலமாகும்.

    இதே வேளை, தற்போது கட்சியின் சொத்துக்கள் மூன்று நபர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன. இது உண்மையா? பொய்யா என்று கூட எம்மால் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. காரணம் மு.காவின் சொத்துக்கள் விடயத்தில் பல கேள்விகள் உள்ளன. அக்கேள்விகள் பற்றிய தெளிவினை ரவூப் ஹக்கீம் அளிக்கும் வரை இது போன்று பல கேள்விகள் அவரிடம் விரல் நீட்டலாம்.

    மு.காவின் சொத்துக்கள் குறித்து முன் வைக்கப்பட்டுள்ள கேள்விகளில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உண்மையை பேசுவதற்கு முன் வருதல் வேண்டும். தலைவரை பாதுகாக்க வேண்டும். அவரை பாதுகாத்தால்தான் கட்சியை பாதுகாக்கலாம் என்று போலியாகச் சொல்லி உண்மைகளை குழி தோண்டி புதைக்க முடியாது. மறு பக்கத்தில் பசீர் சேகுதாவூத் கேள்வி கேட்கின்றார். அவர் ஏன் முன்னர் கேட்கவில்லை என்று பேசாதிருக்கவும் முடியாது. ரவூப் ஹக்கீம், பசீர் சேகுதாவூத், ஹஸன்அலி ஆகியோர்களிடமும் உயர்பீட உறுப்பினர்கள் கேள்வியாகளை கேட்டு தெளிவு பெற வேண்டும். அதனை மக்களிடம் சொல்ல வேண்டும். பக்கம் சார்ந்தால் பிழைப்பு பறிபோய்விடுமென்று மறுமையில் குற்றவாளியாக நிற்காதீர்கள். ஒரு சமூகத்தை ஏமாற்றுவது மிகப் பெரிய பாவமாகும். சமூகப்பற்று இருந்தால்தான் ஈமான் இருக்கும். மு.காவின் உயர்பீட உறுப்பினர்களின் ஈமானுக்கான பரீட்சை ஆரம்பித்துள்ளது. ஆதலால், உயர்பீட உறுப்பினர்கள் யாரையும், காப்பாற்ற வேண்டும், பழியிட வேண்டுமென்பதற்கு அப்பால் உண்மைக்காக பேசுங்கள்.

    மேலும், மு.காவின் சொத்துக்கள் விடயத்தில் உண்மையை பேசாது போனால் நாளை அல்லாஹ் பிடிப்பான். அதிலிருந்து தப்ப முடியாது. மறுமையில் இலங்கையில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் இது பற்றி அல்லாஹ்விடம் முறையிடுவார்கள். மு.கா இலங்கை முஸ்லிம்களின் குரல் என்று சொல்லப்படுவதனால் இதனைச் சொல்லுகின்றேன். பசீர் சேகுதாவூத் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் கேள்விகளை கேட்கின்றார் என்று வெறுமனமே சொல்லிக் கொண்டிருக்காது உண்மைகளை தேடுதல் வேண்டும். உண்மையைக் கண்டறிவதும் ஒரு முஸ்லிமின் பணியாகும்.

    கட்சியின் சொத்துக்கள் குறித்து தனக்குள்ள சந்தேகங்களை கேள்வியாக தவிசாளர் பசீர் சேகுதாவூத் கேட்டுள்ளார். இக்கேள்விகள் குறித்து கட்சியின் செயலாளர் ஹஸன்அலியும் பேச வேண்டும். தங்களுக்கு தெரியாது. தலைவர் மறைத்து விட்டார் என்று சொல்லி தப்பிக்க முடியாது. தெரியாது என்று சொல்லிக் கொள்ளவா நீங்கள் பொறுப்பான பதவியில் இருந்தீர்கள்?

    கட்சியின் ஆரம்பம் முதல் இன்று வரையான வரலாற்றை தெளிவாக அறிந்து வைத்துள்ள ஹஸன்அலி தாருஸ்ஸலாம் பற்றி எனக்கு தெரியாது என்று சொல்லுவது கூட உண்மைகள் மறைக்கப்படுகின்றன என்று எண்ண வைக்கின்றது. எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லாது மக்களுக்கு உண்மைகளைச் சொல்லுதல் வேண்டும். 

    வெறுமனமே மக்களிடம், உயர்பீட உறுப்பினர்களிடம் ஒரு சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் தனது முடிந்து விட்டதென்று ஹஸன்அலி நினைக்கக் கூடாது. ஏதோ ஒரு காரணத்திற்காக நீங்கள் உண்மைகளை ஊமையாக்கி வைப்பீர்களாயின் முஸ்லிம் சமூகத்திற்காக கடந்த 30 வருடங்களாக நீங்கள் தியாகங்கள் உங்களை துரோகி என்று சொல்லிவிடும். 

    சத்தியத்தின் விலை இவ்வாறுதான் பலருக்கு அமைந்துள்ளது. இதனை ஹஸன்அலிக்கு மாத்திரம் என்று மற்றவர்கள் எண்ணி விடாதீர்கள். கட்சியின் மூத்த துணைத் தலைவர், பிரதித் தலைவர், பொருளாளர், அமைப்பளார், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் சொத்துக்களை கையாள்வதில் ஆவணங்களை கையாண்ட சட்டத்தரணிகள், முன்னாள் தலைவர் அஸ்ரப்பின் காலத்தில் பணிப்பாளர் சபையில் இருந்தவர்கள், (முன்னாள் அமைச்சர் பேரியல் அஸ்ரப் உட்பட)

    இவர்கள் மட்டுமன்றி கட்சியின் அனைத்து முக்கிய உறுப்பினர்களும் மு.காவின் சொத்துக்கள் பற்றி பேச வேண்டும். இவ்வாறு பேசும் போதுதான் உண்மைகள் வெளிவரும். இவர்கள் எல்லோரையும் விடவும் ரவூப் ஹக்கீம் கட்டாயம் பேச வேண்டும். தங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் விடைகளை கட்சியின் ஆதரவாளர்கள் எதிர் பார்க்கின்றார்கள். நீங்கள் அளிக்கும் விடை உங்கள் தலையில் உள்ள கிறீடத்தை நிரந்தரமாக்கவும், கீழே இறக்கவும் காரணமாக அமையும். அத்தோடு, முன் வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்று மௌனமே எனது சாணக்கியம் என்றோ, அரசியலில் பொறுமை வேண்டுமென்ற தத்துவத்தின் படியோ பேசாது போனால் நீங்கள் சம்பாதித்துள்ள சாணக்கியத் தலைவர் என்பதனை கேள்வியாக்கிவிடும்.

    நன்றி - விடிவெள்ளி 22.07.2016
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மக்கள் நீதிமன்றத்தில் ரவூப் ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top