• Latest News

    August 22, 2016

    தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டால்தான் இலக்குகளை அடைந்து கொள்ளலாம்

    சஹாப்தீன் -
    1990ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களினால் மறக்க முடியாததொரு ஆண்டாகும். இந்த ஆண்டில் முஸ்லிம்கள் தொடராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்கு முகங் கொடுத்தார்கள். சுமார் 26 வருடங்கள் கடந்த போதிலும் முஸ்லிம்களினால் 1990ஆம் ஆண்டில் எதிர் கொண்ட சோகங்கள் மறக்க முடியாததாகும். இது போன்றதொரு ஆண்டு மீண்டும் முஸ்லிம்குளுக்கு வந்து விடக் கூடாதென்பதே இலங்கை முஸ்லிம்களின் பிராத்தனையாக இருக்கின்றது.
    1989ஆம் ஆண்டு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸாவின் அரசாங்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த யுத்த நிறுத்தம் 1990ஆம் ஆண்டு ஜுன் மாதம் நடுப்பகுதியில் முறிவடைந்தது. இதன் பின்னர்தான் வடக்கு, கிழக்கில் முஸ்லிம்கள் பரவலாக விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டார்கள். முஸ்லிம்குளுக்கும், தமிழ் மக்களுக்குமிடையே நிரந்தரப் பகையை ஏற்படுத்த வேண்டுமென்பதில் பெரும் பேரினவாதிகள் செய்த சூழ்ச்சிகள் 1990ஆம் ஆண்டில் வெற்றியளித்து என்றுதான் சொல்ல வேண்டும். தமிழ் ஆயுதக் குழுக்களில் முஸ்லிம் இளைஞர்களும் இணைந்து போரடினார்கள். இதனால், தமிழ் ஆயுதக் குழுக்களின் போராட்டம் தமிழ் பேசும் மக்களுக்கான போராட்டமாகவே கருதப்பட்டது. ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்களின் மீது மேற்கொண்ட தாக்குதல்களினால் தமிழ் மக்களுக்கு மாத்திரம் உரித்தானதொரு போராட்டமாக முஸ்லிம்களினால் நோக்கப்பட்டது.
    1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி இரவு வேளையில் காத்தான்குடியில் மீரா ஜும்ஆப் பள்ளிவாசலிலும், ஹுஸைனிய்யா பள்ளிவசாலிலும் இஷா (இரவு நேரத்) தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஸ்லிம்களின் மீது சரமாரியாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி வேட்டிலும், குண்டுத் தாக்குதலிலும் 103 பேர் உயிர் இழந்தார்கள். 45 பேர் படுகாயமடைந்தார்கள்.
    முஸ்லிம்களிடையே காத்தான்குடி படுகொலைகளின் சோகங்கள் நீங்குவதற்கு முன்னதாக 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் 11ஆம் திகதி இரவு ஏறாவூரில் ஆற்றங்கரை, ஓட்டுப்பபள்ளி, புன்னைக் குடா வீதி, ஐயங்கேணி, மீராகேணி, சதாம் ஹுஸைன் ஆகிய கிராமங்களில் 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதற்கும் விடுதலைப் புலிகள்தான் காரணமாக இருந்தார்கள். சுமார் 50இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். இவர்களில் 39பேர் மரணமடைந்தார்கள். மொத்தமாக 160 பேர் ஏறாவூரில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
    1990ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் திகதி வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் இரவோடு இரவாக விடுதலைப் புலிகளினால் உடுத்து உடைகளுடன் விரப்பட்டார்கள். வடமாகாணத்தில் சுமார் 25ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சம் பேர் தமது சொந்த மண்ணிலிருந்து கண்ணீருடன் வெளியேற்றப்பட்டவர்கள் புத்தளம், கொழும்பு, அம்பாரை, குருநாகல் மாவட்டங்களிலும் வேறு மாவட்டங்களிலும் அகதிகளாக தஞ்சமடைந்தார்கள்.
    முஸ்லிம்களின் மீது 1990ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை இவைகளுடன் முடியவில்லை. அழிஞ்சிப்பொத்தனை எனும் இடத்தில் 77 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அம்பாலாந்துறையில் 68 முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். மூதூரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அம்பாரை மாவட்டத்தில் வயல்வெளிகளில் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டார்கள் அக்கரைப்பற்று, ஓலுவில், பொத்துவில்  ஆகிய இடங்களிலும் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டார்கள்.
    இவ்வாறு முஸ்லிம்கள் 1990ஆம் ஆண்டு மிகவும் மோசமான வகையில் படுகொலை செய்யப்பட்டார்கள். இப்படுகொலைகளை பெரும் பேரினவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் பல இடங்களில் தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்குமிடையே இன மோதல்கள் ஏற்பட்டன. இதனால், இழப்புக்களை இரு சமூகங்களும் சந்தித்துக் கொண்டன. முஸ்லிம் கிராமத்திற்கு ஒரு தமிழரினால் செல்ல முடியாது. தமிழ் கிராமத்திற்கு ஒரு முஸ்லிமால் செல்ல முடியாது. மாலை 04 மணிக்கு பிறகு எங்கும் செல்ல முடியாது. தமிழ் - முஸ்லிம் கிராமங்களுக்கிடையே காணப்பட்ட பாரம்பரிய உறவுகள் முற்றாக சிதைவடைந்தன. தமிழர்கள் முஸ்லிம்களையும், முஸ்லிம்கள் தமிழர்களையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலை ஏற்பட்டது. இன்றும் கூட 1990ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட படுகொலைகளும், இனமோதல்களும் இரு சமூகங்களால் மறக்க முடியாத நிகழ்வுகளாக இருக்கின்றன. இதனால், அரசியல் தீர்வு விடயங்களிலும் ஏனைய விவகாரங்களிலும் ஒற்றுமையுடன் செயற்படுவதற்கு ஒத்துழைக்க முடியாத நிலையில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் இருந்து கொண்டிருப்பது மனத்திற்கு பாரமானதாகும். இதுதான் சிங்களப் பேரினவாதம் பெற்றுக் வெற்றியாகும். இந்த வெற்றி நிரந்தரமாக இருக்கக் கூடாது.
    வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை தமது போராட்ட வரலாற்றில் ஒரு தும்பியல் நிகழ்வு என்று விடுதலைப் புலிகள் பின் நாட்களில் கவலை தெரிவித்தார்கள். ஆயினும் காத்தான்குடி, ஏறாவூர், அழிஞ்சிப் பொத்தானை மற்றும் பிற இடங்களில் நடைபெற்ற படுகொலைகளுக்கு மன்னிப்புக் கோரவில்லை. இத்தனை படுகொலைகள் நடைபெற்ற நிலையிலும் தமிழ், முஸ்லிம் உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொண்டார். பின்னர் இவ்வுடன்படிக்கை கூட கடும் விமர்சனத்திற்கு உட்பட்டது. ரவூப் ஹக்கீம் இதில் சாணக்கியத்துடன் நடந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
    1990ஆம் ஆண்டு படுகொலைகள் நடைபெற்ற தினங்களை; முஸ்லிம்கள் ஸுஹதாக்கள் தினம் என்று வருடா வருடம் அனுஸ்டித்து வருகின்றார்கள். இத்தினத்தில் துஆப் பிராத்தனைகளில் ஈடுபடும் முஸ்லிம்கள் இது போன்றதொரு ஆண்டை மீண்டும் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தி விடாதே என்று இறைவனை வேண்டிக் கொள்கின்றார்கள்.
    தமிழர்களும், முஸ்லிம்களும் 1990ஆம் ஆண்டிலும், அதற்குப் பின்னரும் நடைபெற்ற மோதல்கள், படுகொலைகள், சொத்து அழிப்புக்கள் போன்றவற்றில் படிப்பினை பெறல் வேண்டும். மிக நீண்டகாலமாக பாதுகாத்து வந்த தமிழ், முஸ்லிம் உறவுகள் மிகவும் மோசமாக 1990ஆம் ஆண்டுகளின் பின்னர் பாதிக்கப்பட்டாலும் தற்போது அவை படிப்படியாக கட்டி எழுப்பப்பட்டு வருகின்றது. இதனை சீர்குழைப்பதற்கு பெரும் பேரினவாதிகளும். பௌத்த இனவாதிகளும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தில் உள்ள இனவாதிகளும், பேரினவாதிகளின் ஏஜன்டுகளும் முயற்சிகளை எடுத்துக் கொண்டு வருகின்றார்கள். இவர்கள் புதிய அரசியல் யாப்பு, இனப் பிரச்சினைக்கான தீர்வு ஆகிய விடயங்களில் தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தாளுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள். இதனை தமிழ், முஸ்லிம் அரசியலல்வாதிகள் புரிந்து செயற்பட வேண்டும். ஆனால், இன்று தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் ஆளையாள் ஏமாற்றும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
    1990ஆம் ஆண்டுகளில் இடம்;பெற்ற படுகொலைகளும், இனமோதல்களும் தமிழ், முஸ்லிம் சமூகங்களில் இனி ஏற்படாது என்று நம்பிக் கொண்டாலும், உறவுகளில் பாதிப்பு ஏற்பாடாது என்று கருதிக் கொண்டாலும், அரசியல் ரீதியாக இரண்டு சமூகங்களும் தனித்தனி வழிகளில் செல்லாது, இரண்டு சமூகங்களின் உரிமைகளையும் பாதகாத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசியல் யாப்பு மாற்றம், இனப் பிரச்சினைக்கான தீர்வு ஆகிய விடயங்களில் இரு சமூகங்கங்களும் உளத் தூய்மையுடன் கலந்து பேசுதல் வேண்டும். அதன் பின்னர் ஒரு பொது முடிவுக்கு வருதல் வேண்டும். தமிழர்களும், முஸ்லிம்களும் ஆகிய நாங்கள் இவ்வாறுதான் தீர்வுகளை வேண்டுகின்றோம் என்று கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட வேண்டும்.  இவ்விதமாக  செயற்படுவதற்கு முன் வந்தால்தான் 1990ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளைக் கடந்து நம்பிக்கைகளை வளர்த்துக் கொள்ள முடியும்.
    தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்படுவதன் மூலம்தான் தங்களது இலக்குகளை அடைந்து கொள்ளலாம். இதற்கு மாறாக சர்வதேச நாடுகளிடம் எங்களின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு உதவுங்கள் என்று எவ்வளவுதான் வேண்டிக் கொண்டாலும் அந்நாடுகள் தமது வல்லாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கே முன்னுரிமை அளிக்கும். இதற்கு அரசாங்கம் ஒத்துழைக்குமாயின் தமிழர்களின் பிரச்சினைகளை அந்நாடுகள் மறந்துவிடும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியின் போது அமெரிக்கா தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்று பிரயோகித்த அழுத்தங்களை விடவும் குறைந்த அழுத்தங்களையே அரசாங்கத்திற்கு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இந்த உண்மை நிலையை கருத்திற் கொள்ளுதல் வேண்டும்.
    தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்த வடக்கு, கிழக்கு வேண்டும். இதில் விட்டுக் கொடுப்புக்களில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கின்றது. வடக்கும், கிழக்கும் இணைவதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூட்டு எதிர்க்கட்சிகளின் தலைவர் தினேஸ்குணவர்த்தன தெரிவித்துள்ளார். முஸ்லிம் கட்சிகள் வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் தங்களது நிலைப்பாடு யாதென்று உத்தியோகபூர்வமாக சொல்லாது இருக்கின்றன. முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் வடக்கும், கிழக்கும் பிரிந்திருக்க வேண்டுமென்று கூறுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஒரு சாரார் இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு அதிகாரங்கள் தரப்பட வேண்டுமென்று தெரிவிக்கின்றார்கள். அதாவது இவர்கள் தென்கிழக்கு அலகு வேண்டுமென்று (கரையோர மாவட்டத்தை) கேட்கின்றார்கள். முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளருமாகிய எம்.ரி.ஹஸன்அலி நிலத் தொடர்பற்ற அதிகார அலகு முஸ்லிம்களுக்கு வேண்டுமென்று நீண்ட காலமாக தெரிவித்துக் கொண்டிருக்கின்றார். இதுதான் மர்ஹும் அஸ்ரப்பின் கோட்பாடு என்று தெரிவிக்கின்றார். இக்கருத்துக்களுக்கு இடையே அரசாங்கம் வடக்கு, கிழக்கு தொடர்பில் தமது நிலைப்பாடு என்னவென்று வெளிப்படுத்தவில்லை. ஆயினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அரசாங்கம் நல்ல தீர்வினை முன் வைக்கும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றன. ஆக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், ஏனைய தமிழ்க் கட்சிகளும்தான் இணைந்த வடக்கு, கிழக்கு வேண்டுமென்று வெளிப்படையாக பேசிக் கொண்டிருக்கின்றன.
    ஆகவே, தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக கருத்து மோதல்களில் ஈடுபடாது தங்களுக்குள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருதல் வேண்டும். முஸ்லிம் கட்சிகள் குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு, கிழக்கு மற்றும் புதிய யாப்பு விடயத்தில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இது வரை காலமும் அரசாங்கத்தின் தாளத்திற்கே ஆடிக் கொண்டிருக்கின்றது. இதனை கடந்த மஹிந்தவின் ஆட்சியின் போதும், இன்றைய ஆட்சியின் போதும் மிகத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். அக்கட்சி 18வது திருத்தச் சட்டத்திற்கு கைகளை உயர்த்திக் கொண்டதனைப் போன்று அரசாங்கத்தின் திட்டத்திற்கு கைகளை உயர்த்த மாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதத்தையும் அக்கட்சியிடம் இருக்காது. இதே நிலைப்பாட்டில்தான் ஏனைய முஸ்லிம் கட்சிகளும் இருக்கும் என்பதும் தெளிவானதாகும்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தமிழர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டால்தான் இலக்குகளை அடைந்து கொள்ளலாம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top